
CHENNAI:
படம்:கூரன்
நடிப்பு: எஸ் ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா இவர்களுடன் பைரவா என்ற நாய்
தயாரிப்பு: விக்கி
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: மார்ட்டின் தன்ராஜ்
இயக்கம்: நிதின் வேமுபதி
பிஆர்ஓ: சக்தி சரவணன்
சுப்ரீம் கோர்ட் வக்கீல் எஸ்.ஏ சந்திரசேகர் பத்து வருடங்களாக எந்த வழக்கிலும் ஆஜராகாமல் வீட்டில் இருக்கிறார். அவரது வீட்டு கதவை தட்டுகிறது ஒரு நாய். முதலில் புரியாமல் தவிக்கும் எஸ்ஏ சந்திரசேகர் பின்னர் தன் குட்டியை கார் ஏற்றி கொன்றவனுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதை அதன் பாணியில் உணர்த்துகிறது. அதை புரிந்து கொண்டு பைரவா நாயின் குட்டியை கார் ஏற்றி கொன்றவருக்கு சட்டப்படி தண்டனை தர வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். வித்தியாசமான இந்த வழக்கில் என்ன தீர்ப்பு தரப்படுகிறது என்பதை கிளைமாக்ஸ் பரபரப்பாக விளக்குகிறது.
கன்றின் மீது தேர் ஏற்றிக்கொன்ற தன் மகனுக்கு அதே தேர் சக்கரம் ஏற்றி தண்டனை அளித்த மனுநீதி சோழன் கதையை அடிப்படையாக வைத்து கார் சக்கரம் ஏற்றி தன் குட்டியை கொன்ற கயவனுக்கு தண்டனை கோரி நீதிமன்ற வாசலுக்கு செல்லும் ஒரு நாயின் கதையாக உருவாகி இருந்தாலும் அதை ஒரு சின்சியர் முயற்சியுடன் இயக்கி இருக்கிறார் டைரக்டர் .
இந்த வயதில் என்ன வேடத்தில் நடிக்க முடியும் என்று எஸ் ஏ சந்திரசேகரை பார்த்து யாராவது கேட்டால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வழக்கறிஞர் வேடம் ஏற்று சட்ட நுணுக்கங்கள் பேசி நான் சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவன் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
தன்னையே சுற்றி சுற்றி வரும் நாய்க்கு என்ன வேண்டும் என்பது தெரியாமல் அதற்கு பிஸ்கட் தருவது, உணவு தருவது என்று பரிவு காட்டும் எஸ்.ஏ சந்திரசேகர் ஒரு கட்டத்தில் அது தன் குட்டியை கார் ஏற்றி கொன்றவனுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதை உணர்த்துவதாக அறிந்து வழக்கறிஞர் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட்டுக்கு எஸ் ஏ. சந்திரசேகர் விரைவதும், கோர்ட்டில் அவர் தொடக்க காட்சிகளில் வாதங்கள் எடுத்து வைக்கும் போது ஏதோ சாதாரண வழக்காக முடிந்துவிடும் என்று நினைத்தால் அதை சீனுக்கு சீன் சீரியசான வாதமாக மாற்றி ரசிகர்களை கதைக்குள் இழுத்து விடுகிறார் எஸ் ஏ சந்திரசேகர்.
குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடும் பாலாஜி சக்திவேல் போட்டி வாதங்கள் வைத்து காட்சிகளில் முடிச்சுகளை பலமாக போட்டு விடுகிறார்.
படத்தில் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருக்கிறது. சோகமாக முகத்தை வைத்துக்கொள்ளும் நேரத்திலும், கோர்ட்டு கூண்டில் ஏறி வக்கீல் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதும் ருசிகரமான காட்சிகள்.
கோர்ட்டில் நாய் எப்படி சாட்சி சொல்லும் என்று ஒரு குழப்பம் இருக்கத்தான் செய்யும் அந்த குழப்பம் படத்தை பார்த்தால் தீரும்.
நாய்க்கும் ஒரு பிளாஷ்பேக் வைத்திருக்கிறார் இயக்குனர் நிதின் வேமுபதி. நாய் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்லும் கதை என்று மேம்போக்காக சொல்லிவிடாமல் அதற்காக மெனக்கெட்டு ஸ்கிரிப்ட் எழுதி விலங்குகளுக்கான நீதியை ஒரு சில நிஜ சம்பவங்களை வைத்து அலசி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
விக்கி தயாரித்திருக்கிறார்
சித்தார்த் விபின் இசை ஓகே.
மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு காட்சிகளை பளபளப்பாக்கியிருக்கிறது.
கூரன் – உண்மையில் வித்தியாசமான படம்.
ரேட்டிங் 3/5