
CHENNAI:
படம் : எமகாதகி
நடிப்பு: ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா
தயாரிப்பு: ஸ்ரீனிவாச ராவ் ஜலகம்,
இசை: ஜியோன் ஜார்ஜ்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
இயக்கம்: பெபின் ஜார்ஜ் ஜெயசீலன்
பிஆர்ஓ: சதீஷ் (AIM)
தஞ்சாவூர் பக்கம் உள்ள கிராமப்புறத்தில் ஊர் தலைவர் மகள் லீலா ( ரூபா கொடுவாயூர்). திருமணமாகாத இளம் பெண்ணான இவருக்கு லேசான ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. அவ்வப்போது அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார். இந்நிலையில் வெளியில் சென்று இருந்த தந்தை வீட்டிற்கு வந்து கோபத்துடன் எல்லோரையும் திட்டுகிறார். “ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்” என்று மகள் லீலா கேட்கும்போது கோபத்தில் அவரை கன்னத்தில் அறைந்து விடுகிறார். மறுநாள் தனது அறையில் லீலா தூக்கில் இறந்து கிடக்கிறார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். லீலா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினால் குடும்ப கவுரவம் பாதிக்கும் என்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருந்ததாக கூறி சமாளித்து விடலாம் என்று லீலா உடலை இறுதிச் சடங்கு செய்ய வேலைகள் நடத்துகின்றனர். நீலா உடலை வெளியில் கொண்டுவர தூக்கும்போது அதை தூக்க முடியாத அளவிற்கு கனக்கிறது. ஒன்றுக்கு பத்து பேர் சேர்ந்து தூக்கியும் பிணத்தை வீட்டிலிருந்து வெளியில் கொண்டுவர முடியவில்லை. பூஜாரி வருகிறார் பிணம் செய்யும் சேட்டையை பார்த்து ஓடி விடுகிறார். இன்னும் யார் யாரோ வந்து முயற்சித்தும் லீலா உடலை வீட்டில் இருந்து வெளியில் எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம். லீலா உடலில் பேய் இருக்கிறதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு திகிலுடன் பதிலளிக்கிறது எமகாதகி.
சில படங்களுக்கு டைட்டில் ஒன்றாக இருக்கும் கதை வேறாக இருக்கும், இன்னும் சில படங்களுக்கு புரியாத டைட்டில்கள் வைப்பார்கள். ஆனால் எமகாதகி படத்திற்கு வைத்திருக்கும் டைட்டில் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தமோ பொருத்தம். படக்குழு அந்த டைட்டிலை வைக்காமல் இருந்தாலும் படம் பார்ப்பவர்கள் எமகாதகிப்பா என்றுதான் சொல்வார்கள்.
ரூபா கொடுவாயூர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பதற்கு என்று எந்த சீனும் இல்லை ஏனென்றால் இரண்டு மூன்று சீன்களில் தலை காட்டுகிறார் பிறகு தூக்கு போட்டு இறந்து விடுகிறார். அதன் பிறகு பிணமாகத்தான் படம் முழுவதுமே நடிக்கிறார்.
பிணமாக எப்படி நடிக்க முடியும் என்று கேட்கலாம் பிணத்திற்கு பேய் பிடித்தால் அது எப்படி நடிக்கும் என்று யோசியுங்கள் அப்படித்தான் நடித்திருக்கிறார் ரூபா.
பிணமாக நடிக்கும் போதே அவரது முகத்தில் கோபம் புன்னகை போன்ற வித்தியாசங்கள் உணர முடிகிறது.
பிணமாக நடித்தால் கூட பேச வைக்க முடியும் என்று ஒரு படத்தில் நடிகர் நாகேஷ் நிரூபித்திருப்பார் அதே போல் பிணமாக நடித்தால் கூட ஒரு ஹீரோயினால் பேச வைக்க முடியும் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார் லீலா.
லீலா இறந்த பிறகு அவரது உடல் அந்த வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாமல் போவதற்கு என்ன காரணம் என்று கூறுவது தான் படத்தின் மற்ற காட்சிகள் அது எல்லாமே சஸ்பென்சாக அமைக்கப்பட்டிருப்பதால் ஒரு சீனை சொன்னால் கூட அது கதையை ஓபன் செய்யும் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் எந்த காட்சியையும் சொல்லாமல் தவிர்ப்பது படத்துக்கு செய்யும் உதவி ஆக இருக்கும்.
லீலாவின் தாயாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார். அம்மா என்றால் அம்மா தான் என்று சொல்லும் அளவுக்கு அசல் அம்மா ஆகவே மாறி இருக்கிறார்.
மேலும் ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா நடித்துள்ளனர்.
ஸ்ரீனிவாச ராவ் ஜலகம் தயாரித்திருக்கிறார்
ஜியோன் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் பெரும் பாடுபட்டு காட்சிகளை படமாக்கி இருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
இப்படி ஒரு கதையை யோசித்த இயக்குனர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் இதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ரசிகர்களை அலறவிட்டே தீருவேன் என்ற முடிவோடு படத்தை இயக்கியிருக்கிறார்.
ரேட்டிங் 3/5