’லீடர்’ திரைப்பட விமர்சனம்

55

 

சென்னை:

படம்: லீடர்

நடிப்பு: லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், அமிர்தா அய்யர், பாகுபலி பிரபாகரன், வி டி வி கணேஷ், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், இயல், பத்மன், யோகிராம் , வேல அருணாச்சலம், அறந்தாங்கி நிஷா, ஆதித்யா கதிர், நிரஞ்சன் தாமஸ், படவா கோபி, அசோக் பாண்டியன், சோபன் பாபு, விஜயலட்சுமி, முருகன், ஜெய ஸ்மித்ரா குமார் நடராஜன்

தயாரிப்பு: லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரடக்சன்ஸ்

இசை: ஜிப்ரான் வைபோதா

ஸ்டன்ட்ஸ் : மகேஷ் மேத்யூ

ஒளிப்பதிவு: வெங்கடேஷ். எஸ்

இயக்கம்: ஆர் எஸ் துரை செந்தில்குமார்

பி ஆர் ஓ : நிகில் முருகன்.

தூத்துக்குடியில் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார் சக்தி (Legend சரவணன்), இவர் VTV கணேஷ்-ன் கார் ஷெட்டில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். அங்கு வரும் பெரும்பாலான கார்கள் தூத்துக்குடி துறைமுகத்தை தன் வசம் வைத்திருக்கும் ரவுடி பாகுபலி பிரபாகரன் என்பவரின் கார்கள் தான். போலீசாக இருக்கும் ஆண்ட்ரியா துறைமுகத்தில் இருக்கும் ஒரு கன்டெய்னரில் மர்மமான பொருள் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அறிந்து அதை மேலிட போலீஸ் அதிகாரிகளிடத்தில் சொல்கிறார். ஆனால், விஷயம் பெரிது என்பதால் மேல் அதிகாரிகள் யாரும் இதில் தலையிட வேண்டாம் என்கின்றனர்.

தூத்துக்குடி துறைமுகத்திற்குள் அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து அந்த வேலையை செய்ய முடிவு செய்கிறார் ஆண்ட்ரியா . அதன்படி,  ஆண்ட்ரியா போடும் திட்டத்தால் லெஜண்ட் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருளை போலீஸிடம் சிக்க வைப்பதோடு, அவரது சாம்ராஜ்யத்தையே அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்.  இந்த சூழலில் லெஜண்ட் சரவணனின் குழந்தையை சர்வதேச கடத்தல் கூட்டம் கடத்தி வைத்துக் கொண்டு  போலீஸ் கஸ்டடியில் இருக்கும் பலகோடி மதிப்புள்ள வெடிபொருள் மருந்தை மீட்டுத் தந்தால் தான் குழந்தையை விடுவிப்போம் என்று மிரட்டல் விடுகிறது . உயிருக்குயிராக வளர்க்கும் குழந்தைக்காக தன் உயிரையும் பணயம் வைத்து இந்த வேலையை செய்து முடிக்க துணிகிறார்.  லெஜண்ட் சரவணன் ஒரு சாதாரண கார் மெக்கானிக் அல்ல என்று போலீஸ் அதிகாரி ஷாம் சந்தேகப் படுகிறார். இதையடுத்து ஷாம், மேற்கொள்ளும் தொடர் விசாரணையில் லெஜண்ட் சரவணன் பற்றிய பல உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் என்ன? கடத்தப்பட்ட குழந்தையை லெஜண்ட் சரவணன் காப்பாற்றி மீட்டு வந்தாரா? என்பதுதான் “லீடர்” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் லெஜண்ட் சரவணனுக்கு இது இரண்டாவது படம். முதல்படத்தில் அவரை அவராகவே பார்த்தவர்கள் இப்படத்தில் கதாபாத்திரமாகவே பார்க்கிறார்கள் என்பது அவரது நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தன் மகள் மீதான பாசத்தை காட்டும் காட்சிகளில் இப்படத்தின் கதையின்  தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத்துக்கு, மகளைப் பெற்றெடுத்துவிட்டு மறைந்து விடுகிற சிறிய வேடம் என்றாலும் அதிலும் தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார்.மகளாக நடித்திருக்கும் சிறுமி இயல் பொருத்தம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஷாம், வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

நகைச்சுவைக்காக விடிவி.கணேஷ்,அறந்தாங்கி நிஷா ஆகியோர் இருக்கிறார்கள்.அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள். லால்,பிரபாகர்,அம்ரிதா ஐயர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசை படத்திற்கு முக்கிய பலமாக திருப்புகழ் பாடலான முத்தைத்திரு பத்தித் திருநகை கேட்கும்போதே சிலிர்க்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருபது சிறப்பு.

ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ்,  கதாநாயகனையும், அவரது சண்டைக்காட்சிகளையும் படமாக்கிய விதம் ரசிக்க கூடிய விதத்தில் இருக்கிறது.

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, கருடன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இப்படத்திலும் ஒரு இயக்குனரால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டி விட்டார். லெஜண்ட் சரவணனின் பலத்தை உணர்ந்து, அவருக்குப் பொருந்தும் வகையிலான ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளை நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். இப்படத்தின் மையக்கதை பழமையானது என்றாலும் புதிய கிளைக்கதைகள் பல எதிர்பாரா திருப்பங்கள் ஆகியனவற்றைக் கலந்து ஒரு பரபரப்பான படமாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘லீடர்’  ஆக்ஷன் ரசிகர்கள் பார்க்கும் படம்.

ரேட்டிங் 3/5