‘மனிதர்கள்’ திரைப்பட விமர்சனம்!

115

 

 

CHENNAI:

இரவில் 6 நண்பர்கள் சேர்ந்து மது அருந்துகிறார்கள். திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார். அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களுக்கு எத்தகைய முடிவை தேடிக்கொடுத்தது என்பதை வித்தியாசமான பயணமாக சொல்ல முயற்சித்திருப்பதே ‘மனிதர்கள்’.

 

கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார்கள்.

 

எதிர்பாரத சம்பவத்தால் அச்சத்தில் உரைந்து, பதற்றத்தில் பரிதவிப்பதை சிலர் கொஞ்சம் ஓவராக நடித்து வெளிக்காட்டுவதும், சிலர் எந்தவித பதற்றமும் இன்றி பிரச்சனையை எதிர்கொள்ள தயாராவதும் என்று மனிதர்களின் மனநிலையை மிக கச்சிதமாக தங்களது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

குறிப்பிட்ட சில முகங்கள், முழுக்க முழுக்க இரவு என்று மிகப்பெரிய சவாலான பணியை மிக சாமர்த்தியமாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ். ஆனால், படம் முழுவதும் அது நீண்டு கொண்டே செல்வது ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கு தலைவலியை கொடுக்கிறது. இருந்தாலும், இயற்கை வெளிச்சம், கார் மற்றும் சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிப்பதிவாளர் காட்சிகளை படமாக்கிய விதம் வியக்க வைக்கிறது.

 

இசையமைப்பாளர் அனிலேஷ் எல்.மேத்யூ இசையில் பின்னணி இசை கதாபாத்திரங்களிடம் இருக்கும் பயம் மற்றும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறது.

 

ஒரு இரவில் நடக்கும் கதை என்றாலும், கதை முழுவதுமே இருள் சூழ்ந்த பகுதிகளில் நடப்பதும், ஒரே கதாபாத்திரங்களுடன் பயணிப்பது என்று தொய்வாக நகர பல வாய்ப்புகள் இருந்தும், தன்னால் முடிந்தவரை காட்சிகளை சுவாரஸ்யமாக கோர்த்து படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தின்சா.

 

எழுதி இயக்கியிருக்கும் இராம் இந்திரா, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக எளிமையான முறையில் அதே சமயம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது வித்தியாசமான முயற்சி விபரீதமாக மாறி படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்து விட்டது.

 

படம் முழுவதுமே இருள், ஒரே முகங்கள், அவர்களுக்கு இடையே ஒரே விசயம் பற்றிய ஒரே மாதிரியான விவாதங்கள், என்று கதை ஒரே இடத்தில் பயணிப்பது பார்வையாளர்களின் பொறுமையை மிகவும் சோதிக்கிறது.

 

குறும்படமாகவும், டிரைலராகவும் எடுக்க வேண்டிய ஒரு கருவை முழுநீளப் படமாக எடுத்தால், திரைப்படத்திற்கான சில யுத்திகளை பயன்படுத்தினால் மட்டுமே அதற்கான பார்வையாளர்களை திருப்திப்படுத்த முடியும். ஆனால், அது எதுவும் இல்லாமல் இரவு நேரத்தையும், சில மனிதர்களையும் வைத்துக் கொண்டு இயக்குநர் சொல்லியிருக்கும் இந்த கிரைம் திரில்லர் கதை செம சொதப்பல்.

 

ரேட்டிங் 2.5/5