‘நீ for ever’ திரைப்பட விமர்சனம்!

65

 

CHENNAI:

படம்: நீ பார் எவர் ( நீ for ever)

நடிப்பு: சுதர்சன் கோவிந்த்,, அர்ச்சனா ரவி, பிரதோஷ், நோபல் ஜேம்ஸ், வித்யா, ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, ரெத்திகா, எம் ஜே ஸ்ரீராம்

தயாரிப்பு: புகழ் அண்ட் ஈடன்

இசை: அஸ்வின் ஹேம்நாத்

ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சாரியார்

இயக்கம்: அசோக் குமார் கலைவாணி

பிஆர்ஓ : சதீஷ் (AIM)

உண்மையான காதலர்களுக்காக ஒரு டேட்டிங் ஆப் ஒன்றை கண்டுபிடிக்கிறார் நாயகன் சுதர்ஷன். அந்த ஆப்’பிற்கு நீ Forever என்று பெயரும் வைக்கிறார். இந்த ஆப்’பை டெவலப் செய்வதற்காக முதலீட்டார்கள் பலரையும் சென்று சந்திக்கிறார். ஆனால், யாரும் கைகொடுக்கவில்லை. பலரைத் தாண்டி, ஒருவர் அந்த ஆப்’பிற்கு ஓகே சொல்ல, காதலைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு வருமாறும் சுதர்ஷனை பார்த்து கூறி விடுகிறார் அந்த முதலீட்டாளர்.  இந்த சூழலில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் நாயகி அர்ச்சனா ரவி, குடும்ப வாழ்க்கையை நம்பாமல் தனித்து வாழ விரும்புவதோடு, திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார். அதற்காக பலரிடமும் சென்று கதை கூறி வருகிறார். ஒரு நாள் தயாரிப்பாளர் ஒருவர் நல்லதொரு காதல் கதை இருந்தால் கூறுங்கள் என்று கூற, காதலைப் பற்றி அறிய எண்ணுகிறார் அர்ச்சனா. இதற்கிடையே காதல் மற்றும் காதலர்களுக்கான செயலியை உருவாக்குவதற்கு, போலியாக ஒரு பெண்ணை காதலித்து அதன் மூலம் காதல் பற்றி தெரிந்துக்கொள்ள நாயகன் முடிவு செய்கிறார். அதே போல், நாயகியும் காதல் கதை எழுதுவதற்காக போலியாக ஒருவரை காதலிக்க முடிவு செய்கிறார். இப்படி போலியாக காதலிக்க நினைக்கும் இவர்கள் ஒருவரை சந்தித்துக் கொள்கிறார்கள். அந்த சமயத்தில் இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல்  போகிறார்கள், ஆனாலும் இவர்களை விதி எப்படி ஒன்று சேர்த்தது? இருவரது எண்ணங்களையும், வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது, என்பது தான்  ‘நீ பார் எவர்’ படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், ஆறடிக்கு மேலான உயரத்தில் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அம்சங்களோடு இருந்தாலும், அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் புரிவதில் மாஸ்டர் டிகிரி வாங்கியிருப்பார் போல, காதலை கண்கள் வழியாக கடத்தியதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார் சுதர்ஷன்.

அழகு தேவதையாக படம் முழுக்க வந்து நம் மனதிற்குள் தங்கிவிடுகிறார் நாயகி அர்ச்சனா. கண்களால் காதலை கடத்தும் போது இதயத்திற்கு நெருக்கமாக சென்று விடுகிறார் அர்ச்சனா.

துணை நடிகர்களான பிரதோஷ், நோபல் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கதைக்கு உறுதுணையாக உள்ளனர். மூத்த நடிகர்களான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் நிழல்கள் ரவி, தங்களின் அனுபவத்தால் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறார்கள்.

ராஜா பட்டாச்சாரியின் ஒளிப்பதிவு, சென்னை மற்றும் பொள்ளாச்சியின் அழகை கண்கவர் வகையில் பதிவு செய்து இருக்கிறது.

இசையமைப்பாளர்  அஸ்வினி ஹேம்நாத்தின் மென்மையான இசையால் நம்மை ரசிக்கும்படி செய்துள்ளார். பின்னணி இசை சுமார் தான்.

நிகழ்கால காதலை மிக அழகாக காட்சிப்படுத்தி, அதனை ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகூற கொடுத்திருக்கிறார். திரையில் கொடுக்கும் உணர்வுகளை நமக்குள்ளும் கடத்திக் கொண்டுச் சென்றதால், இயக்குனராக வென்றிருக்கிறார் அசோக்குமார் கலைவாணி,.

மொத்தத்தில் ’நீ ஃபார் எவர்’ இளைஞர்களைக் கவரும் படம்.

 

ரேட்டிங் 3.5/5