
படம்: வித் லவ் (With Love)
நடிப்பு: அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன் , பருத்திவீரன் சரவணன், ஹரிஷ் குமார் , காவ்யா அனில்
சச்சின் நாச்சியப்பன்
சாச்சனா,, ஆர் ஜே ஆனந்தி,
டிம்பிள் கண்ணா,
சித்தார்த்
தயாரிப்பு:சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான்,
இசை: ஷான் ரோல்ட்
ஒளிப்பதிவு: ஷிரியாஸ் கிருஷ்ணா
இயக்கம்: மதன்
பி ஆர் ஓ: யுவராஜ்.
ஒவ்வொருவரின் காதல் உணர்வுகளை மையப்படுத்தி வெளி வந்த திரைப்படங்கள் எந்நாளும் உயிர்ப்புடன் இருப்பவை. ஒவ்வொரு மனிதனும் அந்த உணர்வைக் கடக்காமல் வந்திருக்க முடியாது.அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ‘வித் லவ்’.
சென்னையில் பணிபுரியும் நாயகன் அபிஷன் ஜீவிந்திற்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அக்கா ஆர்.ஜே.ஆனந்தி பெண் பார்க்கிறார். அபிஷன் ஜீவந்திடம் பெண்ணைப் பற்றி எதுவும் சொல்லாமல் பெண்ணை சந்திக்குமாறு சொல்கிறார்.
அவர் சொன்னபடி அனஸ்வரா ராஜனை அபிஷன் ஜீவிந்த் சந்திக்கிறார். தன்னை பற்றிய விவரங்களை அனஸ்வரா ராஜனிடம் பேசும்போது ஒரே பள்ளியில் இருவரும் படித்தவர்கள் என அபிஷன் ஜீவிந்திற்கு தெரிய வருகிறது. அப்போது தங்களது முதல் காதல் மற்றும் அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது அனஸ்வரா ராஜானுக்கு தோன்றும் ஒரு யோசனை மூலம், இருவரும் இணைந்து தங்களது முதல் காதலை தேடிச் செல்கிறார்கள். இறுதியில் தங்களது முதல் பள்ளிப்பருவ காதலை தேடி செல்லும் அபிஷன் ஜீவிந்தும் ,அனஸ்வரா ராஜனும் இணைந்து திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார்ர்களா? இல்லையா ?என்பதை சொல்லும் ஒரு மாறுபட்ட படம்தான் ‘வித் லவ்’.
‘டூரிஸ்ட் பேமிலி ’என்கிற தன் முதல் படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குநராக விளங்கிக் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த் இதில் சத்தியசீலன் என்கிற சத்யாவாக நடித்துள்ளார். பள்ளி மாணவன், திருமண வயது இளைஞன் ஆகிய இருவித தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது.இரண்டிலும் தோற்றம், உடல்மொழி, நடிப்பு ஆகிய எல்லாவற்றிலும் பொருத்தமாக இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், அழகிலும் நடிப்பிலும் அனைவரையும் ஈர்க்கிறார்.அவருடைய பாத்திரப்படைப்பு நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய வண்ணம் அமைந்திருக்கிறது.அவரும் அதை உணர்ந்து நடித்து பெரும் வரவேற்பைப் பெறுகிறார்.
நாயகன் நாயகியின் முதல்காதலர்களாக நடித்திருக்கும் காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன் ஆகியோரின் பாத்திரங்கள் கதைக்கருவின் அடித்தளமாக அமைந்திருக்கிறது.அவர்களும் அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகனின் அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி, அப்பாவாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சித்தார்த், பள்ளி மாணவிகளாக நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா ஆகியோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, கதையில் இருக்கும் காதலை காட்சிகளிலும் ததும்பத் ததும்பக் கொடுத்திருக்கிறது.
ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கு ரகம்.பின்னணி இசை மனதிற்கு இதமாக இருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் மதன், முதல் காதல் அனுபவங்களை அசைபோடும் நினைவுகளை மையக்கருவாக எடுத்துக்கொண்டு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான படங்களின் பாதிப்பாக கையாண்டிருந்தாலும், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களுக்கு ஏற்றபடியான காட்சிகளை உருவாக்கி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். முதல்பாதியில் இருக்கும் சிற்சில தொய்வுகளைத் தாண்டி எல்லோரையும் ஈர்க்கும் படத்தைக் கொடுத்திருக்கிறார். காதலர்கள் எவ்வளவுதான் நம்பிக்கையுடன் இருந்தாலும் அவர்களிடத்தில் அகத்தில் உள்ளே இருக்கும் பாதுகாப்பின்மை உணர்வுகளை மிக சிறப்பாக இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘வித் லவ்’ காதலர்களபார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.