கிட்டி சினிமா விமர்சனம் :

24

 

வாக்குமூலத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மம்!
ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமாறன் தயாரித்திருக்கும் கிட்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நெடுமாறன் மோகன்தாஸ்.

இதில் விஜய் – அசோக், போலீஸ் – யுகன், ராஜபாண்டியன் – திருமாறன் மோகன்தாஸ், ராஜா – அர்ஜூனா துரைசாமி, பூஜா – நிஷா இஸ்மத், மஹா – சங்கவி தர்மராஜ், ஒய். ஜி. மகேந்திரன் – நீதிபதி, டாக்டர் அரவிந்த்ராஜ் – அரவிந்த்ராஜ், கடலூர் சிவா – சிவா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:- இசை: ஷேக் காதர், ஒளிப்பதிவு: வெங்கடாசலம் சிங்காரவேலன், படத்தொகுப்பு: கார்த்திபாண்டியன் மக்கள் தொடர்பு: சரண்

கதை ஆரம்பமே அதிரடியான ஒரு திருப்பத்துடன் தொடங்குகிறது. நாயகன் விஜய் (அசோக்), இரத்தக் கறைகளுடன் நேராகக் காவல் நிலையத்திற்குள் நுழைகிறான். அங்கு பணியில் இருக்கும் உயர் காவல் அதிகாரி யுகனிடம் தான் இரண்டு கொலைகளைச் செய்துவிட்டதாகக் கூறிப் பதற்றமின்றிச் சரணடைகிறான்.தான் தீவிரமாகக் காதலித்த பூஜாவையும் (நிஷா), அவளைக் கொல்வதற்காக அவளது கோடீஸ்வரத் தந்தை ஏவிவிட்ட கூலிப்படை ஆளையும் தானே வெட்டிக் கெ​hன்றுவிட்டதாக விஜய் வாக்குமூலம் அளிக்கிறான்.விஜய் குற்றத்தை மிக எளிதாக ஒப்புக்கொண்டாலும், காவல் அதிகாரி யுகனுக்கு அவன் மீது சந்தேகம் எழுகிறது. விஜய் சொல்லும் வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் இருக்கின்றன.விசாரணையை தீவிரமாக்கும் போது, விஜய் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதும், அவனது பின்னணியில் பல மர்மங்கள் ஒளிந்திருப்பதும் தெரியவருகிறது. விஜய்யின் நண்பன் ஆட்டோ டிரைவர் ராஜா (அர்ஜூனா துரைசாமி) மற்றும் மருத்துவம் பார்க்கும் டாக்டர் அரவிந்த்ராஜ் (அரவிந்த்ராஜ்) மூலம் விஜய்க்கு ஒரு விசித்திரமான மனநலக் குறைபாடு இருப்பதும் அதாவது, ‘யாராவது ஒரு சம்பவத்தை நீதான் செய்தாய் என்று தொடர்ந்து கூறினால், அதைத் தனது சொந்த நினைவாக நம்பத் தொடங்கி அதை தான் தான் செய்ததாக ஒப்புக்கொண்டு சொல்லி விடும் தன்மை இருப்பதை இன்ஸ்பெக்டர் குகன் அறிந்து கொள்கிறார்.விஜய் காதலித்ததாகச் சொல்லும் பூஜா உண்மையில் யார்? அவளுக்கும் விஜய்க்கும் இடையே நடந்தது என்ன என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது.விசாரணையின் போது, கதையில் மேலும் இரண்டு பெண்கள் மேல் விசாரணை திரும்புகிறது. சங்கவி (மஹா) விஜய்யின் கடந்த காலத்தோடு நெருங்கிய தொடர்புடைய பெண் மற்றும் சிமு அத்வானி (தீப்தி) இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மற்றொரு முக்கிய நபர்.விஜய் கூறிய கொலைகள் உண்மையில் நடந்ததா அல்லது வேறு யாரையோ காப்பாற்ற அவன் நாடகமாடுகிறானா? அல்லது அதிகார வர்க்கத்திற்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுகின்றன. ஓய்.ஜி.மகேந்திரன் நடுவராக வரும் நீதிமன்றக் காட்சிகள் இந்த வழக்கின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.கதையின் இரண்டாம் பாதியில், பூஜா கொல்லப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பது வெளிச்சத்திற்கு வருகிறது. விஜய் சரணடைந்ததன் நிஜமான நோக்கம் பழிவாங்குவதா அல்லது ஒரு பெரிய உண்மையைக் காவல் துறைக்கு உணர்த்துவதா? உண்மையில் நடந்த சம்பவம் என்ன? என்பதே படத்தின் சஸ்பென்ஸ்.

படம் முழுவதையும் தனது தோள்களில் தாங்கிச் செல்லும் விஜய் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் அசோக் நடித்துள்ளார்.காவல் நிலையத்தில் அமைதியாகச் சரணடையும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.காதல் காட்சிகள், குற்ற உணர்ச்சி மேலிடும் தருணங்கள், மற்றும் ஆக்ரோஷமான வெளிப்பாடுகள் எனப் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரத்திற்குத் தேவையான மர்மமான பிம்பத்தை படம் முடியும் வரை தக்கவைத்துக்கொள்வது இவரது நடிப்பின் சிறப்பு.

