CHENNAI:
நடிகர்கள்: கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவன்யா, ரேகா நாயர், பார்வதி, மற்றும் ஜீவா ரவி
ஒளிப்பதிவு: ஸ்ரீநிவாசன் தேவராஜ்
இசை: விபின் பாஸ்கர்
தயாரிப்பு நிறுவனம்: ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்
தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர்.
எழுத்து & இயக்கம்: பவன்குமார்,
ஜீ5 தளத்தில் ஸ்டிரீமிங் ஆகிறது.
பெரிய ஹீரோவாக வரும் சூரஜ் (கண்ணா ரவி), தான் நடிக்கும் ஒரு படம் படுதோல்வி அடைகிறது. முதல் நாள் முதல் காட்சியிலேயே அப்படம் மிகப்பெரும் விமர்சனத்திற்குள் உள்ளாக்கப்பட்டு, தோல்வியடைகிறது. இதனால் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார் சூரஜ். இதற்குக் காரணம், சூரஜ் படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் படத்தின் கதையில் இடையூறு செய்வதால் இந்த தோல்வி வருகிறது என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய இயக்குனர் ஒருவர் சூரஜ்ஜிடம் கதை கூற வருகிறார். வேண்டா வெறுப்பாக கதை கேட்க ஆரம்பிக்கும் சூரஜ், இப்படம் ஒரு உண்மை சம்பவம் என்றும், படத்தின் ஹீரோ ஒரு போலீஸ் ஆபீசர் என்றும் கூறுகிறார் அந்த இயக்குனர். கதையை உடனே ஓகே சொல்லிவிடுகிறார் சூரஜ். கதைக்குள் படம் நகர ஆரம்பிக்கிறது.
கதையின் ஹீரோவாக அருண்மொழி வர்மன் (கண்ணா ரவி). இவரின் மனைவியாக வரும் ஷ்ரவ்நிதாவிற்கும் போலீஸ் உயரதிகாரியான ஒருவருக்கு மட்டுமே தெரியும் அருண்மொழி வர்மன் ஒரு அண்டர்கவர் போலீஸ் என்று. முடிக்க முடியாத பிரபல ரெளடிகளை அருண்மொழி வர்மன் மூலமாக என்கெளண்டர் செய்வதற்காக உயரதிகாரி இவரை வைத்திருக்கிறார்.
வட சென்னையில் பிரபல ரெளடி ஒருவரை என்கெளண்டர் செய்த பின்பு, சிறுவயதில் இருந்தே பலரை கொன்று, தற்போது ஊர் மக்களால் பெரும் வள்ளலாக உயர்ந்து நிற்பவரான சஞ்சீவை என்கெளண்டர் செய்ய அடுத்த அசைய்ன்மெண்ட் அருண் மொழி வர்மனுக்குக் கொடுக்கப்படுகிறது.
அதற்காக சஞ்சீவை வேவு பார்ப்பதற்காக அவர் கிராமத்திற்குச் செல்கிறார் அருண்மொழி வர்மன். அங்கு சென்ற பின்பு தான் தெரிகிறது தனது கல்லூரி எக்ஸ் காதலியான வினுஷா தேவியின் கணவர் தான் தான் என்கெளண்டர் செய்ய வந்த சஞ்சீவ் என்று. இதனால் என்ன செய்வதென்று திணறுகிறார் அருண் மொழி வர்மன். அதற்குப் பிறகு அருண்மொழி வர்மன் என்ன முடிவு எடுத்தார்.? சூரஜ்ஜுக்கு இப்படம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் மீதமிருக்கும் தொடர் பதில் சொல்கிறது.
நடிகர் என்பதால் பலவித வேடங்கள் போட கூடிய வாய்ப்பு இந்த தொடரில் கண்ணா ரவிக்கு கிடைத்திருக்கிறது. போலீஸ், பிச்சைக்காரர், சமையல்காரர் உள்ளிட்ட அனைத்து கெட்டப்புகளிலும் கச்சிதமாக தன்னை பொறுத்திக்கொள்ளும் கண்ணா ரவி, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். கடமையா ? அல்லது மனசாட்சியா ? என்று குழம்பும் இடத்தில் தனது தடுமாற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், காதலை வெளிப்படுத்தும் இடத்திலும் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஆதிநாதன் என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் சஞ்சீவ், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரம் என்றாலும் தனது அளவான நடிப்பு மூலம் தன் கதாபாத்திரம் மீது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா என பெண் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து கவர்கிறார்கள்.
ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னனி இசை மற்றும் சூரஜ் கவியின் படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்களின் பணி தொடருக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பவன் குமார், வித்தியாசமான கதை சொல்லல் மூலம் புதுவிதமான ஆக்ஷன் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடரை கொடுத்திருக்கிறார்.
அயலி, ஐந்தாம் வேதம் என தரமான வெப் சீரிஸ்களை வழங்கி வரும் ZEE5 ஒரிஜினல் அந்த பட்டியலில் இன்னொரு வைரத்தை பாதிக்கும்படியான வேடுவன் வெப் சீரிசை வழங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட கதைகளை தீர்க்கமாக முடிவு செய்து தயாரித்தளிக்கும் zee5 தலைவர் ( south) கவுசிக்கின் பணி பாராட்டுக்குரியது.
ரேட்டிங் 3/5