
CHENNAI:
படம்: அந்த 7 நாட்கள்
நடிப்பு: அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, கே பாக்யராஜ், நமோ நாராயாணா
தயாரிப்பு: முரளி, கபிர்தாஸ்
இசை: சச்சின் சுந்தர்
ஒளிப்பதிவு: கோபிநாத் துரை
இயக்கம்: எம் சுந்தர்
பிஆர் ஓ: சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்.
பைனாகுலர் வைத்து விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் படிப்பைப் படித்து வருபவர் நாயகன் அஜிதேஸ். இவரும், ஜூனியர் வக்கீலான நாயகி ஸ்ரீஸ்வேதாவும் காதலர்கள்.
காதல் என்றாலே வெறுத்து ஒதுக்கும் குணம் கொண்டவர் நாயகி ஸ்ரீஸ்வேதாவின் தந்தை. தன் மகனை அமைச்சரின் மகளுக்குக் கட்டிக் கொடுத்து எம் எல் ஏ சீட் வாங்கிவிட வேண்டும் என்ற கனவில் இருப்பவர் நாயகன் அஜிதேஸின் தந்தை.
இந்த இரு பெற்றோர்களின் எதிர்ப்பையும் தாண்டி, ஜோடிகளின் காதல் வளர்கிறது. அதே சமயம், பழங்காலத்து பைனாகுலர் ஒன்றின் வழியாக சூரிய கிரகணத்தைப் பார்க்கும் அஜிதேஸின் கண்களில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. யாரையெல்லாம் கண்ணோடு கண் அவர் பார்க்கிறாரோ அவர்களின் மரண நாள், அஜிதேஸிற்கு தெரிந்து விடுகிறது.
அப்படியாக, நாயகி ஸ்ரீ ஸ்வேதாவின் கண்களை கண்ட அஜிதேஸ், ஸ்ரீ ஸ்வேதா இன்னும் 7 நாட்களில் இறந்துவிடுவார் என்பதை அறிகிறார்.
இதனால், மன முடைந்த அவர், அந்த 7 நாட்களில் நாயகி ஸ்ரீ ஸ்வேதாவை காப்பாற்ற எண்ணவெல்லாம் செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் அஜிதேஜ் அறிமுக நடிகராக இருந்தாலும், அதற்கான அடையாளமே தெரியாத வகையில், அறிமுக நடிகர் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீஸ்வேதாவுக்கு வழக்கமான நாயகி கதாபாத்திரம் கொஞ்ச நேரம்தான்.அதன்பின் மிக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.அதற்கேற்ப நடித்து ஆச்சரியப்படுத்துகிறார்.
அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன் உள்ளிட்ட நடிகர்களும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் இரகம்.பின்னணி இசை மூலம் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பயங்கரம் மேலும் பயங்கரமாகத் தெரிகிறது.
கோபிநாத் துரையின் ஒளிப்பதிவு நன்று.குறிப்பாக கதையின் மையமான நாயகியின் தோற்ற மாற்றம் சரியாகப் பதிவாகியிருப்பதற்கு அவருடைய உழைப்பே காரணம்.
படத்தொகுப்பாளர் முத்தமிழன் இராமுவின் முயற்சியால் படம் சோர்வின்றி நகர்ந்து செல்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சுந்தர்.நாட்டில் இன்று அதிகமாகப் பேசப்படும் தெருநாய்க்கடிச் சிக்கல் மற்றும் அதன் விளைவுகளை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அதை நேரடியாகச் சொன்னால் பரப்புரையாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்து வானியல் ஆய்வு, அதன் தவறான விளைவு, அளவற்ற காதல் ஆகியனவற்றைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு சொல்லியிருப்பதன் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்.
ரேட்டிங் 3/5