
CHENNAI:
பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ,அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர் ஆகியோர் “காளிதாஸ் 2 ” படத்தில் நடித்துள்ளனர். கதை எழுதி இயக்கியுள்ளார் ஸ்ரீ செந்தில் . திரைக்கதை – அரவிந்தன் ஆனந்த்,இசை – சாம் சி.எஸ்,ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன்,கலை இயக்குநர் – கலியுக ஏ.ராஜா,சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ் .
தயாரிப்பு – ஸ்கை பிக்சர்ஸ் (“ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன்).
சென்னை ஊரப்பாக்கம் புறநகர் பகுதியில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் புத்தாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் 2025 டிசம்பரின் கடைசி நாளான நள்ளிரவில், அனைவரும் புத்தாண்டை எதிர்கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும் அந்தப் பொழுதில்அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணதி – அனந்த் நாக் இணையரின் 4 வயது பெண்குழந்தை மித்ரா என்கிற ஒரு குழந்தை காணாமல் போகிறது . இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளான பரத் மற்றும் பவானி ஸ்ரீ விசாரணையில், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் வருகிறது. அவர் யாருடனும் பழகாமல் மர்மமான முறையில் இருப்பதும், அந்தச் சிறுமி காணாமல் போன நேரத்தில் அவர் இருந்த இடமும் சந்தேகப்படும் விதத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சிறுமி மித்ரா அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறத்தில் ஒரு சூட்கேசில் சடலமாக மீட்கப்படுகிறாள். அந்தச் சிறுமியின் மரணம் தற்செயலான விபத்தல்ல, அது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதை மருத்துவ அறிக்கை உறுதி செய்கிறது. இந்த சமயத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், அவரை வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் காப்பாற்றி அழைத்துச் சென்று விடுகிறார். இந்த சூழலில் அதே குடியிருப்பில் இன்னொரு பெண்ணும் கொலை செய்யப்படுகிறார். இதனால் பரத்தும் பவானிஸ்ரீயும் ஒன்றும் புரியாமல் இந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். குற்றவாளி என ஒருவரை நெருங்கும் போது அது துலங்காமல் வேறு கோணத்தில் அவர்கள் விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள் . இப்படிப்பட்ட விசாரணை வேட்டையில் தீவிரமாக இறங்கும்போது வெவ்வேறு மர்மங்கள் வெளி வருகின்றன. இறுதியில் இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன? இந்த கொலைகளை செய்த கொலையாளி யார்? என்பதை பரத்தும், பவானிஸ்ரீயும்
இந்தப் படத்தில் விசாரணை செய்யும் காவல்துறை ஆய்வாளராக காளிதாஸ் பாத்திரத்தில் வரும் பரத் அந்தப் பாத்திரத்திற்குத் தோற்றத்திலும் உடல் மொழியிலும் நடிப்பிலும் சிறந்த முறையில் மிரட்டி இருக்கிறார். ஒரு காவல் அதிகாரியாக மிகுந்த துணிச்சலுடன் பயணித்தாலும், நிதானமான அணுகுமுறை மற்றும் கூர்மையான விசாரணை மூலம், நெருக்கடியான சூழ்நிலைகளை அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் எப்படி சாமர்த்தியமாக கையாண்டு தன் நடிப்பின் மூலம் பரத் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஸ்டீபன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இன்னொரு நாயகன் அஜய்கார்த்தி, குறைவான வசனங்கள் இருந்தாலும், தனது கண்கள் மற்றும் உடல்மொழியின் மூலம் புதுமுகம் என்பது தெரியாமல் நடிப்பில் அசத்தியுள்ளார்.
பவானி ஸ்ரீ, படத்திற்கும் அவர் கதாபாத்திரத்துக்கும் சிறப்பு சேர்த்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் சங்கீதா, மாறுபட்ட கதாபாத்திரத்தில் கவர்கிறார். பிரகாஷ் ராஜ், கிஷோர், அனந்தநாக் உள்ளிட்டவர்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.சிறியவே
அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் சென்னையை பல்வேறு கோணங்களில் காட்டி, அனைத்து காட்சிகளையும் பரபரப்பாக நகர்த்தி சென்று மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா,.
இப்படத்தின் த்ரில்லர் தன்மையை ஒவ்வொரு காட்சியிலும் மர்மத்தை நீடிக்கச் செய்வதில் இசை பெரும் பலம் என்பதால் சாம் சிஎஸ். மிக சிறப்பாகப் பின்னணி இசை அமைத்துள்ளார் .
கதை எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற விறுவிறுப்பு மற்றும் பரபரப்போடு ஒரு காவல் அதிகாரி சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அழுத்தங்களை எதார்த்தமாகப் இப்படத்தில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மை பற்றி தனித்தனியே நீட்டி முழக்காமல் போகிற போக்கில் சில காட்சிகள் மூலமே அவர்களது நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் குணச்சித்திரத்தை வடிவமைத்துள்ள இயக்குநரின் திறமை பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் “காளிதாஸ்-2” படம் க்ரைம் திரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.
ரேட்டிங் 4/5.