’பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast) திரைப்பட விமர்சனம்!

20

 

CHENNAI:

கிரிஜா வரதராஜ் தயாரித்திருக்கும் ‘பிரேக் ஃபாஸ்ட்’ படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். காந்தி கிருஷ்ணா

இப்படத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கந்த், ரவி மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ் குமார், பாடலாசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து – விவேக், ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம், எடிட்டிங்: எஸ் பாஸ்கர் மற்றும் சுஜித், கலை இயக்குனர்: ஆர் கே நாகு, ஸ்டண்ட்: ஸ்ரீதர், தயாரிப்பு நிர்வாகி: சங்கர் ஜி, காட்சி விளைவுகள் : துவாரகநாத் பாபு, வண்ணம்: ஜி எஸ் முத்து, ஒலி வடிவமைப்பு: லட்சுமி நாராயணன் ஏ.எஸ், இணை தயாரிப்பாளர்: தினேஷ் குமார் கே.வி, மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல் நாசர்.

பெரிய தொழில் அதிபர்  சம்பத் ராஜின் மகள் ரோஸ்மின்.அழகான படித்த சுய சிந்தனை உள்ள பெண்.  இந்த சூழலில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து சரியான வேலையின்றி கஷ்டப்படும் கிராமத்து இளைஞர் நாயகன் ராணவ்வுக்கு தனது நிறுவனத்தில் வேலை  போட்டுக்  கொடுக்கிறார்.  தொழிலதிபர் சம்பத் ராஜின் மகள்  ரோஸ்மின்  ராணவ்வுக்கு வேலை  போட்டுக்  கொடுத்தாலும் இருவரும் மிகுந்த நட்புடன் பழகுகின்றனர். இவர்களது நட்பு இருவரிடையே காதலாக மாறுகிறது. இவர்களது காதலை ஏற்றுக் கொள்ள கௌரவம் குறுக்கே நிற்க தந்தை சம்பத்ராஜ் இதை எதிர்க்கிறார். தந்தையின் சொல்லை மீறி  ராணவ்வை  திருமணம் செய்து கொண்டு அந்த நிறுவனத்தின் உயர் பதவியில் அமர்த்துகிறார் ரோஸ்மின்.

எந்த அளவிற்கு விரைவாக முடிவெடுத்து காதலில் வெற்றி பெற்றார்களோ அந்த அளவிற்கு அவர்கள் திருமணத்திற்குப் பிறகு இருவரிடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு அந்த நெருக்கம் குறைந்து  தவறான புரிதல்கள் காரணமாக இவர்களது வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது.  ரோஸ்மின் தனது ஆணவத்தால் காதல் கணவன் ராணவ்வை அவமானபடுத்தியதால்  எந்த ஒரு பெரிய காரணங்கள் இல்லாமலே இருவரும் பிரிய நேரிடுகிறது. இப்படி காதலித்த வேகத்தை விட  உடனே பிரிய வேண்டும், என்ற முடிவுக்கு இருவரும் வந்ததன்  நோக்கம் என்ன?  இறுதியில் இருவரும் ஒன்றிணைந்தார்களா? என்பதுதான்  ‘பிரேக் ஃபாஸ்ட்’ படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், முதல் படம் போல் அல்லாமல் மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞர், பெற்றோரை சரியாக கவனித்துக்கொள்ள முடியாமல் ஏற்படும் வேதனை, திருமணத்துக்குப் பின் மனைவியின் எதிர்பாரா நடவடிக்கைகளால் ஏற்படும் அதிர்ச்சி ஆகிய ஆழமான உணர்வுகளையும் அழுத்தமாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரோஸ்மின், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் வந்து கவனத்தைக் கவர்கிறார்.பணக்கார பெண்களுக்கு இருக்கும் அதிரடி செயல்களையும், மற்றவர்களை மதிக்காத நடவடிக்கைகளையும் தன் நடிப்பில் சரியாக முறையில் பிரதிபலித்திருக்கிறார்.அவர் இப்படத்தில் அனைவரிடமும் சம்பாதிக்கும் வெறுப்பு படத்துக்குப் பலமாக அமைந்து இருக்கிறது.

மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடி, வயதுக்கு ஏற்ப இளமை துள்ளல் மற்றும் மோதல் நடிப்பை வெளிப்படுத்திப் படத்தின் கதையின் திசை திருப்பத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சம்பத் ராஜ்,சாதாரண வில்லன் போல வராமல் ஒரு பணக்கார தந்தையின் குணச்சித்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மனநல மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக, கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை திரைக்கதையோடு இசைந்திருக்கிறது.

இப்படத்தின் கதையும்,  திரைக்கதையும் இயல்பான வசனங்கள் மூலம் முதிர்ச்சியான காட்சிகளும் ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பாராத திருப்பமும் என்று இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்கி இருக்கிறார்  ஆர். காந்தி கிருஷ்ணா. வேகமான காதல், அதைவிட வேகமான மோதல் என்று போய்க்கொண்டிருக்கும் இளைய தலைமுறை   காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும் அறிவுரை சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களை யோசிக்க வைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மொத்தத்தில், ‘பிரேக்ஃபாஸ்ட்’  படம் இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடம்.

ரேட்டிங் 3/5.