
ஒரு கதாநாயகன் குடும்பம், தொழில் ஆகியன நல்ல முறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென அவருடைய சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? ஏன்? என்பனவற்றை அவர் கண்டுபிடிக்கிறார் என்றால் மிகச் சாதாரணமாகப் போய்விடும் என்பதால்,இதே கதையைக் கொண்ட இந்தப்படத்தின் நாயகனுக்குப் பார்வை குறைபாடு உண்டு. நல்ல வெளிச்சத்தில் மட்டுமே நன்றாகக் கண் தெரியும் குறைந்த வெளிச்சமென்றால் மங்கலாகத் தெரியும் என்கிற குறை.
இக்குறையை வைத்துக் கொண்டு அவருடைய நாயகத்தன்மையை நிறுவும் படம்தான் பாயும் ஒளி நீ எனக்கு.
முகம்நிறைய தாடியுடன் புதிய தோற்றத்தில் வருகிறார் விக்ரம்பிரபு. தோற்றம் மட்டுமின்றி நடிப்பிலும் வித்தியாசம் காட்டவேண்டிய கதாபாத்திரம். அதற்காக மெனக்கெட்டிருக்கும் அதேநேரம் சண்டைக்காட்சிகளில் உக்கிரம் காட்டியிருக்கிறார்.
நாயகி வாணிபோஜன், பாடல்காட்சிகளில் வண்ணமயமாக வருவதோடு கொடுத்த வேடத்துக்கு ஏற்ப நடித்துமிருக்கிறார்.
அரசியல்வாதிகளாக வரும் வேல.இராமமூர்த்தி அவர் மகன் டாலி தனஞ்செயா ஆகிய இருவரும் வெவ்வேறு முகம் காட்டியிருக்கிறார்கள்.
நண்பராக வரும் விவேக்பிரசன்னா, சித்தப்பாவாக வரும் ஆனந்த் ஆகியோரும் நன்று.
சண்டைப்பயிற்சி இயக்குநர் தினேஷ் காசியின் உழைப்பு பாராட்டும்படி இருக்கிறது. படம் முழுவதும் ஆக்ஷன் உணர்வோடு பயணிப்பதோடு, ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வேகமாகவும், வித்தியாசமாகவும் காட்சிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.
பார்வைக்குறைபாடுள்ள கதாநாயகன் எனும்போது ஒளிப்பதிவாளருக்குக் கூடுதல் வேலை இருக்கும். அதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.
சாகர் இசையமைத்துள்ளார். பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் தாழ்வில்லை.
விக்ரம் பிரபுக்கு இருக்கும் குறைபாடு மட்டுமே புதிய யோசனையாக இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் அத்வைத், அதை அழுத்தமில்லாமல் அமைத்திருப்பது படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.
RATING: 3.5/5
THANKS,