பெத்லகேம் குடும்ப யூனிட் –திரை விமர்சனம்

14

 

வழக்கமான காதல் கதைகளில் வரும் காதலனும் காதலியும் சம வயதில் இருப்பார்கள். இன்னும் சிலர் நாலைந்து வயது வித்தியாசத்தில் கூட இருப்பார்கள்.
ஆனால் ‘எனக்கு 40 உனக்கு 20’ என்பது எங்கோ யாருக்கோ வாய்க்கும். அதிலும் பஞ்சாயத்து, வக்காலத்து
என்று ஒரு கட்டத்தில் அந்த காதல் ஜகா வாங்குவதும் உண்டு.
சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கூட 20 வயது இடைவெளியிலான காதல் பற்றி பேசியிருந்தார்கள்.
கிட்டத்தட்ட இந்த படத்தின் காதலும் அந்த ரகம் தான். ஆனால் கதைக்களம் முற்றிலும் வேறாக அமைந்து படத்தை அதன் போக்கில் ரசிக்க வைத்து விடுகிறது.

காதலில் தோற்றுப் போன நடுத்தர வயது நாயகன் நிவின்பாலி வீட்டருகே புதிதாகக் குடியேறுகிறார் நாயகி மமிதா பைஜு.
பொறுப்பற்ற குடிகார அப்பாவால் துன்பங்களை எதிர்கொள்ளும் அவர், அன்பு, பொறுமை, நிதானம் ஒருங்கே அமையப்பெற்ற
ஆளுமைத் திறன்மிக்க நிவின்பாலி குறித்து அறிந்ததும் மெல்ல மெல்ல
நட்பாகிறார். நட்பு சீக்கிரமே காதல் ஆகிறது. ஒரு கட்டத்தில் தன் காதலை நிவின் பாலி யிடம் தெரிவிக்க, அதிர்ந்து போகும் அவர்,
மமீதாவின் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் அந்த இடைவிடா அன்பு அவரையும் வசப்படுத்த…
மமீதாவின் காதலை
ஏற்கிறார்.
ஆனால் உலகம் எதிர்க்கிறது. உறவுகள் கொதிக்கிறது. அவரையும் தாண்டி அந்த வயது வித்தியாச காதல் மணமேடை கண்டதா என்பது எதிர்பார்ப்பும் சுவாரசியங்களும் நிறைந்த திரைக்கதை.

நடுத்தர வயதினராக நடித்திருக்கும் நிவின்பாலி,
அதற்கேற்ப உடல்மொழியையும் வெளிப்படுத்தி அந்த கேரக்டரை நடிப்பால் அழகுற சுமந்து இருக்கிறார்.
காதல் காட்சிகளில் அவரது வெட்கம் கூட தனி அழகு.

நெஞ்சுக்குள் தீராத துயரம் இருந்த போதும்
வெளியில் சுட்டித்தனம் காட்டும் கல்லூரிமாணவியாக
மமிதா பைஜு, தனது நடிப்பால் அந்த கேரக்டரை மேலும் மெருகேற்றி இருக்கிறார். இந்த வேடத்தை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியாது என்கிற அளவுக்கு அவரது பெர்ஃபாமன்ஸ் மிரட்டி விடுகிறது. சமீபத்தில் வந்த அந்த 20 வயது வித்தியாசம் படத்திலும் இதே கேரக்டர் தான் என்றாலும், இரண்டிலுமான அவரது நடிப்பின் வித்தியாச அளவுகோல் தேர்ந்த நடிகை பட்டியலுக்குள் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. துணை கதாபாத்திரங்களில் வருவோர், நடிப்பால் தங்கள் பாத்திரங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.
பெத்லகேம் குடும்ப யூனிட் என்பது கதையில் ஒரு தேவாலயத்தைச் சுற்றி வசிக்கும் குடும்பங்களைக் குறிக்கிறது. அதை தனது கேமரா கோணத்தில் அழகாக காட்சிப்படுத்தி ரசிக்க வைக்கிறார், ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு.
விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் அத்தனையும் இன்னிசை ராகம். பின்னணி இசையில் மேம்படும் அதீத
காதல் உணர்வுகள் நம்மை காட்சிகளோடு இணைத்து விடுகின்றன.
கிரண் ஜோசியோடு இணைந்து கதை திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ்.ஏடி. எழுதும்போதே ரசித்து எழுதி இருப்பார்கள் போல.

வயது வித்தியாசம் அதிகமுள்ளோருககிடையேயான காதல், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம்,இந்தச் சமுதாயம்,அந்தக் காதலர்களை பார்க்கிற பார்வை இப்படி இப்படி எல்லா
பேதங்களையும் காதல் வேதமாக்கி வயது வித்தியாசம் இன்றி இதயங்களை கிள்ளி விடுகிறார், இயக்குனர்.

பிளஸ்: வயது வித்தியாச காதலை வயது வித்தியாசம் இன்றி ரசிக்க வைத்த இயக்கம்.

பிளாஷ்: நொடிக்கு நூறு எக்ஸ்பிரஷன் தந்து பிரமிக்க வைத்த மமீதா பைஜூ.

ரேட்டிங்: 4/5.