‘கர’ – திரைப்பட விமர்சனம்!

24

 

CHENNAI:

படம் : கர

நடிப்பு : தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சாராமூடு, ப்ரித்வி பசண்டியராஜன், ஸ்ரீ ஜா ரவி

தயாரிப்பு : ஐசரி கணேஷ்

இசை : ஜிவி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு :தேனி ஈஸ்வர்

இயக்கம் : விக்னேஷ் ராஜா

பி ஆர் ஓ : சதீஷ் (AIM ), ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்.

ராமநாதாபுரம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு சம்பவம் நடத்தும் தனுஷ் போலிசில் சிக்கி தப்பிக்கிறார். பதினாறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப்போய் திருடனாக இருக்கும் தனுஷ், மமிதாபைஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக அந்தத் தொழிலை விட்டுவிட்டு,  மனைவியுடன் ஆந்திரா போய் ஓர் உணவகத்தில் வேலை செய்கிறார்.அங்கு மனைவி படும் கஷ்டத்தைப் பார்த்து சொந்தமாக உணவகம் வைக்க நினைக்கிறார். சொந்தமாக  உணவகம் நடத்த பணம் தேவை என்பதால் ஒரு வங்கியில் கடன் கேட்கிறார் தனுஷ். அதற்கு அடமானம் கேட்கவே சொந்த ஊரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கலாம் என்று தனது சொந்த ஊருக்கு சென்று தந்தையை சந்திக்கிறார். அவரது தந்தை   கே எஸ் ரவிக்குமார் ஏற்கெனவே வங்கியில் விவசாய பூமியின் மீது வாங்கிய கடனை செலுத்த முடியாமல், மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

ஆனால், அங்கிருக்கும் சூழலால் தனுஷ் நினைத்தது நடக்கவில்லை. மாறாக, தனது தந்தை இறந்துவிட, அவரின் பிணத்தை அவர்களது சொந்த நிலத்தில் புதைக்க விடாமல், கடன் கொடுத்த வங்கியினர் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இப்படி அந்த ஊர் மக்களின் நிலங்கள் எல்லாம் பெரிதாக விவசாயம் செய்யவும் டிராக்டர் வாங்கவும் என்று வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருக்கின்றன.இதனால் அங்குள்ள கிராம மக்கள் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.  இதனால் அங்கு எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கின்றன.    தனுஷ் தனது பழைய முகத்தை காட்ட ஆரம்பிக்கிறார்.  மீண்டும் பணத்தை திருடும் திருடனாக மாறும் தனுஷ், மறைந்த தனது தந்தையின் நிலத்தை மீட்க களத்தில் இறங்குகிறார்.   அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனுஷ் அந்த வங்கியிலேயே கொள்ளை அடித்து தந்தையின் கடனை அடைக்க முயல்கிறார்.   அதன்பிறகு தனுஷின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே “கர” படத்தின் மீதிக் கதை.

ஒரு சாதாரண கிராமத்து இளைஞன் கதாபாத்திரம் தனுஷுக்கு அச்சுஅசலாகப் பொருந்தும் என்பதற்கு ஏற்கெனவே நிறையப் படங்கள் இருந்தாலும் இதில் கரசாமியாக வாழ்ந்திருக்கிறார். வங்கிக் கொள்ளைக்காட்சிகளில் அவர் நிதானமாகக் கையாளும் விதம் ரசிகர்களைக் கவரும்.சண்டைக்காட்சியில் நடித்தாலும் அது மிகையாகத் தெரியாமல் நடித்துள்ளது பாராட்டத்தக்கது. தொடர்ச்சியாக தனது படங்களில் தனது தனித்துவத்தை காட்டிக் கொண்டே இருக்கிறார் தனுஷ். இந்த படத்திலும் அதனை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

கதாநாயகி மமிதாபைஜு இருக்கிற அழகைக் குறைத்து சிறந்த முறையில் ஒப்பனை செய்து மேலும் அழகாகியிருக்கிறார். மனதில் வலுவாக நிற்கும் கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் மமிதா.

தனுஷின் தந்தையாக மாறுபட்ட ஒப்பனை மட்டுமின்றி மிக மாறுபட்ட நடிப்பையும் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.தனுஷின் தாயாக வரும் ஸ்ரீஜாரவி, உறுதிமிக்க கிராமத்து அம்மாவாகவே மாறியிருக்கிறார்.

தனுஷின் மாமாவாக நடித்திருக்கும் கருணாஸ் பாத்திரமும் அதில் அவர் நடிப்பும் அருமை.

பெருமைக்காக கடமையாற்ற நினைக்கும் டிஎஸ்பி கேரக்டரில்  யூத் படத்தில் கென் தந்தையாக நடித்த சுராஜ் வெஞ்சாராமூடு இப்படத்தில் தனுஷை துரத்தி பிடிக்கும் போலீசாக நடித்திருக்கிறார். அவர் தன் தனது கண்களாலேயே மிரட்டலான ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்தி விட்டார்.

தனுஷின் நண்பராக வரும் பிருத்வி பாண்டியராஜன், வில்லனாக நடித்திருக்கும் ஜெயராம் ஆகியோரும் பொருத்தமாக நடித்து நற்பெயர் பெறுகிறார்கள். மண்ணை முகர்ந்து பார்த்தே அதன் தன்மை சொல்லும் மூத்த விவசாயியாக எம்.எஸ்.பாஸ்கர். சில காட்சிகளுக்கு பிறகே அவர் எம்.எஸ்.பாஸ்கர் என்று அடையாளம் காணக்கூடிய அளவுக்கு கெட்டப் மாற்றம் பிரமாதம்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. 90களின் காலக்கட்டத்தையும் களத்தின் அசல் வண்ணமும் மாறாமல் திரைக்குள் நம் கண்களை கவர வைத்து இருக்கிறது.

ஜி வி பிரகாஷ்குமார் படத்திற்கு மிகப்பெரும் பில்லர் என்றே கூறலாம். பின்னணி இசையாக இருக்கட்டும் பாடலாக இருக்கட்டும் இரண்டிலுமே தனது உச்சத்தைக் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ்ராஜா, வங்கிக் கடன்களால் பாதிக்கப்படும் கிராமத்து மனிதர்களின் துயரங்களை வெளிக்கொண்டுவர வேண்டுமென உழைத்திருக்கிறார். கடன், வட்டி, ஜப்தி என்ற பெயரில் வங்கிகள் செய்யும் அடாவடிகளை தோலுரிப்பதும், பல காட்சிகள் ஏழை விவசாயிகளுக்கான குரலாக ஒலிப்பதும் பாராட்டுக்குரியது.

மொத்தத்தில் ‘கர’ பரபரப்பும் சுவாரசியமும் கொண்ட படம்.

ரேட்டிங் 4/5.