’சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்!

79

 

CHENNAI:

படம்: சட்டென்று மாறுது வானிலை

நடிப்பு : ஜெய், யோகி பாபு, மீனாட்சி, கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்ய கதிர்

தயாரிப்பு: பி வி பிரேம்ஸ்

இசை: கிரிஷ்
கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்

இயக்கம்: பாபு விஜய்

பிஆர்ஓ : சதீஷ் (AIM).

தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் ஜெய். எதிர்பாராதவிதமாக மீனாட்சி கோவிந்தராஜனை மது அருந்தும் இடத்தில் ஒருநாள் கண்டதும் அவர் மீது காதலில் விழுகிறார் ஜெய். ஒரு அமைச்சரின் மகளாக வலம் வரும்  மீனாட்சிக்கு வீட்டில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறார் .

அதன் பிறகு இரண்டாம் நாள்  ஜெய்  மீனாட்சியை பார்த்ததும், நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவரிடம் கேட்க, மீனாட்சியும் ஓகே சொல்ல, உடனே இருவருக்கும் திருமணம் நடந்து விடுகிறது. மீனாட்சியின் திருமணத்தை வைத்து மிகப்பெரும் திட்டம் வைத்திருந்த அவரது தந்தை, மீனாட்சியையும் ஜெய்யையும் தேடுகிறார். தேன்நிலவுக்காக கொடைக்கானல் செல்லும் ஜெய் – மீனாட்சி தம்பதி, கருடா ராம் நடத்தும் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள். அங்கு அவர்கள்  இருவரும் படுக்கையறையில் இருப்பதை கருடா ராம் ஹிடன் கேமரா மூலம் வீடியோ எடுத்து விடுகிறார். இவர்களை போல, பல ஜோடிகளை இப்படி வீடியோ எடுத்து, அதனை ஆபாச தளத்தில் ஏற்றி பல கோடிகளை சம்பாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கருடா ராம்.

தங்கள்  இருவரையும் படுக்கையறையில் இருப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்த காட்சிகளை கைப்பற்ற நினைக்கிறார் ஜெய். இந்த சூழலில் தன் மனைவியை தன்னிடம் இருந்து பிரிக்க அமைச்சரின் அடியாட்கள் ஜெய்யை கொல்ல நினைக்கும் சதி,  மற்றொரு பக்கம் கந்துவட்டி டீம் என பல கோணங்களில் இருந்து ஜெய் சிக்கி தவிக்க, திடீரென்று மீனாட்சி காணாமல் போய் விடுகிறார். அதற்கு ஜெய் தான் காரணம் என்று சந்தேகிக்கும் போலீஸ் அவரை கைது செய்கிறது. இதன் பிறகு ஜெய்யின் வாழ்க்கையில் நடந்தது  என்ன  என்பதே  ‘சட்டென்று மாறுது வானிலை’  படத்தின் மீதிக் கதை.

விஜய் ரசிகராக ஜெய் இப்படத்தில் நடித்திருக்கிறார். முதல் பாதி படம் வரை அவர் விஜய் போலவே ஸ்டைல்கள் செய்து நடிப்பது ரசிகர்களை ரசிக்க வைக்கும். காதல் காட்சிகளிலும், கண்கலங்கும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகி மீனாட்சிக்கு அழகைக் காட்டி ரசிகர்களை ஈர்ப்பது மட்டுமின்றி நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். காதலியாக மனைவியாக, ஒரு மகளாக , பாதிக்கப்பட்ட பெண் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

யோகிபாபுவின் காமெடி சரவெடிகள் ஆங்காங்கே வெடித்திருக்கின்றன. கருடா ராமின் வில்லத்தனம் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கிறது. செயல்பாட்டில் பெரிதாக எதுவும் இல்லை. ஸ்ரீமன், சத்யன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கானதை செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் படத்தின் உணர்வுகளை இசையின் மூலம் சுமூகமாக எடுத்துச் செல்கிறார். பாடல்கள் காதல் மனநிலைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு திரைப்படத்தின் காட்சித் தரத்தை உயர்த்தியுள்ளது. பல காட்சிகளைத் தரமாகப் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் பாபு விஜய்.ஏழைப்பையனும் பணக்காரப் பெண்ணும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டால் என்னென்ன சிக்கல்கள் வருமென்ற பழைய கதைக்குள்,பல்வேறு அம்சங்களை புகுத்தி இருக்கிறார். தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி திருடப்படுகிறது, என்ற உண்மையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் ’சட்டென்று மாறுது வானிலை’ மாறுபட்ட காதல் த்ரில்லர் படம்.

ரேட்டிங் 3/5.