
CHENNAI:
படம்: ஐ பி எல்
நடிப்பு: கிஷோர், டி டி எஃப் வாசன், அபிராமி, குஷிதா, நரேன், திலீபன் ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரிஷ் பெராடி, சிங்க புலி
தயாரிப்பு: ஜி ஆர் மதன் கிருஷ்ணன்
இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி
ஒளிப்பதிவு: எஸ் பிச்சுமணி
இயக்கம்: கருணாநிதி
பிஆர்ஓ: நிகில் முருகன்.
போஸ் வெங்கட் மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விடுகிறான் என்று சந்தேகப்படுகிறார். அவனை காவல் நிலையம் கொண்டு சென்று கடுமையாகத் தாக்குகிறார் அவன் கஸ்டடியில் இறந்து விடுகிறான். அப்போது அவனது செல் போனை ஆராயும் போது உயர்ந்த நிலையில் இருக்கும் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். அதற்குப் பிறகு பல ரகசியமான அரசியல் செயல்பாடுகள் நடக்கின்றன. அந்த லாக்கப் மரணத்திற்கு அப்பாவியான வாடகை கார் ஓட்டும் கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள்.மேலிடத்து அழுத்தத்தால் அவரைத் துன்புறுத்தி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள்.அந்த கிஷோரின் தங்கையை நாயகன் ,டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார். குற்றம் செய்யாத கிஷோரை குற்றவாளியாக்கி தண்டனை பெற்றுக் கொடுக்க அதிகார வர்க்கம் முயற்சிக்க, அவரை காப்பாற்ற அவரது தங்கையின் காதலரான டி.டி.எஃப்.வாசன் முயற்சிக்கிறார். இறுதியில் கிஷோரை இந்த வழக்கில் இருந்து டிடிஎஃப் வாசன் காப்பாற்றினாரா இல்லையா என்பதே ‘ ஐ பி எல்’ படத்தின் மீதிக் கதை.
கிஷோர் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக காவல் நிலையத்தில் அவர் எதிர்கொள்ளும் கொடுமைகள் பார்வையாளர்களை கலங்க வைக்கிறது.
அறிமுக நடிகர் டி.டி.எஃப்.வாசன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டும் தனது தனித்துவத்தை படத்திலும் வெளிக்காட்டி இருந்தாலும், அந்த காட்சி பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி கொடூரமான முகத்தை கச்சிதமாக கையாண்டு மிரட்டுகிறார். மற்றொரு காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன் நடிப்பு அளவு. காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் தனது அதிகப்படியான நடிப்பில் தலைவலியை ஏற்படுத்துகிறார்.
கிஷோரின் மனைவியாக நடித்திருக்கு அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறை சொல்ல முடியாத வகையில் பயணித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் எஸ்.பிச்சமணி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். இருசக்கர வாகன சேசிங் காட்சியை படமாக்குவதில் கடினமாக உழைத்திருக்கிறார்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற நமது அரசியல் சட்டத்தின் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் நாட்டில் நடக்கும் பல அவலங்கள் நிரபராதிகள் பாதிக்கப்படும் காட்சிகள் கொடுமையின் சாட்சிகளாக உள்ளன. சிறை படுகொலைகளின் பின்னணியில் இருக்கும் உண்மைகளையும் தைரியமாக சொல்லி கைதட்டல் பெறுகிறார் இயக்குனர் கருணாநிதி.
ரேட்டிங் 3/5