
பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கும் அர்ஜுன் தாஸ் அன்னா பென், வடிவுக்கரசி, அவரது மகன் யோகி பாபு தங்கள் அடித்தட்டு நிலையை மாற்றுவதற்காக கிடைக்கும் தனித்தனி வாய்ப்பை பயன்படுத்தி மோசடி மூலம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அந்த பணத்தை வைத்து குறுகிய காலத்தில் அதிக பணம் பார்க்கும் முயற்சியில் ஈடுபடும் போது அவர்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள். தங்களது பணத்துடன், மக்களின் பணத்தையும் இழந்து விட்ட அவர்களை போலீஸ் கைது செய்கிறது. போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்பவர்கள் ஆந்திராவில் ஒன்றாக இணைந்து ஹோட்டல் ஒன்றை நடத்தியபடி தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
அவர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். அதற்காக அர்ஜுன் தாசின் குழந்தையை கடத்துகிறார். மோசடியை தொடர்ந்தால் மட்டுமே குழந்தை உயிரோடு கிடைப்பது நிச்சயம் என்கிறார்.
அவரது மிரட்டலுக்கு அடிபணிபவர்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி பெரும் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள். அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? இம்முறையும் போலீசில் சிக்கினார்களா? என்பது கிளைமாக்ஸ்.
மக்களின் பேராசையை நம்பி நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்து இருப்பது படத்தின் பிளஸ்.
நாயகனாக அர்ஜுன் தாஸ், தனது கேரக்டருக்கு இன்னொருவரை யோசிக்க முடியாத அளவுக்கு அந்த கேரக்டரோடு ஒன்றிப் போகிறார். அலுவலகத்தில் இவருக்கும் வி.டி.வி. கணேஷ் குமாருக்கு
மான அந்த
அன்யோன்ய நட்பு இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிரம்பி வழிகிறது.
மோசடியால் மோசம் போய் இப்போது அதே மோசடி மூலம் தனது நிலையை மாற்றும் கதாபாத்திரத்தில் அன்னா பென் சிறப்பு.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், யோகி பாபு நகைச்சுவையை அடியோடு மறந்தவராகவே சுற்றித் திரிகிறார்.
யோகி பாபுவின் அம்மாவாக வரும் வடிவுக்கரசி, தனது நடிப்பு கேரியரில் இதுவரை இல்லாத புதுவித நடிப்பை வழங்கி அவ்வப்போது சிரிக்க வைக்கும் பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.
அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீபா ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் என நட்சத்திர பட்டியல் அதிகம். அத்தனை கேரக்டர்களும் கதைக் களத்தின் ஆணி வே ர்களாக நின்று நிலைக்கின்றன.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை காட்சிகளில் பரபரப்பை பற்றவைக்கின்றன.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத்தின் கேமரா காட்சிகளை கண்களுக்குள் கொண்டு செல்கின்றன. குறிப்பாக இவரது கேமராவின் கழுகுப் பார்வை அடடா அழகு.
எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், புத்திசாலித்தனம் அல்லது தந்திரமான திட்டங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித் தவர், அதில் பாதிக் கிணறு மட்டுமே தாண்டி இருக்கிறார்.
பிளஸ்: கதையோடு நம்மை இணைத்துக் கொண்ட தரமான ஒளிப்பதிவு.
பிளாஷ்: வடிவுக்கரசியை நடிப்பில் புதிதாக காட்டிய இயக்குனர்.
ரேட்டிங்: 3/ 5.