
CHENNAI:
படம்: யூத்
நடிப்பு: கென் கருணாஸ், அனிஷ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், தேவதர்ஷினி, நளினி சுராஜ் வெஞ்சாரமூடு
தயாரிப்பு: கருப்பையா சி ராம் சுலோச்சனா குமார்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: விக்கி
இயக்கம்: கென் கருணாஸ் அண்ட் கேங்
பிஆர்ஓ : பரணி அழகிரி.
பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் பதினோராம் வகுப்பில் சேரமுடியாத சிக்கலில் இருக்கும் நாயகன் கென்கருணாசை தந்தை சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் அம்மா தேவதர்ஷினி ஆகியோர் பள்ளி முதல்வரிடம் மிகவும் போராடி , கெஞ்சி 11 ஆம் வகுப்பில் சேர்க்கிறார்கள். அந்த பள்ளியில் சுமாரான மாணவராக இருப்பதுடன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு அரட்டை அடிப்பது மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகளை காதலிப்பதற்காக தேடி அலைவது என்று விளையாட்டுப் பிள்ளையாக சுற்றித் திரிகிறார் கென்கருணாஸ். தந்தையின் அக்கறை, அம்மாவின் நம்பிக்கை இரண்டையும் நினைத்துப் பார்க்காமல் வயது கோளாறில் எந்த நேரமும் காதல் மயகத்திலேயே இருக்கும் கென் கருணாஸ், பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் இரண்டு காதல்களை கடக்கிறார். இதற்கடுத்து கென்னின் வகுப்பிலேயே படிக்கும் அனிஷ்மா கென்னிடம் மிகவும் நெருங்கி நட்பாக பழகுகிறார்.
இந்த நட்பை ஒரு கட்டத்தில் காதல் என்று நினைக்கிறார் கென். ஆனால் அனிஷ்மாவோ “இது வெறும் பிரண்ட்ஷிப் தான். இப்போது நமக்கு படிப்பு தான் முக்கியம்” என்கிறார். மூன்றாவதாக அனிஷ்மா தன்னைக் காதலிக்கிறார் என்று நினைக்கும்போது, அவர் நட்பாகத்தான் பழகினேன் அப்படி எல்லாம் ஒன்றும் நமக்குள் எந்தக் காதலும் இல்லை என்று சொல்லி விலகி செல்கிறார். இந்த சூழலில் கென்னிடம் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்று விட்டால் உன்னை காதலிக்கிறேன் என்ற நிபந்தனையுடன் கென்னை விட்டு பிரிகிறார். இறுதியில் கென் கருணாஸ் காதல் ஜெயித்ததா? அல்லது அவரது படிப்பு ஜெயித்ததா? என்பதை இளம் வாலிபர்களுக்கும், இளம்பெண்சுகளுக்கும் ரசிக்கும் வகையில் சொல்லும் படம்தான் ‘யூத்’.
இந்த படத்தின் முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த இளம் வயதில் கென் கருணாஸ். இயக்குனராகவும், நாயகனாகவும் இரட்டை பொறுப்பை ஏற்று, முதல் முயற்சியிலேயே தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற்று வியக்க வைத்துள்ளார். துள்ளலான நடிப்பு நகைச்சுவை நடனம் என்று வணிக ரீதியான அம்சங்களை வெளிப்படுத்தியதுடன் சின்ன சின்ன முக பாவனைகள் மூலம் நுணுக்கமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள்.மூவரும் பள்ளி மாணவிகளாக மிக சிறப்பாக நடித்துள்ள்னர்.
சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் தேவதர்ஷினி இருவரும் தங்களின் அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தி நடிப்பில் கலக்கி இருக்கின்றனர்.
கென் கருணாஸின் நண்பர்களாக வரும் உடல் பருமன் கொண்ட வாலிபன், கண்ணாடி போட்ட, மீசை இல்லாத என்று வரும் அனைவருமே மனதில் பதிகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இவர்கள் காதலுக்கு குறுக்கே வரும் அந்த உடல் பருமன் கொண்ட பெண்ணும் அவரது தோழியும் என்று அனைவருமே நம் மனதில் பதிகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விக்கி, படத்தை வண்ணமயமாகக் காட்டியிருப்பதோடு, பார்த்தவுடன் பரவசம் கொள்ளும் வகையிலும் காட்சிகளை வடிவமைத்துப் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசை காதல் கொண்டாட்டத்துடன் படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் கென் கருணாஸ் கதையை தனக்கே மையப்படுத்தாமல், மற்ற கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கி நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கும் பண்பு,எல்லாவற்றையும் நேர்மறையாக அணுகும் போக்கு ஆகியனவற்றின் மூலம் இயக்குநராகவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். ஒரு மாணவனின் குடும்பமும் படிப்பும்தான் சரியான வாழ்க்கைக்குத் தேவையானவை எனும் கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில், ‘யூத்’ இள வயதினரை ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 4/5.