‘TN 2026’ – திரைப்பட விமர்சனம்!

38

 

CHENNAI:

படம்: TN 2026

நடிப்பு: நட்டி, தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், இளவரசு, தலைவாசல் விஜய், சிரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி,

தயாரிப்பு: கண்ணன் ரவி குரூப்ஸ் கண்ணன் ரவி

இசை: தர்புகா சிவா

ஒளிப்பதிவு : பி. ஜி.முத்தையா

இயக்கம்: உமாபதி எஸ் ராமையா

பி ஆர் ஓ : சதீஷ் (AIM )

வடமாநிலத்தைச் சேர்ந்த நட்டி,பிழைப்புக்காக சென்னை வருகிறார். சென்னைக்கு பிழைப்புக்காக வந்த நட்டி  எதிர்பாரதவிதமாக நடிகராகி விடுகிறார். அவரது முதல் படம் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விடுகிறார். பொள்ளாச்சியில் செல்வாக்குள்ள மிகப்பெரும் ஜமீன்தாரரான தம்பி ராமையா, ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர். அங்குள்ள அனைவராலும் மிகவும் பெருமையாக பார்க்கக் கூடியவர். அந்த சமயத்தில்  முதல் படத்திலேயே நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்திய நட்டியை நேரில் அழைத்து பாராட்டுகிறார் தம்பி ராமையா. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ரசிகரான தம்பி ராமையா,  இனி வரும் எதிர்காலத்தில் எம் ஜி ஆர் போன்று மிகப் பெரும் இடத்திற்கு செல்லவும் நட்டியை ஆசிர்வாதம் செய்து வாழ்த்துகிறார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து சினிமாவில் அவரை உச்ச நடிகராக்கும் பயணத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். தனது செலவில் அவரை வசதியாக பராமரிக்கும் தம்பி ராமையா படிப்படியாக அவரது வளர்ச்சிக்கு துணையாக நிற்கிறார்.

இதே நேரத்தில் நட்டி நடித்த படங்கள் வெற்றி பெறுவதால் அவர் உச்ச நடிகர் என்று புகழின் உச்சிக்கு செல்கிறார். இந்த சூழ்நிலையில் உச்ச நடிகர் நட்டியை அரசியலில் ஈடுபட வைக்க ஆசை காட்டிய தம்பி ராமையா ஒரு அரசியல் கட்சி தொடங்குவதற்கு உதவி செய்கிறார். ஒரு நடிகராக மக்களிடையே பிரபலமாகி இருக்கும் நட்டியை அரசியல் ஆசையை காட்டி ‘ஆத்திக நாத்திக முன்னேற்ற கழகம்’ என்கிற பெயரில் கட்சி தொடங்க வைக்கிறார் தம்பி ராமையா,   2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குல்கந்த் குமார் என்ற நட்டிக்கு நம்பிக்கையையும் அவரது மனதில் பதிய வைத்து அரசியலில் பயணிக்க வைக்கிறார் தம்பி ராமையா. அப்படிப்பட்ட குல்கந்த் குமார் என்ற நட்டி நடிகராக இருந்து அரசியல்வாதியாகி மக்களை சந்திக்கும்போது பல்வேறு சிக்கல்களையும்,  துரோகங்களையும், அவமானங்களையும் எதிர்கொள்கிறார். இறுதியில் குல்கந்த் குமார் என்ற நட்டிக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் “TN 2026” படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் நட்டி நட்ராஜ்  கதாநாயகனாக நடித்து இருந்தாலும், இதற்கு முன் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நட்டியை பார்த்திருந்தாலும், இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நட்டியை பார்க்கலாம். ஆரம்பத்தில் வட இந்திய தமிழில் பேசுவது போல் கொஞ்சிப் பேசி அந்த கதாபாத்திரமாக நமக்குள் ஊடுருவினாலும், அதன் பிறகு அவர் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு பெரிய நடிகராக வளர்கிற பாதையில் நட்டி தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்திள்ளார். ஒரு சாதாரண மனிதனிலிருந்து சதிகார அரசியல்வாதியாக மாறும் அந்த பரிணாமத்தை அவர் திறமையாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார்.

நட்டி என்ற நடிகரை வளர்த்து உருவாக்கும் ஜமீன்தார்  சிவலிங்கம் மன்றாடியார் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா தனது அனுபவத்தால் கதைக்கு வலுவூட்டுகிறார். அவரது நடிப்பு மற்றும் திட்டங்கள், தற்போதைய  தமிழக அரசியலின் சூறாவளியாக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் செயல் வீரர் ஒருவரை நினைவுப்படுத்துகிறது. அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கியதால் அதற்கு உண்டான  காட்சிகளை அவரே உருவாக்கிக் கொண்டு நடித்துள்ளதை பாராட்டலாம்.

கதாநாயகிகளாக ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஆகிய மூவரும் அவரவர் பிம்பத்திற்கு ஏற்றவாறு தங்களது கதாபாத்திரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ரெடின் கிங்ஸ்லி,எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோருடைய வேடங்களும் அவர்கள் நடிப்பும் நன்று.

இப்படத்திற்கு  இசையமைத்து இருக்கும் தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கச்சிதமாக கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவு ஒரு அரசியல் களம் காட்சி எப்படி  அமைக்கப்பட முடியுமோ அவ்வாறு அமைத்து மிகவும் சிறப்பாக  கதைக்கேற்ப படமாக்கிள்ளார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

இயக்குநர் உமாபதி ராமையா, தற்போது தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் உலகின் உள்ளக செயல்பாடுகளை நையாண்டி கலந்த கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தி படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். பல இடங்களில் சமகால அரசியல் நிகழ்வுகளின் தாக்கத்தை உணருகின்ற விதத்தில் பல காட்சிகளை இப்படத்தில் காண முடிகிறது. முதல் படத்தில் ஒரு கலகலப்பான அரசியல் கலந்த காட்சிகளை உருவாக்கி ஒரு வியாபார ரீதியான படத்தை வெற்றிகரமாக வழங்கிய வகையில் இயக்குநர் எஸ்.உமாபதி ராமையா அசத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘TN 2026’ ஒரு சுவாரஸ்யமான அரசியல் நையாண்டி உள்ள படம்.

ரேட்டிங் 3.5/5.