பீப்–திரை விமர்சனம்

8

 

இளந்தேவன்
துடிப்பான இளைஞன். அவன் நட்பு வட்டத்தில் பாலியல் பெண் தொழிலாளி ஒருவரும் இருக்கிறார். இருவரும் மனம் விட்டு
பேசும் அளவுக்கு நல்ல சினேகிதர்கள்.
இந்நிலையில்
அதிர்ச்சி தரும் செய்தியாக அந்த பெண்ணின் மரண செய்தி கிடைக்கிறது.
பிளாட் ஒன்றில் ஐந்தாவது மடியில் இருந்து கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட உயிர் விட்டிருக்கிறாள் அந்தப் பெண்.
மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணை தனது பிளாட்டுக்கு அழைத்து வந்த தொழிலதிபரை விசாரித்தால், தொழிலதிபரோ, அவள் வந்தது உண்மை. ஆனால் அவள் இறப்புக்கு நான் காரணம் இல்லை. ஊருக்கு போன மனைவி திடீரென வந்து விட்ட நிலையில் பைப் வழியாக இறங்கி கீழே போகச் சொன்னது உண்மை. அப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து உயிரை விட்டிருக்கிறாள் என்கிறார்.
அப்படியானால் இந்த பெண்ணின் மரணத்தை
எந்த பட்டியலில் சேர்ப்பது? காவல்துறை அதிகாரி அதிகாரிக்கே தலை சுற்றுகிறது.
என்ன முயன்றும் அந்தப் பெண்ணின் மரணத்துக்கான காரணம் இன்னும் கூட புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
அதே நேரம்
தங்கள்
முதல் கட்ட விசாரணையில் போலீஸ் சந்தேகப்பட்டது இளந்தேவன் மீது தான்.
பாலியல் தொழிலாளியுடன் நட்பா? அது எப்படி சாத்தியம்? கொடுக்கல் வாங்கலில் குளறுபடி ஆகி கொலையில்
முடிந்திருக்கக் கூடும். அதை ஏன் இந்த
இளந்தேவன்
செய்திருக்கக் கூடாது என்று போலீஸ் அதிகாரி சந்தேகப்பட…
இளந்தேவன் அந்த விசாரணையை எதிர்கொண்டு தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கிறான். அதோடு நில்லாமல் தனது சினேகிதியின் மரணத்துக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க முனைகிறான்.
காவல்துறை
அவனது இந்த முந்திரிக்கொட்டை வேலையை கண்டிப்பதோடு, ‘இதையெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். துப்பறியும் ஆர்வத்தில் எங்காவது போய் ஏடாகூடமாக மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

இளந்தேவனோ அதைக் கேட்ட மாதிரி இல்லை. நண்பர்கள் உதவியுடன்
முன்னை விட அதிகமாக துப்பறிதல் வேட்டையை தொடர்கிறான்.
இளந்தேவனிடம் ஒரு விசேஷ சக்தி இருக்கிறது. ஒரு போட்டோவை பார்த்தால் அந்த போட்டோ எடுத்த போது
நடந்த சம்பவங்கள் அவனுக்குள் காட்சியாக வந்து போகும். அதை வைத்து தனது தோழியின் மரணத்துக்கு பின்னால் இருக்கும் காரணத்தை எப்படி கண்டுபிடிக்கிறான் என்பது கிளைமாக்ஸ்.
இளந்தேவனாக ராகவ். ஓடிசலான உடம்பு என்றாலும் நடிப்பில் இளைத்து விடவில்லை. தனது சுறுசுறுப்பான நகர்வுகளில் கதையை தாங்கி பிடிப்பவர் இவர் தான். இவரது நல்ல நண்பியாக பாலியல் தொழிலாளி கேரக்டரில் யாமினி லட்சுமணன். வசீகர உடம்பும் வளமான நடிப்புமாய் மனதில் நிற்கிறார். கதவை தட்டும் மனைவியிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ஐந்தாவது மாடியில் இருந்து பைப் வழியாக இறங்கி என்
மானத்தை காப்பாற்றி விடு என்று அழைத்து வந்தவர் கெஞ்ச… அந்த இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில்
யாமினியின் முக பாவங்கள் அடடா ரகம்.
இன்னொரு நாயகியாக வரும் பிரேர்னா கண்ணா வரும் குறைந்த நேரத்திலும் நிறைவான நடிப்பில் பெயர் வாங்கி விடு கிறார்.
கொலையை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நிதிஷ் வீரா தனது நடை உடை பாவனைகளிலேயே காக்கிச்சட்டையின் கம்பீரம் காட்டி விடுகிறார்.(இவர் காலமாகிவிட்டது நிச்சயம் தமிழ்த் திரைக்கு இழப்பு)
தான் அழைத்து வந்த பாலியல் பெண் தொழிலாளி மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நேரத்தில் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாத, தான் தப்பித்தால் போதும் இந்த மனநிலை கொண்ட கேரக்டரில் இயக்குனர் சண்முக சுந்தர் நடிப்பில் டபுள் ப்ரோமோஷன் வாங்கி விடுகிறார்.
பிரதீப் பத்ம குமாரின் கேமராவும் பிரசாந்த் விகாரியின் இசையும்
இந்தப் படத்தின் இரு பக்க தூண்கள்.
ஒரு பெண்ணின் மரணத்துக்கு பின்னால் கொலையா தற்கொலையா என்றெழும் சந்தேகச்சாயலை மையமாகக் கொண்டு கதை போகிறது. அப்படியே ஒரு துப்பறிதல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை ராகவ் கேரக்டர் மூலம் நமக்கு பாடமாகவும் நடத்தி காட்டி விடுகிறார் இயக்குனர். முடிவு வரை நின்று நிலைத்த அந்த சஸ்பென்சுக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் தொழிலதிபரின் முன்பாக நின்று நாயகன் அவருக்கு பாடம் எடுப்பதெல்லாம்
டூ மச்.

பிளஸ்: கொஞ்சம் அசந்தால் நம்மையும் துப்பறிய அழைத்துக் கொண்டு போய் விடும் கதைக்களம்.

பிளாஷ்: படம் முழுக்க துறுதுறுவென வந்து போகும் நாயகன் ராகவ்.

ரேட்டிங்; 3/5.