
படம்: இறுகப்பற்று
நடிப்பு: விக்ரம்.பிரபு, விதார்த், , ஶ்ரீ, அபர்ணதி, சானியா அய்யப்பன்
தயாரிப்பு: எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி. கோபிநாத்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு: கோகுல் பெனாய்
இயக்கம்: யுவராஜ் தயாளன்
மூன்று தம்பதிகளுக்கிடையே நடக்கும் வாழ்க்கை பயணம் எப்படி கடலில் கப்பல் கவிழ்கிறது என்பதை சொல்ல முயன்று அதில் கரை சேர முடியாமல் திணறியிருக் கிற குழப்பமான கதைதான் ‘இறுகப்பற்று’
விதார்த் தனது மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். கணவரின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சியடையும் அபர்ணதி, மனோதத்துவ நிபுணரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் உதவியை நாடுகிறார். அவர் வழங்கிய ஆலோசனைக்குப் பிறகும் விதார்த் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறார். மறுபக்கம், காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீ, தனது மனைவி சானியா தன்னைவிட்டு விலகியே இருப்பதாக கூறி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் ஆலோசனை பெறுகிறார்.
இரண்டு தம்பதிகளின் பிரச்சனைகளுக்கு உண்மையான பின்னணி என்னவென்று கண்டறிந்து அதை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தான் சந்திக்கும் தம்பதிகளிடம் எழும் பிரச்சனைகள் போல், தனக்கும், தனது கணவருக்கும் இடையே ஏற்படக்கூடாது என்பதில் கவணமாக இருப்பதோடு, மற்றவர்களுக்கு அவர் சொல்லும் ஆலோசனைகளை தனது குடும்ப வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறார். ஆனால், தனது மனைவி தொழிலையும், வாழ்க்கையையும் ஒன்றாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ளாத அவரது கணவர் விக்ரம் பிரபு மனைவி மீது கோபமடைவதோடு அவரை விலகி செல்கிறார். இந்த மூன்று தம்பதிகளின் பிரச்சனைகள் தீர்ந்ததா?, இல்லையா? என்பதை பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருப்பதே ‘இறுகப்பற்று’.
விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார். தன்னிடம் சண்டையே போடாத மனைவி பற்றி பெருமையாக நினைப்பவர், அவர் தொழிலை வாழ்க்கையோடு சேர்த்து பார்க்கும் போது பதறும் காட்சிகளில் சராசரி மனிதனின் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்
மனோதத்துவ நிபுணராகவும், மனைவியாகவும் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஷ்ரத்த ஸ்ரீநாத். எப்படிப்பட்ட பிரச்சனைகளோடு வந்தாலும் தனது ஆலோசனை மூலம் அவர்களை சரிபடுத்தி விடும் திறன் கொண்டவராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன் வாழ்க்கையில் பிரச்சனை வந்ததும் தடுமாறும் இடங்களில் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.மனைவி குண்டாக இருப்பதால் விவாகரத்து முடிவுக்கு வரும் விதார்த், அதற்கான நிஜ காரணத்தை சொல்லி தன் உள்ளத்தில் இருக்கும் ஏமாற்றங்களை வெளிப்படுத்தும் காட்சியில் அழுத்தமான நடிப்பு மூலம் அனைத்து நடிகர்களையும் ஓரம் கட்டி விடுகிறார்.
விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணதி சராசரி மனைவியாக இயல்பாக நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பும், கணவனுக்கான தவிப்பும் கைதட்டல் பெறுகிறது.
இளம் தம்பதிகளான ஸ்ரீ – சானியா ஜோடியின் நடிப்பும் மற்ற ஜோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், மனைவியை மட்டம் தட்டும் ஸ்ரீயின் குணமும், அதனால் பாதிக்கப்படும் சானியாவின் குமுறலும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படம் முழுவதும் கணவன் – மனைவிக்கு ஆலோசனை வழங்கும் காட்சிகள் தான் அதிகம் என்றாலும் அதை மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருப்பதோடு, வார்த்தைகள் புரியும் வகையிலும், நம் மனதில் பதியும் வகையிலும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் வாழ்வியலுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
”கணவன், மனைவி இடையே சண்டைகள் வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியாக இருப்பதே காரணம் தான்” என்ற எதார்த்தத்தின் பின்னணியில் சொல்லப்பட்ட கதையும், திரைக்கதையும், மக்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் வாழ்வியலாக இருந்தாலும், அதை பாடம் எடுப்பது போல் அல்லாமல் சிரித்து, ரசித்து பார்க்க கூடிய சுவாரஸ்யமான படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
மொத்தத்தில் ‘இறுகப்பற்று’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்..
ரேட்டிங் 3.5/5