
CHENNAI:
படம்: அங்கீகாரம்
நடிப்பு: ஜெ ராஜேஷ்,, செந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே,, மன்சூர் அலிகான், ரமா மோகன் ராம்
தயாரிப்பு: அருண் முருகன், அஜித் பாஸ்கர், எஸ் கே பிரசாந்த்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: விஸ்வநாத் ஏ
இயக்கம்: தென்பதியான்
பிஆர்ஓ : யுவராஜ்.
ஆதிரன் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வமுள்ள தடகள வீரனாக இருக்கிறான் .தேசியப்போட்டியில் பங்கேற்று வென்று காமன்வெல்த் போட்டியில் பங்கெடுப்பது அவன் கனவு. அவனது தாய் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறாள். ஒரு தங்கையுடன் இருக்கும் குடும்பத்தில் வறுமையுடன் வாழும் இளைஞனாக அவன் இருக்கிறான். குடிசைப் பகுதியில் வாழும் ஆதிரன் சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகிறார். விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில், ஓட்டப்பந்தய விளையாட்டில் அதீத ஈடுபாடு காட்டி வரும் அவர், விளையாட்டு வீரருக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றாலும், தேசிய அளவிலான போட்டியில் சாதனை புள்ளிகளோடு சாம்பியன் பட்டம் வென்று காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தான் வென்று விட்டால் தனது கனவுகள் நிறைவேறி குடும்பத்தில் மறுமலர்ச்சி நிலவும் என்று நம்புகிறான் ஆதிரன்.
ஆனால் அவன் மேலே வரக்கூடாது என்று பல வகையிலும் விளையாட்டுக்கான தேர்வுப் பிரிவு அமைப்பின் பொறுப்பாளர்கள் முதல் பலரும் தடையாக இருக்கிறார்கள்.ராஜஸ்தான் ஜோத்பூரில் நடைபெற்ற 67 வது தேசியப் போட்டியில் அவன் வெல்கிறான். தனது திறமையாலும் கடின உழைப்பாலும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அவன், தேசிய அளவிற்கு முன்னேற வேண்டிய நேரத்தில் சாதிய அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார். இந்த சூழலில் தொடர்ந்து போட்டியிட முடியாமல் அவனுக்குக் காலில் காயம் ஏற்படுகிறது. சிறிய காயத்தை காரணம் காட்டி அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முழுமையாக குணமடைந்த பிறகும், அவரது திறமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அமைப்புக்கு எதிராக சட்டப் போராட்டத்தில் இறங்குகிறார் ஆதிரன். எந்த வழக்கறிஞரும் இல்லாமல் தனது பிரச்சனைக்கு தானே வாதிட்டு, விளையாட்டுத் துறையில் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார் ஆதிரன். இறுதியில் ஆதிரனின் போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் ‘அங்கீகாரம்’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் ஆதிரன் என்ற கதாபாத்திரத்தில் விளையாட்டு வீரராக, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் கே.ஜே.ஆர்.அந்த வேடத்துக்காக மிகுந்த உழைப்பைச் செலுத்தியிருப்பது புலனாகிறது.தோற்றத்தில் மாற்றம்,நடை உடை பாவனைகளில் கவனம் ஆகியனவற்றோடு உணர்ச்சிப்பூர்வமான நடிப்பிலும் குறைவின்றிச் செய்திருக்கிறார்.
தாயாக நடித்துள்ள ரமா, மகனின் கனவுக்காக வாழும் ஒரு சாதாரண பெண்ணின் உணர்வுகளை மனதைத் தொடும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார். நாயகனின் சகோதரி செல்வியாக இஸபெல்லா வருகிறார். மற்றும் விஜி வெங்கடேஷ், வசுந்தரா, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்குநரின் பாதையில் கைகோர்த்து இசையமைப்பாளர் ஜிப்ரான்,ஒளிப்பதிவாளர் ஏ. விஸ்வநாத் இருவரும் பயணம் செய்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஜே.பி.தென்பதியான்.இப்படத்தின் முதல் பாதி விளையாட்டு மைதானத்தின் விறுவிறுப்பையும், ஒரு விளையாட்டு வீரனின் அர்ப்பணிப்பையும் பதிவு செய்கிறது. இரண்டாம் பாதி முழுக்க நீதிமன்ற அரங்கில் நகரும் காட்சிகளாக அமைந்துள்ளது. இந்த இரு பரிமாணங்களையும் ஒரே கதைக்குள் இயல்பாக இணைத்திருக்கும் இயக்குநர் தென்பதியானின் திறமையை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். விளையாட்டுத் துறையில் நிலவும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் அங்கீகாரம் மறுக்கப்படும் திறமைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளை வித்தியாசமான கோணங்களில் காட்சிப்படுத்தி ஒரு விளையாட்டு வீரனின் உணர்வுகளுக்கும் விறுவிறுப்புக்கும் சமநிலை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர்.
“அங்கீகாரம்” – திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க போராடும் படம்.
ரேட்டிங்: 4/5