
CHENNAI:
படம்: அன்பே டயானா
நடிப்பு: பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி, செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி
தயாரிப்பு: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்
இசை: பரத் சங்கர்
ஒளிப்பதிவு: ஷெல்லி கேலிஸ்ட்
இயக்கம்: பாரி இளவழகன்
பிஆர்ஓ : யுவராஜ்.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் ஒரு தெருக் கூத்து கலைஞனை மையமாக வைத்து இயக்குநர் அடையாளத்தை பதித்த பாரி இளவழகன், இந்த முறை முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் கமர்ஷியல் காதல் திரைப்படமாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளார்.
தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் பாரி இளவழகன். ஸ்போர்ட்ஸ் டீச்சராக வேலை செய்கிறார். அதலெடிக்ஸில் ஆர்வமுள்ள மாணவர், மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவரது தந்தை சேத்தன் ஜாலியன ஒரு மனிதர். தாயார் சரளா என்ற ரோஜா தனது சாதியில் தான் மகனுக்கு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அவர் இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார் .அவரது உழைப்பாலும் கண்டிப்பாலும் குடும்பத்தில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிச் சொந்த வீடு வரை சென்று நிமிர்ந்து நிற்கிறது குடும்பம் . மனைவிக்குப் பயந்த குடிப்பழக்கம் உள்ள கணவரான சேத்தன், தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் ஆழ் மனதிற்குள் இருந்தாலும் அவர் ரோஜாவை வேண்டா வெறுப்பாக திருமணம் செய்துக் கொள்கிறார். இந்த நிலையில் அவரது மகன் பாரி இளவழகன் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ரம்யா ரங்கநாதனை விரும்புகிறார்.
தன் மகனின் காதலுக்கு சேத்தன் பச்சைக் கொடி காட்டுகிறார். ஆனால் இருவருக்கும் கலாச்சாரம் ஒத்துப் போகுமா என்று நாயகன் பாரி இளவழகன் குழப்பத்தில் இருக்கிறார். தனது வீட்டில் ரோஜா தன்னுடைய தம்பி மகளை தனக்கு மருமளாக ஆக்கிக் கொள்ள துடியாய் துடிக்கிறார். பாரி இளவழகனுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து விடுகிறது. அதனால் மன வேதனை அடைந்த பாரி இளவழகனுக்கு இவர்களது காதலை ஏற்றுக் கொண்டு குடும்பத்தில் உள்ள தாய் ரோஜா இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதுதான் ‘அன்பே டயானா” படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக நடித்துள்ள பாரி இளவழகன், ஒரு சாதாரண இளைஞனின் காதல், குழப்பம், குடும்ப பாசம் ஆகிய அனைத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநராக மட்டுமல்ல, நடிகராகவும் நம்பிக்கை அளிக்கும் நடிப்பை வழங்கியுள்ளார்.
ரம்யா ரங்கநாதன்,இப்படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்திருக்கிறார்.அழகால் ஈர்க்கும் அவர் நடிப்பிலும் சிறப்பு அதோடு பல இடங்களில் அனைவரையும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார்.
மது குடித்துவிட்டு மனைவியுடன் வீரம் பேசும் சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர் கதாபாத்திரத்தில் சேத்தன் கலகலப்பூட்டி உள்ளார். குடித்துவிட்டுச் சலம்புவதும் பிறகு பெட்டிப்பாம்பாய் ஒடுங்குவதும் என்று அவர் வரும் காட்சிகளில் கலகலப்பு ஏற்படுகிறது.
ரோஜா கண்டிப்பான பொறுப்புள்ள தாயாக நம் பார்வைக்கு வலம் வருகிறார் படத்தில் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
பரிதாபங்கள் கோபி ஆரம்பத்தில் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், இரண்டாம் பாதியில் கதையின் ஓட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றுகிறார்.
மேலும் படத்தில் செல்முருகன், நிகிலா ஷங்கர், கிருஷ்ணர் பானு சுதர்சன் பாண்டி ஆகியோர் தத்தமது கதாபாத்திரங்களால் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.
பரத் சங்கரின் இசை படத்தின் உணர்வுபூர்வமான தருணங்களுக்கு இயல்பாக இணைந்து செல்கிறது. பின்னணி இசை பெரும் இரைச்சலின்றி காட்சிகளின் உணர்வை மேலும் ஆழப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், குறைந்த பட்ஜெட்டிலும் பெரம்பூரை புதிய கோணத்தில் கலர்ஃபுல்லாக அழகாக பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கதை எழுதி இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாரி இளவழகன்,ஒற்றைவரிக் கதையை வைத்துக் கொண்டு இந்துக் குடும்பமும் கிறிஸ்தவ குடும்பமும் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இருவரும் மாறி மாறி எதிர் தரப்பு கலாச்சாரங்களையும் நடை உடை பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொள்ளும் காட்சிகள் நல்லதொரு கற்பனை மட்டுமல்ல ரசிக்க வைக்கும் காட்சிகளாகவும் அமைந்து இருக்கின்றன.குடும்ப உணர்வுகள், காதலுக்காக போராடும் இளைஞர்களின் மனநிலை, பெற்றோர்களின் பார்வை, தலைமுறை இடைவெளி ஆகியவற்றை இயக்குநர் எந்தவித அதிரடி வசனங்களும் இல்லாமல் மிகவும் இயல்பாக சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் ‘அன்பே டயானா’ அனைத்து மக்களும் ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.