
CHENNAI:
படம்: LIK ((லவ் இன்சூரன்ஸ் கம்பெனி)
நடிப்பு : பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, மாளவிகா, கௌரி ஜி கிஷன், சாரா, ஆனந்தராஜ்
தயாரிப்பு: நயன்தாரா, எஸ் எஸ் லலித் குமார்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: ரவி வர்மன்
இயக்கம்: விக்னேஷ் சிவன்
பிஆர்ஓ : யுவராஜ்/
2040 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இளைஞர் கையிலும் லைக் (lik ) என்ற கம்பெனியின் கைபேசி செயலி இருக்கிறது. காதலித்துத் தோற்பவர்கள் காதல் மீதே கொலைவெறி கொள்வார்கள்.அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தான் பெற்ற துன்பத்தை இந்த வையகத்தில் வேறுயாரும் அடைந்துவிடக்கூடாது என எண்ணி, எல் ஐ கே என்கிற கைபேசி செயலியை உருவாக்குகிறார்.இந்த செயலி மூலம், பொருத்தமான காதல் இணையைத் தேர்வு செய்யலாம்,அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதை எந்நேரமும் கண்காணிக்கலாம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இந்தச் செயலிக்கு காதல் இணையரிடம் மட்டுமின்றி தம்பதியினரிடமும் நல்ல வரவேற்புப் பெற்றிருக்கிறது. அந்த செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் ஒரு வாடிக்கையாளரான நாயகி கிரித்தி ஷெட்டி, சிறு வயது முதலே ஸ்மார்ட்போனின் வழிகாட்டுதலின் மூலம் வளர்வதால், சமூக ஊடகங்களில் அதிக பின்தொடர்பவர்களை பெறுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே, கிரித்தி ஷெட்டியை கண்டதும் காதல் கொள்ளும் பிரதீப் ரங்கநாதன், அவருக்காக தன் அப்பாவுக்கு தெரியாமல் கைபேசி வாங்குவதோடு, அதன் மூலம் (lik ) செயலியில் தன்னை இணைத்துக் கொண்டு கிரித்தி ஷெட்டியுடன் தொடர்பையும் ஏற்படுத்தி கொண்டு நட்பாக பழகுகிறார். அவர்களது நட்பு காதலாக மாறும்போது, இருவரும் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்தபோது லைக் (lik ) செயலி 3 சதவீதம் தான் அவர்களுக்குள் பொருத்தம் உள்ளதாகக் கூறுகிறது. இதனால் பயந்து போன கிரித்தி,நமக்குள் காதல் சரிப்பட்டு வராது என்று பிரிந்து சென்று விடுகிறார் . அந்தச் செயலி, நாயகன் பிரதீப்பின் காதலுக்குக் குழி தோண்டி புதைத்து விடுகிறது.அதனால் வெகுண்டெழும் அவர்,அந்தச் செயலி மட்டுமல்ல எந்தக் கருவியாலும் காதலை அளக்கமுடியாது என்பதை நிறுவப் போராடுகிறார். அந்த போராட்டத்தில் பிரதீப் ரங்கநாதன், மீண்டும் காதலித்து வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் ‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் இதில் நாயகனாக வைப் வஸ்ஸி கதாபாத்திரத்தில் வருகிறார்.எளிமையான தோற்றம் இயல்பான நடிப்பு பக்கத்து வீட்டு வாலிபனைப் போன்ற முகம் இருந்தாலும் தன் காதலி மீது தான் வைத்திருக்கும் அன்பை அவர் வெளிக்காட்டும் காட்சிகள் நகைச்சுவையாக அனைவரையும் ரசிக்க வைக்கிறது. காதல் எல்லாவற்றையும் விடப் பெரிது என்று போராடி இளைஞர்களை ஈர்க்கிறார்.இப்படத்தில் அவர் எப்போதும் போல அதே துள்ளலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
‘Lik’ செயலியின் நிறுவனராக, மனித காதலுக்கும், உணர்வுகளுக்கும் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே..சூர்யா, தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மட்டுமே கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கிரித்தி ஷெட்டி அழகு தேவதையாக வருகிறார். இன்ஸ்டாகிராமில் தங்களை ஒப்படைத்துவிட்டு லைக்ஸ்காக ஏங்கி தவிக்கும் இளம்பெண்களின் செல்போன் அடிமைத்தனத்தை மிக கச்சிதமாக செய்திருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக அன்புக்கடல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் செந்தமிழன் சீமான்.இந்தத் தேர்தல் பருவத்தில் அவரது பாத்திரம் படத்திற்குப் பலம் சேர்ப்பதாக உள்ளது.
இப்படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, நகைச்சுவையில் எந்த மாற்றத்தையும் வெளிக்காட்டவில்லை. முதல் முறையாக கவர்ச்சியான உடைகளோடு வலம் வரும் கெளரி கிஷன் தாக்கம் ஏற்படுத்தாத வேடத்தில் வலம் வருகிறார். பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்திருக்கும் ஷாரா கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
2040 ஆம் ஆண்டு எப்படியிருக்கும் என்பதை தன் கருவி மூலம் காட்டி வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமான பின்னணியோடு காட்சிப்படுத்தப்பட்டு கண்களை குளிர வைக்கிறது.
அனிருத்தின் இசையில் அமைந்த பாடல்கள்.பின்னணி இசையும் திரைக்கதைக்கேற்ப பயணித்திருக்
‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) ஒரு வித்தியாசமான சிந்தனையை முன்வைக்கும் முயற்சி. ஆனால் அந்த சிந்தனையை முழுமையான திரை அனுபவமாக மாற்றுவதில் படம் சில இடங்களில் தடுமாற்றம் ஏற்படுகிறது. மனித உணர்வுகள் எந்திரக் கணிப்புகளுக்கு அடங்காதவை என்கிற கருத்தை இந்தப் படத்தின் மூலம் கூறி காதலர்களை மகிழ்ச்சியடைய வைத்து இருக்கிறார். தன் கற்பனையில் கண்ட கனவு உலகத்தைக் கண் முன் திரையில் நிறுவி அசத்தியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
மொத்தத்தில், ‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.