‘ரெட் லேபில்’ திரைப்பட விமர்சனம்!

57

 

CHENNAI:

படம்: ரெட் லேபில்

நடிப்பு: லெனின், ஆர்வி உதயகுமார், முனிஷ்காந்த், அனுமோகன், அஸ்மின்

தயாரிப்பு: லெனின்

இசை: கைலாஷ் மேனன்

ஒளிப்பதிவு: சதீஷ் மெய்யப்பன்

இயக்கம்: ஏ ஆர் வினோத்

பிஆர்ஓ: ஸ்ரீதர் ராஜு, ஹரிபாபு, உதயகுமார்.

கோவையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து முடித்த லெனின், அவர் படிக்கும் காலத்தில் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல அடிதடி, போலீஸ் வழக்கு என்று பல சம்பவங்களை செய்திருக்கிறார்.பிறகு அதையெல்லாம் விட்டுவிட்டு சாந்தமான மாற்றங்களுடன்  சொந்த தொழில் செய்துக் கொண்டு இருக்கிறார். அவர் எம்.எல்.ஏ. ஆர்.வி.உதயகுமாரின் மகளான கல்லூரி மாணவி அஸ்மினைக் காதலிக்கிறார்.

அவர் தான் படித்த கல்லூரியில் நடக்கும் மாணவர் தேர்தல் முறைகேடுகள் மற்றும் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் ஒரு போராளியாக லெனின்  இருக்கிறார். தன் காதலியின் தந்தை ஆர்.வி.உதயகுமார் எம்எல்ஏ ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் அதிகாரமிக்க மனிதர் மட்டுமல்ல  லஞ்சம், ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்.  இந்த சூழலில் அவர் படித்த கல்லூரியில் மாணவர் தேர்தல் நடப்பதால் அதில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த சூழலில் சமாதானப் பாதையில் செல்லவே முடிவெடுத்தவர் ஒரு கட்டத்தில்,கல்லூரிக்குள்ளேயே ஒரு கொலை செய்யும் அளவிற்குச் சென்று விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில், கொலை குற்றத்திலும் சிக்கினால் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதால், குற்றத்தில் இருந்து தப்பிக்க, தனது காதலியான அந்த கல்லூரி மாணவி அஸ்மினின் உதவியோடு ஒரு திட்டம் போடுகிறார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரை தேடி கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ் வருவதோடு,  ஆர்.வி.உதயகுமார் எம்எல்ஏ ஆட்களும் தேட தொடங்குகிறார்கள். இவர்களை தாண்டி லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘ரெட் லேபில்’ படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாதவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்.  கல்லூரி மாணவர், அதற்குப் பின்னான இளைஞர் ஆகிய இருவேறு தோற்றங்களிலும் அதற்கேற்ற நடிப்பிலும் வரவேற்புப் பெறுகிறார்.அவருக்கு இதுதான் முதல்படம் என்பது சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அஸ்மினுக்கு சும்மா வந்து போகிற கதாபாத்திரமில்லை.திரைக்கதையில் முக்கியமான இடம் அவருக்கு இருக்கிறது.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

எதிர்நாயகனாக நடித்திருக்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.அவருடைய் நிஜ வாழ்வை ஒட்டிய கதாபாத்திரம்.நிஜத்தில் அவர் நல்லவர் படத்தில் அவர் கெட்டவர்.அரசியல்வாதி மற்றும் கொங்குவட்டார வழக்கு ஆகியனவற்றிற்கு அவ்வளவு பொருத்தம்.

முனீஷ்காந்த், அனுமோகன் ஆகிய இருவரும் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை ரசிக்க வைத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பனின் பங்கு அதிகம். காட்சிகளில் பலவித தோற்ற மயக்கங்களை ஏற்படுத்தி சுவை கூட்டியிருக்கிறார்.

கைலாஷ் மேனன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.பின்னணி இசையில் திரைக்கதையோட்டத்தில் இருக்கும் பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறார்.

கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிக நேர்த்தியாக எழுதிருக்கும் பொன்.பார்த்திபன், பல திருப்பங்கள் மூலம் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் அதிக கவனத்துடன் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.

ஒரு சிறிய பட்ஜெட்டில் ஒரு நிறைவான திருப்தியான பட அனுபவத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் கே.ஆர்.வினோத் . இந்தக் கதையில் இருக்கை நுனியில் நம்மை இருத்தி வைக்கும் காட்சிகளும் உள்ளன.கதைக்களம் ஒரு கல்லூரிதான் என்றாலும் அதற்குள் பல்வேறு பரிமாணங்களை வைத்து, அடுத்து என்னநடக்கும்? என்கிற எதிர்பார்ப்போடும் படபடப்போடும் பார்க்க வைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர்.

மொத்தத்தில், ‘ரெட் லேபில்’ படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.