‘உருட்டு உருட்டு’ – திரைப்பட விமர்சனம்!

146

 

 

சென்னை:

நடிகர்கள்: கஜேஷ் நாகேஷ், ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பத்ம ராஜு ஜெய்சங்கர்

பாடல் இசை – அருணகிரி

பின்னணி இசை – கார்த்திக் கிருஷ்ணன்

தயாரிப்பாளர்: பத்ம ராஜு ஜெய்சங்கர்

கதை, திரைக்கதை, வசனம்,ஒளிப்பதிவு & இயக்கம்: பாஸ்கர் சதாசிவம்.

எந்த நேரமும் குடித்து விட்டு, வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் கஜேஷ் நாகேஷை காதலிக்கும் நாயகி ரித்விகா ஸ்ரேயா, அவரை திகட்ட…திகட்ட…. காதலிக்க ஆசைப்படுகிறார். ஆனால், நாயகனோ போதை இறங்க… இறங்க…மது குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், நாயகன் மாதுவை விட மது மீதே அதீத காதல் கொண்டவராக இருக்கிறார்.

 

காதலனின் நிலை அறிந்து அவரை திருத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாயகி, இறுதியில் எதிர்பார்க்காத ஒரு விசயத்தை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைக்கிறார். அது என்ன ?, எதற்காக அப்படி செய்தார் ?, என்பதை சமூக அக்கறையோடும், நகைச்சுவையாகவும் சொல்வதே ‘உருட்டு உருட்டு’.

 

நாயகனாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக நடித்திருக்கிறர். சொக்க வைக்கும் அழகோடு இளம் பெண் ஒருவர் பக்கத்தில் இருந்தாலும், அவரை காதலிக்காமல் மது மீதான தனது அதீத காதலை அவர் வெளிப்படுத்தும் விதத்தை பார்த்தாலே, சரக்கடிக்க கூடாது என்ற என்னத்தில் இருப்பவர்களை கூட, ஒரு கட்டிங் போட வைத்துவிடும். அந்த அளவுக்கு ரொம்ப இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரித்விகா ஸ்ரேயா, வழக்கமான கமர்ஷியல் கதாநாயகிகள் போல், பாடல், நடனம் என்று கலர்புல்லாக வலம் வந்தாலும், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து அவர் செய்யும் செயல், கண்ணகியை மிஞ்சும் அளவுக்கு அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

காமெடி காட்சிகளுக்காக மொட்டை ராஜேந்திரனை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். அவருக்கும் மூன்று மனைவியை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரை வைத்து காமெடி காட்சிகளை சரிவர பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மூணு பொண்டாட்டிகளாக நடித்திருந்த அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி மூவரும் காட்சிகளுக்கு கச்சிதமாகவே பொருந்தியிருந்தனர்.

பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா உள்ளிட்ட நடிகர்களும் கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக தங்களது நடிப்பை அளவாக கொடுத்துச் சென்றிருந்தனர்.

நாயகி ரித்விகாவின் தந்தையாக தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் நடித்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்திலேயே தனது வில்லத்தனத்தை பார்வையாளர்களிடம் கடத்திச் சென்றிருக்கிறார்.

சமூக அக்கறையோடு ஒரு க்ளைமாக்ஸை கொடுத்து கண்கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதற்காகவே இயக்குனருக்கு ஒரு பெரும் சல்யூட் வைக்கலாம். காமெடி காட்சிகளை இன்னும் சரியாக பயன்படுத்திருக்கலாம்.

அருணகிரி இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. கார்த்திக் கிருஷ்ணனின் பின்னணி இசை கதையோடு சேர்ந்து பயணம் புரிய பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில், ‘உருட்டு உருட்டு’ படம் கலர்ஃபுல்.

 

ரேட்டிங் 2.9/5