‘அருள்வான்’ திரைப்பட விமர்சனம்!

53

 

CHENNAI:

படம்: அருள்வான்

நடிப்பு: அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன்,  பேபி கிருத்திகா,  ஜான்விஜய், காளி வெங்கட், வி டிவி கணேஷ்

தயாரிப்பு: எஸ் ஜி சரவணன்

இசை: ஜிவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : எம் சுகுமார்

இயக்கம்: கணேஷ் விநாயகன்

பிஆர்ஓ : நிகில் முருகன்.

2004ல் தொடங்குகிறது இந்தக் கதை. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கல்வியும் நாகரிகமும் எட்டிப் பார்க்காத ஏராளமான பழங்குடியினர் கிராமங்கள் இருக்கின்றன. அவர்கள் தங்களுக்கென ஒரு மொழியை பேசிக்கொண்டு தங்களுக்கென ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். போக்குவரத்து வசதிகூட இல்லாத அந்த இடத்தில் பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டுமெனில் எட்டு கிலோமீட்டர் நடந்து தான் போக வேண்டும் என்கின்ற சூழலில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமலேயே வளர்த்து இருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

இப்போது அந்த ஊரின் தலைவரின் மகளான ரம்யா பாண்டியன் அதே ஊரைச் சேர்ந்த ஆரவ்வை திருமணம் செய்து கொண்டு கிருத்திகா என்ற 10 வயது பெண்ணுக்குத் தாயாகவும் இருக்கிறார்ஒரு பக்கம் வனத்துறை அதிகாரிகள்.. இன்னொரு பக்கம் கண்டு கொள்ளாத அரசுகள் இவர்கள் இடையில் மாட்டிக் கொண்டு அவர்கள்  முழிக்கிறார்கள்.  அந்தப் பகுதி மக்களுக்கு. படிப்பறிவு இல்லாததால்தான் இப்படி நாம் கேட்பாரே இல்லாமல் இருக்கிறோம் என்ற தனது தாத்தாவின் வார்த்தைகளை கேட்டு தானும் படிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறாள் ரம்யாவின் மகளான சிறுமி கிருத்திகாபக்கத்து ஊரில் இருப்பவர்கள் பள்ளிக்கு செல்வதை பார்த்து தானும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். கலெக்டரை சந்தித்து கேட்டால் பள்ளிக்கூடம் கட்டித் தருவார் என்று டீச்சர் ஒருவர் சொல்வதைக் கேட்டு கலெக்டரை சந்திக்க மலைக் கிராமத்திலிருந்து  வெளியேறும்  கிருத்திகா  வழி தெரியாமல் திண்டாடுகிறாள். வெளி உலகிற்கு வரும் அந்தச் சிறுமி பல சவால்களையும் ஆபத்துகளையும் எதிர்கொள்கிறாள்.

அவளது ஆசையை நிறைவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அருள்நிதி முன் வருகிறார். அந்த மலைப் பகுதிக்கு ஆசிரியர்கள் வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் தடையாக இருக்கின்றன. இறுதியில் அந்த மலைப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை  படிக்க வைக்க முயன்ற அருள்நிதி மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அங்கு ஆசிரியராக செல்கிறார். அந்தச் சிறுமி  கிருத்திகா   உள்ளிட்ட அனைவரும் கல்வி கற்கவேண்டும் என நினைக்கிறார். அதற்காக அவர் கடுமையாக உழைக்கிறார்.அதில் அருள்நிதி  வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் “அருள்வான்” படத்தின் மீதிக் கதை.

முத்துவேல் என்ற கலெக்டர் வேடத்தில் அருள்நிதி நடித்திருக்கிறார். மென்மையான அணுகுமுறை, அமைதியான ஆனால் உறுதியான பேச்சு என அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.

படிக்கவேண்டும் என்று போராடும் குறிஞ்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி கிருத்திகாதான் படத்தின் நாயகி என்றே சொல்லலாம்.அவர் வெளிப்படுத்தும் ஏக்கம், பயம், கல்வி மீதான ஆர்வம் ஆகியவை பல இடங்களில் மனதை நெகிழ வைக்கின்றன.

சிறுமி கிருத்திகாவின் பெற்றோராக நடித்திருக்கும் ஆரவ்,ரம்யாபாண்டியன் ஆகியோருக்குப் பெரிய வாய்ப்பில்லை.கிடைத்த வாய்ப்பைப் பய்ன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறார்கள்.

காளி வெங்கட்,ஜான் விஜய்,விடிவி கணேஷ் ஆகியோர் தங்கள் இயல்புக்கு மாறாக,இந்தக் கதைக்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைதியாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்கிறது. .பின்னணி இசையில் அந்தமக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தி பரிதவிக்க வைக்கிறார்.

எம். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. மலைக் கிராமங்களின் இயற்கை அழகையும், பழங்குடியின மக்களின் வாழ்க்கைச் சூழலையும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.

மலை வாழ் மக்கள், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்ற ஒரு உன்னதமான  படத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  இயக்குனர்  கணேஷ் விநாயகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அடிப்படை வசதிகள் கூடஇல்லாமல் இந்த காலத்திலும் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தி அவர்களின் உரிமைகளை அவர்களுக்குக் கொடுப்பதில் அதிகார வர்க்கங்கள் காட்டும் அவலங்களை யதார்த்தமாக சொல்லி,  கல்விக்கான தங்கள் பயணத்தில் தடைகளை தாண்டி வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்ற ஏழை மாணவிகளைப்பற்றியும் எடுத்து காட்டி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் “ஆருள்வான்” என்ற இந்தப் படம் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

ரேட்டிங் 3/5.