’கட்டா குஸ்தி 2’ திரைப்பட விமர்சனம்!

87

 

CHENNAI:

படம்: கட்டா குஸ்தி 2

நடிப்பு: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மோக்ஷா, லிசா ஆண்டணி, ஸ்ரீ ஜா ரவி, கஜராஜ்

தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் விஷ்ணு விஷால்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு : கே எம் பாஸ்கரன்

இயக்கம்: செல்லா அய்யாவு

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் இன்பன் உதயநிதி

பிஆர்ஓ : சதீஷ் (AIM ).

கட்டா குஸ்தி 2 முதல் பாகத்தில் இருந்து கதை இங்கேயும் தொடங்கப்படுகிறது மல்யுத்த வீராங்கனியாக இருக்கும் மனைவிக்கு  துணையாக இருக்கும் கணவன், மற்றும் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதே  மைய கருத்து. கதையோ அனைவரும் அறியப்பட்ட ஒன்றுதான் ஆனால் முதல் பாகத்தில் கிடைத்த வெற்றியோ பல படங்களில் இரண்டாம் பாகத்தில் கிடைப்பது இல்லை அது போல் இருந்து விடுமோ என்று என அச்சம் எழும். ஆனால் ரசிகர்களுக்கு, கட்டா குஸ்தி 2 இன்னும் அதிகமான குடும்ப உணர்வுகள், சிரிப்பு, சென்டிமென்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் பின்னணியுடன் விருந்தளிக்கிறது.

தேசிய குஸ்தி சாம்பியனான ஐஸ்வர்யா லட்சுமி, ரெயில்வே துறையில் வேலைக்குச் செல்கிறார். குடும்பத்தின் பொறுப்பை ஏற்று, மகளை கவனிக்கும் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக மாறுகிறார் விஷ்ணு விஷால். தனது நான்கு வயது மகளின் மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையாக வாழும் விஷ்ணு விஷாலின் வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனை உருவாகிறது. ஐஸ்வர்யா லட்சுமியின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத அவரது பயிற்சியாளர், விஷ்ணு விஷாலை அறியாமலேயே அவர் மூலம் தனது பழிவாங்கும் திட்டத்தை பயன்படுத்துகிறார். அதன் விளைவாக போட்டியில் ஐஸ்வர்யா தோல்வியடைகிறார். அந்த தோல்விக்குக் காரணம் தனது கணவர்தான் என நம்பி, வெறுப்படைந்த   ஐஸ்வர்யா லட்சுமி தன் மகளுடன் அவரை விட்டு பிரிகிறார். இந்த சூழலில் விஷ்ணு விஷால் தவறு செய்யவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும்போது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே  ‘கட்டா குஸ்தி 2 ‘ படத்தின் கிளைமாக்ஸ்.

கதாநாயகன் விஷ்ணு விஷால் தனது  ஹவுஸ் ஹஸ்பண்ட் என்னும் கதாபாத்திரத்தில் சிறந்த கணவராக தோன்றுகிறார் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தன் மனைவிக்கு துணையாக நிற்கிறார். திரை அரங்குகளில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் கணவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் பதிய வைக்கிறார்.

கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி ஒரு மல்யுத்த வீராங்கனையாக  அவதாரம் எடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்  மல்யுத்த சண்டை காட்சிகளில் அவர்களது கடின உழைப்பும் முயற்சியும்  நன்றாகவே தெரிகிறது அது மட்டும் இல்லாமல் பெண் குழந்தை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு பொறுப்புள்ள அம்மாவின் பாசமும் பொறுப்பையும் தன் நடிப்பால் வெளிப்படுத்தி உள்ளார்.

இவர்களுடைய மகளாக நடித்திருக்கும் சிறுமி சாரா,எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிட்டார்.

பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் மோஷாவின் நடிப்பும் உடல் மொழியும் நன்று.அவரை அளவோடு பயன்படுத்தியிருப்பது மேலும் நன்று.

கருணாஸ் இந்தப்படத்திலும் கவனம் ஈர்த்திருக்கிறார். முனிஷ்காந்த், காளி வெங்கட்,கருணாகரன் ஆகியோரும் குறைவில்லை.

நீதிபதியாக ரம்யா கிருஷ்ணன்,போட்டி வர்ணனையாளராக யோகிபாபு ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து படத்துக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறார்கள்.

கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் உணர்வுகள் திரையிலும் குறைவின்றிப் பளிச்சிடுகின்றன.

ஷான் ரோல்டன் இசையில் சம்பவக்காரி, மகராசி உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் கேட்டுமகிழ வைக்கின்றன.பின்னணி இசையில் படத்தை முன்னணிக்குக் கொண்டு போயிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் செல்லா அய்யாவு,குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து இரசித்து சிரித்து மகிழக்கூடிய படத்தைக் கொடுத்திருக்கிறார்.கூடவே சமுதாயத்துக்குத் தேவையான நல்லகருத்தையும் சொல்லி வரவேற்புப் பெறுகிறார். இன்றைய சூழலில் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து மனநிறைவுடன் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் குறைந்து வரும் நிலையில், கட்டா குஸ்தி 2 அந்தக் குறையை நிரப்பும் படைப்பாக திகழ்கிறது.

மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’  குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கலாம்.

ரேட்டிங் 4/5.