பரிமளா அண்ட் கோ – திரைப்பட விமர்சனம்!

16

 

CHENNAI:

படம் : பரிமளா அண்ட் கோ

நடிப்பு: ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு,  சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி  அனந்திகா சரத்குமார்  ஜி கே எம் தமிழ் குமரன், பூர்ணிமா

தயாரிப்பு: சுபாஷ்கரன், ஜி கே எம் தமிழ்க்குமரன், பாண்டிராஜ்

இசை: பாக்சன்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

இயக்கம் : பாண்டிராஜ்

பி ஆர் ஓ : சதீஷ் (AIM).

ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பம். அக்குடும்பத்தின் தலைவர் தான் பரிமளா என்கிற ஜெயராம். அவரது மனைவி ஊர்வசி. இந்த தம்பதிகள் தங்களது இரண்டு பெண் பிள்ளைகளுடன் அன்றாட நடுத்தர வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.   தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கணக்கு பார்க்கும்போது கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இவர்களது இரண்டு மகள்களும் கல்லூரியில் படிக்கிறார்கள். இந்த குடும்பம் ஒரு வாடகை வீட்டில் சிக்கனமாக, அமைதியாக வாழ்ந்து வரும் சூழலில்  இரண்டாவது மகளை மீனவ குப்பத்தில் இருக்கும் இளைஞன்  சாண்டி வம்புக்கு இழுத்து காதலிக்கும்படி வற்புறுத்துகிறார். அவரது காதல்  தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க, அவரது தாதா அம்மாவும் மகனது காதலுக்கு ஆதரவாக ஜெயராம் குடும்பத்தை அவ்வபோது மிரட்டி தன் மகனுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இந்த தொல்லையில் இருந்து விடுபட, ரவுடி சாண்டியை கொலை செய்து விடலாமா ? என்று குடும்பத்தினர் ஆலோசிக்கின்றனர். இந்த சமயத்தில் மறுநாள் காலையில் சாண்டி மர்மமான முறையில் கொலையுண்டு இறந்து கிடக்கிறார்.

இக்கொலைச் சம்பவத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஷ்கின் தீவிரமாக விசாரிக்கிறார். அதே வேளை சாண்டியின் அம்மா காயத்ரி,  தன் மகனைக் கொன்ற கொலைகாரனைத் தேடி வருகிறார்.  போலீஸ் இன்ஸ்பெக்டர்   மிஷ்கினுக்கு, ஜெயராம் குடும்பத்தின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அவர் தன் விசாரணையை தொடங்க, ஜெயராம் குடும்பத்தினரே ஒருவரை ஒருவர் சந்தேகப்படவும் செய்கிறார்கள். இந்த நேரத்தில்  ஜெயராமின் சகோதரரும், ஊர்வசியின் சகோதரரும் வருகிறார்கள். சாண்டி கொலை சம்பந்தமாக அவர்கள் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. இறுதியில் சாண்டியை கொலை செய்தது யார்? உண்மையில் அந்தக் கொலையை எதற்காக செய்தார்கள்? என்கிற கேள்விகளுக்கான ‘பரிமளா அண்ட் கோ’ படம் பார்த்தால் தெரியும்.

முக்கிய கதாபாத்திரமான குடும்பத் தலைவன் ‘பரிமளா’வாக ஜெயராம் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன் அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார். ரவுடி சாண்டி கொலை தொடர்பாக தன் மனைவி, மகள்கள் மீது சந்தேகம் கொண்டு, அவர்களை விசாரிக்கும் முறை சிரிக்கும் விதத்தில் அமைந்து இருக்கிறது.

குடும்பத் தலைவி சுதந்திரமாக ஊர்வசி நடித்திருக்கிறார். அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சாண்டி கொலை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஷ்கின் விசாரிக்கும் காட்சியில் ஊர்வசியின்  காமெடி பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

சஞ்சனா மற்றும் அனந்திகா இருவரும் கதையின் முக்கிய அங்கங்களாக இருக்கிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தத்தை அவர்கள் நம்பகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் மிஷ்கின்,முக்கிய வேடமேற்றிருக்கும் நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் சரியான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் எதை நினைத்து அவர்களை நடிக்க வைத்தாரோ அதை செய்து ஆச்சரியப்பட  வைத்திருக்கிறார்கள்.

ஜி.கே.எம்.தமிழ்குமரன், யோகி பாபு, பூர்ணிமா ரவி என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களை கவரும் விதத்தில் அமைந்து இருக்கிறது.

ஃபாக்ஸன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான் . பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

காதல், குடும்பம், மோதல், சமூகப் பிரச்சினைகள் என பல அடுக்குகளைக் கொண்ட கதையில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். ஒரு கொலை,அது தொடர்பான காவல்துறை விசாரணை என்கிற வழக்கமான கதைக்குள் ஒரு நடுத்தரக் குடும்பத்தை வைத்து முற்றிலும் புதிய கதையாக அவருடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையைக் கையிலெடுத்து அதில் தன் வழக்கமான சமுதாய அக்கறையையும் வெளிப்படுத்தி அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘பரிமளா அண்ட் கோ’  திகில் கலந்த சிரிப்பு படம்.

ரேட்டிங் 3/5.