‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்பட விமர்சனம்

43

 

படம் : மனிதன் தெய்மாகலாம்

நடிப்பு: செல்வராகவன், மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன், கௌசல்யா, குஷி ரவி இவர்களுடன் சதீஷ்

தயாரிப்பு: சதீஷ்

இசை: ஏ கே பிரியன்

ஒளிப்பதிவு : ரவி வர்மா

இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்

பிஆர்ஓ : ரேகா.

மலைக்கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார் செல்வராகவன். அங்கு பதனீர் விற்று தனது பிழைப்பை பார்த்து வருகிறார். மலைகிராமம் என்பதால், ஆட்சியாளர்கள் அந்த கிராமத்தை சரிவர கவனித்துக் கொள்வதில்லை. மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரமும் நீட்டுவதில்லை. அங்கு சரியான சாலை வசதியோ, மின்சார வசதியோ, மருத்துவ வசதியோ என எந்தவொரு வசதியும் அந்த கிராமத்திற்கு கிடைப்பதில்லை. இந்த சூழலில், பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, குஷி ரவியை திருமணம் செய்து கொள்கிறார் செல்வராகவன். தன்னை ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்வதற்காக பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் அமைச்சரின் உறவினரான வில்லன் க், தனியாக கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு, அவர்கள் அதனை கொடுக்கமுடியாத சூழலில்  அவர்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறார். செல்வராகவனுடன் இணைந்து குஷி ரவி மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது, மைம் கோபியால் திடீரென்று குஷி ரவி தற்கொலை செய்துக் கொள்கிறார். அதற்கான அதிர்ச்சிகரமான உண்மையை தெரிந்து கொள்ளும் செல்வராகவன் வெறித்தனத்துடன் தன் மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை பழி வாங்க துடிக்கிறார். தன் மனைவி தற்கொலை செய்ய தூண்டியவர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான்  ‘மனிதன் தெய்வமாகலாம்’.படத்தின் மீதிக் கதை.

அன்பான,அமைதியான குடும்பத்தலைவன்,அடிபட்ட புலி, சமுதாயப் பொறுப்பு மிக்க மனிதன் ஆகிய பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட வேடமேற்று அதற்கேற்ப நடிக்க முனைந்திருக்கிறார் செல்வராகவன்.பல இடங்களில் பொருத்தமாக இருக்கிறது.சில இடங்களில் நடிப்பில் கவனமின்றி  தடுமாறியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் குஷிரவி அழகான புதுவரவு. ஏற்றுக்கொண்ட வேடத்துக்கேற்ப நடித்து கவர்வதோடு கலங்கவும் வைத்துவிடுகிறார்.

செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கிறார் கெளசல்யா.ஒரு இடைவெளிக்குப் பின் வந்தாலும் நடிப்பில் அது தெரியவில்லை.கெளசல்யாவின் கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ் பாத்திரமும் நடிப்பும் நன்று.

கந்து வட்டிக்காரராக நடித்திருக்கும் மைம்கோபி, அமைச்சராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வழக்கம்போல நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நமக்கு மிகப்பெரும் ஆறுதல் தான். பாடல்கள் உருக வைத்துவிட்டன.

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத மலை கிராமங்களை, அங்கு வசிக்கும் மக்களை, அவர்கள் மனநிலைகளை, தன்னுடைய ஒளிப்பதிவில் அப்படியே காட்டி அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா.

எழுதி இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.ஒரு கணவன்-மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல் கதையையும்,திருமணத்திற்குப் பிறகும் காதல் இருக்கிறது என்பதையும், சாலை வசதியற்ற கிராம மக்களின் அவல வாழ்க்கை, அன்றாடம் கடக்க அவர்கள் படும் பாடு, சிறு வசதியாக வாழ்வதற்குக்கூட கடன் பெற வேண்டிய அவலம், கந்து வட்டிக்காரர்கள் கொடுமை, பணக்காரர்களின் இரக்கமற்ற தன்மை ,அரசியல்வாதிகளின் கபட நாடகம் என அனைத்தும் உள்ளடக்கிய ஒரு கதையாக இயக்கியுள்ளார் டென்னிஸ் மஞ்சுநாத்.

மொத்தத்தில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் மனதை கலங்க வைக்கும்.

ரேட்டிங் 3/5.