CHENNAI:
பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தன் தயாரித்திருக்கும் ஹேப்பி ராஜ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மரியா ராஜா இளஞ்செழியன். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜார்ஜ் மரியான்), ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ், கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, மகேஷ் தேவி, பிரார்த்தனா நாதன், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனது உடலமைப்பு மற்றவர்கள் கேலி செய்யும் விதத்தில் இருந்தாலும் தன் மகன் ஜி.வி.பிரகாஷ், அழகாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் ஜார்ஜ் மரியன், அவரை தீராத பாசத்துடன் வளர்கிறார். ஆனால், உருவ கேலிக்கு ஆளாகும் தன் தந்தையால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக நினைக்கும், ஜி.வி.பிரகாஷ், அவரை விட்டு விலகி, தனது அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறார். பெங்களூரில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் ஜி.வி.பிரகாஷ், அங்கு நாயகி ஸ்ரீ கெளரி பிரியாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்த சூழலில் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகியும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகனும் காதலித்தால்,தகுதியைக் காரணம் சொல்லி பெண்வீட்டார் அந்தக் காதலை ஏற்கமாட்டார்கள் அல்லவா? இந்தப்படத்தில் தகுதியைத் தாண்டி உருவகேலி எனும் சிக்கலை முன்னிலைப்படுத்தி காதல் திருமணத்துக்குத் தடை வருகிறது. அதன்பின் அந்தத் திருமணத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று போராடுகிறார் ஜி.வி.பிரகாஷ். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்லி இருக்கும் படம்தான் ‘ஹேப்பி ராஜ்’.
நாயகன் ஜி.வி.பிரகாஷின் தோற்றத்திலேயே மாற்றம் காட்டி இரசிக்க வைத்திருக்கிறார்.ஜாலியான இளைஞராகச் சுற்றித்திரிந்து அனைவரையும் ஈர்ப்பது அவருக்குக் கைவந்தகலை. இந்தப்படத்திலும் அதைச் சரியாகச் செய்திருக்கிறார். குறிப்பாக, அப்பாவுடன் உள்ள உள்ளார்ந்த போராட்டங்களையும், பின்னர் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்களையும் அவர் மிகுந்த நம்பகத்தன்மையுடன் எடுத்துச் செல்கிறார்.
நாயகியாக ஸ்ரீ கெளரி பிரியா நடித்திருக்கிறார். ஒரு கதாநாயகிக்கு என்னென்ன வேலையெல்லாம் இருக்குமோ அவை எல்லாம் இந்தப்படத்தில் ஸ்ரீகெளரிபிரியாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.அந்த வேலையைச் சரியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் இந்தப்படத்தில் இன்னொரு நாயகன் போல் இருக்கிறார்.மிக முக்கியமான இந்த வேடத்துக்கு மிகப்பொருத்தமான நடிகராக இவர் கிடைத்திருக்கிறார்.அவரும் ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் அப்பாஸ், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகவும் செய்திருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், வழக்கமான கதாபாத்திரத்தில், சில வழக்கத்திற்கு மாறான காட்சிகளில் நடித்து அலப்பறை செய்திருக்கிறார். மதுரை முத்து,அதிர்ச்சி மதன் ஆகியோருக்கு ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கதாநாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், ஜி.வி.பிரகாஷின் கல்லூரிக் காதலி பிரார்த்தனா நாதன் ஆகியோரும் அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் வழங்கியுள்ள பாடல்கள் கதையின் ஓட்டத்துடன் இணைந்து இனிமையாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்ச்சிகளை உயர்த்துகிறது.
ஒளிப்பதிவாளர் மதன் கிரிஸ்டோபர், கிராமப்புற மற்றும் நகரப்புற காட்சிகளை கண்கவர் வகையில் பதிவு செய்துள்ளார்.
தந்தை – மகன் இடையிலான புரிதல் மற்றும் உணர்வுப்பூர்வமான உறவை நகைச்சுவை பின்னணியில் சொல்லியிருக்கும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், சிறுவயதில் ஹீரோவாக தெரியும் அப்பா, வளர்ந்தபின் புரிதல் குறைவால் எப்படி மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்படுகிறார் என்பதை சிரிப்பும் உணர்ச்சியும் கலந்து சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், ’ஹேப்பி ராஜ்’ அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.