CHENNAI:
சிவராமன் அவர்களின் இயக்கத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் வில் (உயில்).
செளரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். Foot Steps Production நிறுவனம் தயாரித்திருக்கிறது. டி எஸ் பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இறுதியில் அந்த பெண் அலேக்யாவை கண்டுபிடிக்கிறார் விக்ராந்த். அந்த உயில் எப்படி அலேக்யா பெயருக்கு எழுதப்பட்டது.? அலேக்யா யார் .? என்பது குறித்து “வில்'(உயில்) படம் பார்த்தால் விடை கிடைக்கும்.
நீதிபதியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இதுவரை சினிமாவில் பார்த்திராத நீதிமன்ற காட்சிகள் என்பதால், சோனியா அகர்வாலின் ஒவ்வொரு அசைவுகளும் உண்மையான நீதிபதியை பிரதிபலிப்பது போல் உள்ளது.
கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அலக்கியா, சாதாரண முகமாக இருந்தாலும் பலவித உணர்வுகளை தனது கண்கள் மூலமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். தந்தையை காப்பாற்ற போராடும் அவரது வாழ்க்கை திசை மாறுவது, அதை எதிர்கொள்வது என்று அழுத்தமான கதாபாத்திரத்திற்கு தனது அளவான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விக்ராந்த், சிறப்பு தோற்றம் போல் இருந்தாலும், படம் முழுவதும் பயணித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
தொழிலதிபர், அவரது மகன்கள் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் புதியவர்களாக இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை தனித்து நிற்கவில்லை என்றாலும் கதைக்கு ஏற்ப பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் கேமரா காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறது. நீதிமன்ற காட்சிகளை எதார்த்தமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாடல் காட்சியை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
விறுவிறுப்பாக பயணிக்க வேண்டிய கதை என்றாலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்துவதில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.தினேஷ்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சிவராமன், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். கதையை இன்னும் அழுத்தமாகவும் ஆழமாகவும் இயக்குனர் கூறியிருந்திருக்கலாம். பரபரவென சென்ற முதல் பாதி , சட்டென வேகம் குறைந்து சென்றுவிட்டது இரண்டாம் பாதியில். கருக்கலைப்பு, குழந்தையில்லாமல் பெற்றோர்கள் படும் இன்னல்கள் என இரண்டுதான் மூலக்காரணி என்றாலும், அதை அழுத்தமாக கூறாமல் சென்றிருக்கிறார் இயக்குனர்.