
படம்: ரஜினி கேங்
நடிப்பு: ரஜினி கிஷன், துவிகா, முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி
தயாரிப்பு: சி எஸ் பதம்சந்த், சி அரியந்த் ராஜ், ரஜினி கிஷன்
இசை: எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு: எஸ் எஸ் சதீஷ்குமார்
இயக்கம்: ரமேஷ் பாரதி
பி ஆர் ஓ: சதீஷ் (AIM)
கதையின் நாயகனான ரஜினி கிஷனும் நாயகியான திவிகாவும் காதலர்கள். அதிகப்படியான ஞாபக மறதிக்கு சொந்தக்காரர் ரஜினி கிஷன். இந்த சூழலில் காதலர்கள் ரஜினியும் திவிகாவும்; ஓடிப்போய், ஒன்றாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்கிறார்கள். திவிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் மாமா கூல் சுரேஷ். இவர்களின் ஒடிப்போகும் திட்டத்தை தடுக்க முயற்சிக்கும் கூல் சுரேஷை ஏமாற்றி விட்டு இருவரும் ஊரை விட்டு வெளியேற முயலும்போது முனீஷ்காந்த் தனது காரில் அவர்களை அழைத்து செல்கிறார். அதே சமயத்தில் நகைகள் திருடி ஓடும் கல்கியும் இதே காரில் ஏறுவதால் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்கின்றன. இரவு நேரத்தில் பயணிப்பதில் இவர்கள், ஏடாகூடமான இடத்தில் சிக்கி விடுகிறார்கள். இதற்கிடையில் இவர்களை சிலர் வலைபோட்டு தேடுகிறார்கள். இந்த சூழலில், கல்கி திருடி வந்த தாலியைக் கொண்டு திவிகாவின் கழுத்தில் கட்டி அவரை தனது மனைவியாக்கிக் கொள்கிறார் ரஜினி கிஷன். நாயகன் ரஜினி கிஷன் கட்டும் அந்தத் தாலியில் பேய் இருப்பது வெளிச்சத்துக்கு வரும் போது, நாயகி திவிகாவுக்கு அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் “ரஜினி கேங்” படத்தின் மீதிக் கதை.
நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், அறிமுக நடிகர் போல் இல்லாமல் நடனம்,சண்டை என எல்லாவற்றிலும் சரியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.அறிமுக நடிகர்கள் தொடத் தயங்குகிற நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் திவிகா,பார்த்தவுடன் ஈர்ப்பவராக இருக்கிறார்.அது மட்டுமின்றி, படத்தின் கதைக்கேற்றவராகவும் இருப்பது படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் ஒரே மாதிரியான ரியாக்ஷனை கொடுத்து பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறார். கூல் சுரேஷ் தேவையில்லாமல் கத்திக்கொண்டு இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக நேர்த்தியாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல் காட்சிகளையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ்பாரதி, படம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இயக்கியிருக்கிறார்.அதற்காகவே முனீஷ்காந்த்தை தூங்கி வழிபவராகவும் மொட்டை ராஜேந்திரனை ஆவிகள் மையம் நடத்துபவராகவும் வடிவமைத்திருக்கிறார். திகில் மற்றும் நகைச்சுவைப் படங்களுக்குரிய அம்சங்கள் அனைத்தையும் கலந்து கொடுத்து சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர்.
‘ரஜினி கேங்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்..