
CHENNAI:
படம்: கொம்பு சீவி
நடிப்பு: சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட், முனீஸ் காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா
தயாரிப்பு :முகேஷ்.T.செல்லையா
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு:
பால சுப்பிரமணியம்
இயக்கம்: பொன் ராம்
பிஆர்ஓ: நிகில் முருகன்.
வைகை அணை கட்டுவதற்காகக் காலி செய்யப்பட்ட ஒரு கிராமத்து மனிதர்களின் கதையாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.அப்படி வைகை அணை நீரில் மூழ்கி இருக்கும் ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் தான் சரத்குமாரும், சண்முகப் பாண்டியனும்.ரொக்கப்புலி என்கிற சரத்குமார் பாண்டி என்கிற சண்முக பாண்டியனுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்து வருகிறார், வைகை அணை கட்டும் போது சுமார் 12 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால், அந்த கிராம மக்கள் வேறு ஒரு இடத்திற்கு குடியமர்த்தப்படுகிறர்கள். ஆனால், அங்கு விவசாயம் செய்வதற்கான வசதிகள் இல்லாததால், அணையின் நீர் மட்டம் குறைந்து, அவர்களது நிலம் தெரியும் போது அவர்கள் அங்கு விவசாயம் செய்கிறார்கள். மீண்டும் அணை நிரம்பியதும் அவர்களது நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் போது, வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள். தங்கள் பிழைப்புக்காக சிலர் சில தவறான வேலைகளை செய்கிறார்கள். அப்படி செய்பவர்களுக்கு துணையாக நிற்கிறார் சரத்குமார்.
இதற்கிடையே, இதே பிரச்சனையால் வாழ்வாதாரத்தை இழந்ததோடு, அதன் காரணமாக தனது பெற்றோரையும் இழந்த சண்முக பாண்டியன், சிறு வயதில் ஆதரவு கொடுத்து வளர்த்த சரத்குமாருடன் வேலைக்கு சேர்ந்து அவரைப் போலவே தவறான செயல்களில் ஈடுபடுகிறார். பணம் இல்லாததால் தனது பெற்றோரை இழந்ததால், அதே பணத்தை அதிகமாக சம்பாதித்து, பண மெத்தையில் படுக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரி இவர்கள் இருவர் மீதும் வஞ்சம் வைத்து தீர்த்து கட்ட நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் ‘கொம்பு சீவி’ படத்தின் மீதிக் கதை.
தன்னைக் கடித்த பாம்பை கையில் பிடித்தபடி, ஆஸ்பத்திரிக்கு வரும் ரொக்கப் புலியாக சரத்குமார் கலக்கி இருக்கிறார்.கிண்டல், நையாண்டிமாக கோபம், கெத்தான உடல்மொழி என மதுரை சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார். சரத்குமார். அதோடு ஆக்ஷன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக் கொண்டு செய்யும் அவர் செய்யும் நையாண்டிகள் என அடிதடி சென்டிமென்ட் நகைச்சுவையில் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருந்தாலும், உடல் மொழியில் அதை வெளிக்காட்ட முடியாமல் முயற்சி செய்வதுபல இடங்களில் தெரிகிறது.அம்மாவுக்கு பேய் பிடித்து விட்டது என்று கேள்விப்பட்டு வந்து தலையை வாரிக் கொள்வது, நாயகி தார்னிகாவை பார்த்து ஜொள்ளு விடுவது போன்ற காட்சிகளில் தன்னால் முடிந்தவரை சமாளித்து நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியாக மிடுக்காகவும், எடுப்பாகவும் இருக்கிறார். புடவையில் கூடுதல் கவனம் ஈர்ப்பவர், கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் கிடைத்தால், நடிப்பில் கலக்குவார் என்பது நன்றாக தெரிகிறது.
ஆண்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் கான்ஸ்டபிள்களாக வரும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான்,லாரி டிரைவராக முனீஷ் காந்த்,சரத்குமார் உடன் சுற்றும் அல்லக்கையாக கல்கி ராஜா ஆகியோர் தங்கள் நகைச்சுவைக்கான பங்கைச் செய்துள்ளனர்.
காவல்துறை அதிகாரியாக சிறிய வில்லத்தனம் காட்டி நடித்திருக்கும் சுஜித் சங்கர், சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ‘வஸ்தாரா’ பாடல் நன்றாக வந்திருக்கிறது.
பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் படம் குழுவதும் பளிச்சென்று கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக வைகை அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளாக காட்டப்படும் பகுதிகளை காட்சிப்படுத்திய விதம் மிக அருமை.
வைகை அணை கட்டப்பட்ட பின்னணியை மையமாக வைத்து கதையை அமைத்திருக்கும் இயக்குனர் பொன் ராம், பலருக்கு நன்மை பயக்கும் அணையாக இருந்தாலும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்யாமல், வழக்கமான கமர்ஷியல் பாணியிலான படமாக மட்டுமே பயணிக்கிறது.
ரேட்டிங் 3/5.