’3 பி.ஹெச்.கே’ திரைப்பட விமர்சனம்!

116

 

 

CHENNAI:

படம் : 3 பிஎச் கே (3BHK)

நடிப்பு: சரத்குமார், சித்தார்த், தேவயானி,  யோகி பாபு,  மீத்தா ரகுநாத், சைத்ரா

தயாரிப்பு: அருண் விஷ்வா

இசை: அம்ரித் ராம்நாத்

ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன். பி, ஜித்தின்

இயக்கம்: ஶ்ரீ கணேஷ்.

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

 

தனியார் நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் வாசு தேவனுக்கு (சரத்குமார்) சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது லட்சியம். அதேசமயம் மனைவி மகன், மகள் ஆகியோரையும் காப்பாற்ற வேண்டிய கடமை அவரது தோள் மீது பாரமாக இருக்கிறது. குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு வீடு வாங்கும் கனவை தள்ளி தள்ளி போடுகிறார். மகன் சித்தார்த் கல்வியில் பெரிய அளவில் தேர்ச்சி பெறாமல் தந்தையின் மனதை புண்படுத்துகிறார். மகள் மீத்தா படிப்பில் நம்பர் ஒன் என்றாலும் அவருக்கு திடீரென்று திருமணம் நிச்சயமாகிறது. வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த பணம்  கல்யாண செலவுக்கு சென்று விடுகிறது. இந்நிலையில் வாசுதேவன் வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார். வாசுதேவன்  வீடு வாங்கும் லட்சியம் என்னவானது? மகன்,  மகள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதற்கெல்லாம்  உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதில் அளிக்கிறது 3BHK.

கம்ப்யூட்டர் அடி எடுத்து வைக்கும் 90 கால கட்டத்திலிருந்து  படம் தொடங்குகிறது. தனியார் அலுவலகத்தில் கணக்காளராக  வேலை செய்யும் வாசுதேவன் அதாவது சரத்குமார்  தனது லட்சியமாக வீடு வாங்கும் திட்டத்திற்காக சிறுக சிறுக பணம் சேர்ப்பதும், குடும்பத்துடன் சென்று  எந்த வீடு வாங்குவது என்று பார்ப்பதும் பிறகு நடையை கட்டுவதுமாக காட்சிகள் குடும்ப செண்டிமெண்ட்களுடன் நகர்வது சுவாரசியம்.

சேர்த்து வைத்த பணத்தில் எப்படியாவது வீடு வாங்கி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று சரத்குமார் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் படுத்து விடுவதும் அவரது சிகிச்சைக்காக சேர்த்து வைத்த பணம் செலவழிந்து வீடு வாங்கும் கனவுக்கு  முட்டு கட்டை போடுவது ஒரு தடைக்கல், ஒரு வழியாக சித்தார்த்துக்கு வீடு வாங்குவதற்காக வங்கியில் லோன் கிடைத்த நிலையில் திடீரென்று தங்கையின் திருமணம் வந்து  வீடு வாங்குவது முக்கியமா? தங்கைக்கு திருமணம் செய்து வைப்பது முக்கியமா என்ற ஒரு கேள்வி  எழுப்பி அவர்களை திணறடிக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.

பட்ட காலிலேயே படும், கெட்ட குடிடயே கெடும்  என்பதற்கு ஏற்ப சரத்குமாரின் குடும்பம் வீடு வாங்குவதற்காக படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது , இந்த கனவு சராசரி மனிதர்களின்  அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பாகவே அமைந்திருப்பதால் இதில் வரும் காட்சிகளில் எந்த ஒரு காட்சியாவது ஏதாவது ஒரு குடும்பத்தின் மனதை , “ஆமா இல்ல, இப்படி நம்ம குடும்பத்துல கூட நடந்தது” என்று எண்ண வைக்கும்.

ஆஜானபாகு தோற்றம் கொண்ட சரத்குமார் முழுக்க முழுக்க ஒரு சராசரி குடும்பத் தலைவனாக அமைதியின் பிறப்பிடமாக வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி கதையை தன் தோள் மீது சுமந்திருக்கிறார்.

வீடு வாங்குவதற்காக சேர்த்து வைத்த பணம் தன்னுடைய இதய  அறுவை சிகிச்சைக்காக செலவாகிவிட்டதே என்று எண்ணி வருந்தும் சரத்தின்  அந்த கண்ணோரத்தில்  சரசரவென்று கண்ணீர் வழிந்தோடும் அந்த ஒரு காட்சியே அவரை   நடிப்பின் உச்சாணி கொம்பில்  ஏற்றிவிடுகிறது.

பள்ளிப் பருவம் கல்லூரி பருவம் என்று தன்னை உருமாற்றிக்கொண்டு நடித்திருக்கும் சித்தார்த் இதுவரை இல்லாத நடிப்பு மைல்களை தொட்டிருக்கிறார்.“எனக்கு படிப்பு வராது நான் வேலைக்கு போகிறேன்” என்று தனது தந்தை சரத்திடம் சித்தார்த் கூறுவதும் ‘படித்தால் தான் பியூட்சர் நல்லா இருக்கும்”  என்று சித்தார்த்துக்கு சரத்குமார் அட்வைஸ் தருவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் தந்தை மகனுக்கு இடையே நடக்கும் அன்றாட போராட்டம்தான்.

சரத் மனைவியாக தேவயானி நடித்திருக்கிறார். வசனம் அதிகம் இல்லை என்றாலும் முக பாவத்திலேயே தனது நடிப்பை காட்டி ஸ்கோர் செய்திருக்கிறார்.

சரத்குமார் மகளாக வரும் மீத்தா தன் திருமண வாழ்க்கை பங்கமாகிப் போய்விட்டது என்று  சொல்லி கதறும் போது அரங்கை அமைதியாக்குகிறார். சித்தார்த் ஜோடியாக வரும் சைத்ரா சர்ப்ரைஸ் பாத்திரம் ஏற்றிருக்கிறார்.

துப்பாக்கி வைத்துக் கொண்டு சுட்டு தள்ளும்  எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷா  என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு குடும்ப கதையை சொல்லி விசு இல்லாத ஒரு குறையை தீர்த்திருக்கிறார். சம்சாரம் அது மின்சாரம் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு சரியான ஒரு இயக்குனர் கிடைத்துவிட்டார் என்று கூட சொல்லலாம்.  அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் 3 bhk படத்தில் வடிவமைத்து குடும்ப இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தை தயாரித்த அருண் விஷ்வா 3பிஎச்கே படத்தை தயாரித்திருக்கிறார். நெகிழ்ச்சியான ஒரு குடும்ப கதையை தயாரிக்கும் துணிச்சல் கொண்ட  அருண் விஷ்வாவுக்கு பாராட்டுக்கள் குவியும்.

அம்ரித் ராம்நாத் இசை கதைக்கு ஏற்ப கை கொடுத்திருக்கிறது.

தினேஷ் கிருஷ்ணன். பி, ஜித்தின் இருவரின் ஒளிப்பதிவு பிரேம்களுக்குள் வேறுபாடு காட்டாமல் ஒன்றிப்போயிருக்கிறது

திரைக்கதையில் இன்னும் கூட வேகம் கூட்டி இருந்தால் படம் விறுவிறுவென்று நகர்ந்திருக்கும் ஆனால் அதில் அந்த குடும்பச் சுவையை சுவைத்திருக்க முடியாது.

 

ரேட்டிங் 3/5