படம்: சாத்தான் தி டார்க்
நடிப்பு : எஃப் ஜே, அயிரா மோனா பெட்ரி, சாந்தினி தமிழரசன்
தயாரிப்பு: எட்வர்ட்
இசை :அஸ்வின் கிருஷ்ணா
ஒளிப்பதிவு : பாலா ஜி ராமசாமி
இயக்கம்: மணிகண்டன் ராமலிங்கம்
பி ஆர் ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சாத்தான் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு அமானுஷ்ய மோதல் தான் ‘சாத்தான் தி டார்க்’ இப்படத்தின் கதை என்ன என்று பார்த்தால், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில்,இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பிய போது அதன் தாக்கத்தைப் பெற்று, அந்த மதத்தைப் போலவே அவர்களிடமிருந்து நம் நாட்டு மக்கள் வேறொன்றையும் கற்றுக் கொண்டார்கள். ஆங்கிலேயர்கள் இறைவனுக்கு எதிராக உள்ள சாத்தான் வழிபாட்டையும் இங்கே பரவ விட்டு சாத்தானுக்கு நரபலி கொடுத்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மக்கள் ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளை தாண்டி மனிதர்களையும் பலி கொடுக்கிறார்கள். சாத்தானுக்கு மனித உயிர்களைப் பலி கொடுக்கும் அளவுக்குத் துணிந்தவர்கள்.அம்மக்கள் வசிக்கும் கிராமத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மர்ம மரணங்கள் நடக்கின்றன.அவற்றை விசாரிக்க காவல்துறை வருகிறது.அவர்களுடைய விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின்றன.இன்னொரு பக்கம் கதாநாயகனும் இந்த விசாரணைக்குள் வந்துவிடுகிற நிகழ்வுகளும் நடக்கின்றன.அவை என்னென்ன..என்பதும் அங்கு தொடரும் மரணங்களைத் தடுத்து நிறுத்த காவல்துறையும், கதாநாயகனும் என்னவெல்லாம் செய்கிறார்கள்? என்பதையும் சொல்லும் படம்தான் ‘சாத்தான் தி டார்க்’
நாயகனாக பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஃப்.ஜெ, தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
பள்ளி மாணவியாக கதாநாயகியாக நடித்திருக்கும் ஐரா, ஆபத்தான அம்மாவிடம் சிக்கிக்கொண்டு பரிதவிக்கும் காட்சிகளில் ரசிகர்களை பதற வைத்து விடுகிறார்.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் ஐராவின் அம்மாவாக நடித்திருக்கும் மோன பத்ரே. அவர் .வினோதமாக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது என்று மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து நம்மையும் பயமுறுத்தியிருக்கிறார்.
இறுதியில் வரும் சாந்தினி தமிழரசனுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதற்கு அவர் சரியாகப் பொருந்தியிருப்பது அவருக்கும் படத்துக்கும் பலம்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர், ஊர் மக்கள் என பலர் புதுமுகங்களாக இருந்தாலும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி, ஒரு வீட்டை வைத்தே பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி விடுகிறார்.
இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை மிக மிக முக்கியம்.அதை உணர்ந்து இசைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஷ்வின் கிருஷ்ணா.
எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டன் ராமலிங்கம், கடவுள் நம்பிக்கைக்கும் சாத்தான் வழிபாட்டிற்கும் இடையிலான மோதலை மத மோதலாக மாற்றாமல், அமானுஷ்யத் த்ரில்லராக கதையை உருவாக்க முயன்றுள்ளார். இறுதியாக கிளைமாக்ஸ் நெருங்கும் போது, மர்ம மரணங்களின் பின்னணியும், அதை தடுத்து நிறுத்துவதற்கான வழியையும் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம், புரியும்படி விவரித்தாலும், அதன் முழுமையான பின்னணி இரண்டாம் பாகத்தில் தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘சாத்தான் தி டார்க்’’ அனைவரையும் பயமுத்தும் படம்.
ரேட்டிங் 3/5