‘B P 180’ திரைப்பட விமர்சனம்!

105

 

CHENNAI:

படம்: B P 180

நடிப்பு: டேனியல் பாலாஜி, அருள் தாஸ், தானியா ரவிச்சந்திரன், தமிழ்

தயாரிப்பு: பிரதிக் டி சாட்பார், அதுல் எம் போஸமியா,

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: ராமலிங்கம்

இயக்கம்: ஜெ பி

பிஆர்ஓ:
சுரேஷ் சந்திரா, (D’One), அப்துல் ஏ நாசர்

வடசென்னைப் பகுதியான காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.ஒரு கட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் செய்யும் செயல் அனைவரையும் கோபப்படுத்துகிறது.அவரைத் தீர்த்துக் கட்டத் துணிகிறார்கள்.அந்தப் பகுதியில் பிரபல ரவுடி டேனியல் பாலாஜி, நாயகி தன்யாவை மிரட்டுகிறார். அவர் பயப்படாமல் டேனியல் பாலாஜியும் அசிங்கப்படும்படி செய்கிறார். இதனால் நாயகி தன்யாவைக் கொன்றே தீருவேன் என்று டேனியல் பாலாஜி புறப்படுகிறார். இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் ‘ B P 180‘ படத்தின் மீதிக் கதை.

நேர்மையான ஒரு மருத்துவராக தெம்பும் திடமுமாக நடித்திருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.டேனியல் பாலாஜியிடம் நேருக்கு நேர் சவால்விடும் காட்சியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். வில்லனின் மிரட்டல்களை அஞ்சாமல் எதிர்கொள்ளும் காட்சிகளில் அவர் தன்னம்பிக்கையான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

டேனியல் பாலாஜி, அர்னால்டு எனும் கொடூரமான பாத்திரத்தை அசத்தலாக வெளிப்படுத்தியுள்ளார். அவரின் நடிப்பு, அந்த கதாபாத்திரத்தை வெறுக்கும்படி பார்வையாளரைத் தள்ளுகிறது. அவர் ஒரு பெண்ணிடம் அவமானப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு அவருக்குப் புகழ் சேர்க்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமுதாய ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோரும் மிக சிறப்பாக தங்களது பணியை செய்து இருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் இருள் மற்றும் பகல் இரண்டிலும்  சரிவிகிதத்தில் கலந்து காட்சிகளைக் கொடுத்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.

பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் வேகத்தை மேலும் உயர்த்தி இருக்கிறார்.

இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஜெ பி . மாறுபட்ட கதை களத்தை வித்தியாசமாக கையாண்டு இருந்தாலும்  காவல்துறை ஆணையரை மட்டும் இன்றி, ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்படும் வகையில் காட்சி வைத்திருப்பது ஏற்க முடியவில்லை. ஆனாலும்  ஒருமுறை பார்க்கத்தக்க திரைப்படமாக ‘B P180’ அமைந்துள்ளது.

ரேட்டிங் 3/5.