நிஷா கதையின் நகர்வுக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கும் பூஜா கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கி நெகிழ வைக்கிறார்.மஹா மற்றும் தீப்தி கதையின் திருப்புமுனைகளாக வரும் இவர்களது கதாபாத்திரங்கள், திரைக்கதையின் சஸ்பென்ஸ் தன்மையைக் கூட்டப் பெரிதும் உதவுகின்றன. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட குறைவான நேரத்திலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

காவல் விசாரணை அதிகாரியாக வரும் யுகன், கம்பீரமான தோற்றத்திலும் உறுதியான வசன உச்சரிப்பிலும் ஒரு நிஜமான போலிஸ் அதிகாரியை நினைவூட்டுகிறார். அசோக்குடன் இவர் மோதும் விசாரணை காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. இவரின் கண்ணோட்டத்திலும், விசாரணையிலும் தான் படம் பல திருப்பங்களுக்கு வழிவகுக்கிறது.

Gyஓய்.ஜி.மகேந்திரன் நீதிபதியாக நீதிமன்றக் காட்சிகளில் அனுபவமிக்க நடிப்பை வழங்கி, வழக்கிற்குரிய சட்டப் பூர்வமான அழுத்தத்தைக் கூட்டுகிறார்.

ராஜபாண்டியனாக திருமாறன் மோகன்தாஸ் கம்பீரமான உடல்மொழியுடனும், கதையின் சஸ்பென்ஸ் தன்மையை உடைக்காத வகையிலும் இக்கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு மிக அழுத்தமாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. நான்-லீனியர் திரைக்கதையில் சஸ்பென்ஸையும், வழக்கின் தீவிரத்தையும் அதிகரிக்கச் செய்ததில் ராஜபாண்டியன் கதாபாத்திரத்திற்கு மிக முக்கியப் பங்கு உண்டு!

இவர்களுடன் அரவிந்த்ராஜ், சிவா மற்றும் பலர் படத்திற்கான பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வெங்கடாசலம் சிங்காரவேலன்: த்ரில்லர் படத்திற்குத் தேவையான காட்சிகளையும் மற்றும் டோன்ஐ தனது கேமரா கோணங்கள் மூலம் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.குறிப்பாக, காவல் நிலைய விசாரணை காட்சிகள் மற்றும் இரவு நேரப் படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெளிச்ச அமைப்புகள் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.

கதையின் பதற்றத்தையும் மர்மத்தையும் அதிகரிக்க ஷேக் காதரின் பின்னணி இசை பெரிதும் துணையாக நிற்கிறது.பாடல்கள் கதையோட்டத்திற்குத் தடையின்றி இயல்பாகப் பொருத்தப்பட்டுள்ளன.

படத்தொகுப்பு கார்த்திபாண்டியன் கடந்த காலக் காட்சிகளுக்கும் நிகழ்கால விசாரணைக்கும் இடையே மாறி மாறிச் செல்லும் திரைக்கதையை ஓரளவு குழப்பமின்றித் தொகுத்துக் கொடுத்துள்ளார். இருப்பினும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

இயக்கம் – நெடுமாறன் மோகன்தாஸ்: ஒரு எதார்த்தமான குற்றவாளியின் வாக்குமூலமாகத் தொடங்கி, வழக்கமான த்ரில்லர் பாதையில் பயணிக்காமல் பல சிக்கலான கதாபாத்திரங்களுக்கு இடையே சுழலும் சஸ்பென்ஸ் படமாக இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நான்-லீனியர் சஸ்பென்ஸ் த்ரில்லராகப் படத்தைத் தொடங்கிய விதம் மற்றும் முதல் பாதியில் கதையைக் கொண்டு சென்ற வேகம் பாராட்டுக்குரியது. என்றாலும் இரண்டாம் பாதியில் பல துணைக்கதைகளை அறிமுகப்படுத்தியதால், கிளைமாக்ஸில் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலை அளிக்க முடியாமல் திரைக்கதையை முடித்திருப்பது இயக்குநரின் மேக்கிங்கில் ஒரு குறையாக அமைகிறது. இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ், வழக்கமான வணிகப் படப் பாதையில் செல்லாமல் ஒரு அழுத்தமான சஸ்பென்ஸ் த்ரில்லரைக் கொடுக்க முயற்சித்துள்ளார். திரைக்கதையின் சில இடங்களில் தொய்வு இருந்தாலும், ஒரு த்ரில்லர் படத்திற்குத் தேவையான விறுவிறுப்பையும் மர்மத்தையும் படம் முழுவதும் தக்கவைத்ததில் இயக்குனரின் பங்களிப்பை சரியாக செய்துள்ளார்.

மொத்தத்தில் ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமாறன் தயாரித்திருக்கும் கிட்டி பகிரங்க வாக்குமூலத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மையின் தேடலில் த்ரில்லர் பயணம்

 

ரேட்டிங்: 3/5