பூக்கி – திரைப்பட விமர்சனம்!

48

 

CHENNAI.

படம்: பூக்கி

நடிப்பு: அஜய் திஷான், ஆர்கே தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம் ஜே ஷெரின், ராதா, அஸ்வின் ராம், ஸ்ரேயா ஷர்மி, பிரியங்கா

தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி

இசை: விஜய் ஆண்டனி

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

எழுத்து: புதிய பரிதி

இயக்கம்: கணேஷ் சந்திரா

பி ஆர் ஓ: சதீஷ் (AIM),

இளம் தலைமுறையின் மன உணர்வுகளையும் காதல் மனநிலையையும், காதல் வலிகளையும் ஒவ்வொரு காட்சிகளில் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள படம்தான் “பூக்கி”. சமூக வலைதளங்களில் உருவான தனக்கு  பிடித்தமானவர்களை அழைக்கும் பிரபலமான ‘பூக்கி’ என்ற வார்த்தைக்கு பொருத்தமாக நாயகன் அஜய்யும், நாயகி தனுஷாவும் காதலர்களாக இருக்கின்றனர்.  இந்த சூழலில் இருவரும் காரில் செல்லும்போது ஒரு சிறு விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் ஒரு சிக்னலில் இவர்களது கார் நிற்கும்போது வேறொரு கார் இவர்களது காரின் மீது இடித்துவிட்டு வேகமாக செல்கிறது. அதனால் கோபமடைந்த அஜய் வேகமாக துரத்திச் சென்று அந்த காரை மடக்கி சண்டை போடுகிறார். அப்போது அவரை அஜய் தாக்க முயலும் சமயத்தில் தனுஷா அந்த சண்டையை தடுக்கிறார். இருவரும் சமாதானம் ஆகாததால் அஜய்யை கன்னத்தில் ஓங்கி அடிக்கிறார். அஜய்யும் கோபப்பட்டு தனுஷாவை கன்னத்தில் அடிக்கிறார்.

இதனால் இவர்களது காதல் பிரேக் அப் ஆகிறது. இந்த சம்பவத்தை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர். காதலர்கள் இருவரும் பிரிந்தாலும், அவர்களால் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். தங்களது காதல் பிரிவு தவிப்பில் இருந்து தப்பிப்பதற்காக இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதன்படி, இருவரும் வெவ்வேறு காதலை நோக்கி பயணிக்க, முடிவு செய்கிறார்கள். அப்போது இருவரும் தங்களது நண்பர்கள் மூலம் மறுபடியும் பிரேக் அப் சொல்ல சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதுதான் “பூக்கி” படத்தின் மீதிக் கதை.

அஜய் திஷன் மற்றும் ஆர்.கே. தனுஷா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நம்பிக்கையுடன் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாண்டியராஜன், சுனில், லக்‌ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இப்படத்துக்கு இசை மற்றும் படத்தொகுப்பு ஆகியனவற்றை விஜய் ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.படத்தொகுப்பாளராக முதல்பாதியில் சிறிது தடுமாறினாலும் இரண்டாம்பாதியில் நிமிர்ந்து நின்றுவிடுகிறார்.

அனைவரும் ரசிக்கும் வகையிலான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். திரைக்கதையின் பங்காகவே பின்னணி இசையை சிறப்பாக  அமைந்திருக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதியிருக்கும் புதியபரிதி, இக்கால இளையதலைமுறையின் எண்ணவோட்டங்களைக் கூர்ந்து கவனித்து பயணித்து இருக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் கணேஷ் சந்திரா. இன்றைய சூழலில் ஆண், பெண் இருவரும் சம்பாதிப்பதால் பிள்ளைகளின் காதலுக்கு பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் அவர்கள் பிரிவுக்கும், சந்தோஷத்திற்கும் அவர்களே காரணமாகிறார்கள் என்பதையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில், ‘பூக்கி’  காதல் வலியை சொல்லும் படம்.

ரேட்டிங் 3/5