
CHENNAI:
படம்: இட்லி கடை
நடிப்பு: தனுஷ், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரகனி, இளவரசன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே
தயாரிப்பு: ஆகாஷ் பாஸ்கரன் , தனுஷ்
நிறுவனம்: டவ்ன் பிச்சர்ஸ், ஒன்டர் பார் பிலிம்ஸ் (Dawn Pictures & Wunderbar Films Pvt Ltd)
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: கிரண் கௌஷிக்
இயக்கம்: தனுஷ்
ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் நிறுவனம்
பிஆர்ஓ: ரியாஸ் கே அகமத், சதீஷ் (AIM)
தேனி அருகே ஒரு அழகிய கிராமத்தில் தனது மனைவி கீதா கைலாசம் மற்றும் மகனோடு (சிறுவயது தனுஷ்) சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ராஜ்கிரண்.
அந்த கிராமத்தில் ஒரு இட்லி கடையை நடத்தி வருகிறார். கீற்றால் நேயப்பட்ட அந்த கடையை தனது உயிராக எண்ணி வருகிறார் ராஜ்கிரண். ஆட்டுரலில் அரைத்து எடுக்கப்பட்ட மாவில் ஊற்றப்பட்ட இட்லியை உண்ணும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியைக் கண்டு இன்பமுறும் குணம் கொண்டவர் ராஜ்கிரண்.
சிறுவயதிலிருந்தே அதே இட்லி கடையில் வளர்கிறார் தனுஷ். கேட்ரிங் படித்து பேங்காக் சென்று, அங்கு பெரும் கோடீஸ்வரரான சத்யராஜிடம் வேலைக்குச் செல்கிறார் தனுஷ்.
சத்யராஜுக்கு அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே இருவரும் மகன் மற்றும் மகளாக வருகின்றனர். ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்க, காதலுக்கு சத்யராஜூம் சம்மதம் தெரிவித்து விடுகிறார்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. தனது அப்பா பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டு இருக்கும் கதாபாத்திரமாக வருகிறார் அருண் விஜய்.
அதுமட்டுமல்லாமல், தொட்டதுக்கெல்லாம் சத்யராஜ் தனுஷோடு கம்பேர் செய்து பேசுவதால் தனுஷை சுத்தமாக பிடிக்காமல் போய்விடுகிறது அருண் விஜய்க்கு.
இந்நிலையில், ராஜ்கிரண் இறந்துவிட்டதாக தனுஷுக்கு செய்தி வர, உடனடியாக கிளம்பி ஊருக்கு வருகிறார் தனுஷ். தந்தையை அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே தனது தாயையும் இழந்துவிடுகிறார் தனுஷ்.தனிமையில் இருக்கும் தனுஷுக்கு பள்ளி தோழியாக இருந்த நித்யா மேனன் உடனாக நிற்கிறார். தனது அப்பா வாழ்ந்த வீட்டையும் இட்லி கடையையும் விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே இருக்க நினைத்து ஷாலினி பாண்டேவுடனான திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுகிறார் தனுஷ்.
தனது தந்தைக்கும் தங்கைக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக எண்ணி, தனுஷை பழி வாங்க அவரைத் தேடி அவரின் கிராமத்திற்கு வருகிறார் அருண் விஜய். அதன்பிறகு நடக்கும் கதையே படத்தின்மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், பாங்காக்கில் கோட் சூட் போட்டுக் கொண்டு வலம் வரும்போதும், கிராமத்தில் வேட்டி சட்டையுடன் நடமாடும்போதும் கெத்து காட்டியிருக்கிறார்.மனிதர்களின் ஆழமன உணர்வுகளை கிளறி வெளியே எடுக்கக் கூடிய வேடமேற்று அதற்குத் தக்க நடித்து நினைத்ததைச் சாதித்திருக்கிறார்.
கிராமத்து நாயகியாக நித்யாமேனன், இவர் நிஜமான கிராமத்துப் பெண் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் அனைவரும் நம்பிவிடுவார்கள்.அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நவநாகரிக ஷாலினிபாண்டே நடிப்பிலும் மிளிர்கிறார்.
தனுஷின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண் படத்தின் ஆதாரம்.அவர் மூலம் சொல்லப்படும் கருத்துகள் அவர் சொல்வதாலேயே பலம் பெறுகின்றன.
தனுஷின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசமும் ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
தொழிலதிபராக இருக்கும் சத்யராஜ் இயல்பாகப் பொருந்துகிறார்.அவருடைய மகனாக வருகிறார் அருண் விஜய்.தனுஷுக்கு
வில்லன்.நடிப்பில் அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.இடைவேளைக் காட்சி கூடுதலாக இரசிக்க வைக்கிறது.
பார்த்திபன், சமுத்திரக்கனி ஆகியோருக்கும் குறிப்பிடத்தக்க வேடங்கள்.சரியாகச் செய்திருக்கிறார்கள்.
கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவில் காட்சிகளில் நேர்த்தி.வெளிநாட்டு நகரம், தேனி கிராமம் ஆகியனனவற்றை அழகுகளோடு பதிவாகியிருக்கின்றன.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கலாம்.பின்னணி இசையில் திரைக்கதைக்கு வலுச் சேர்த்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கவும் செய்திருக்கிறார் தனுஷ்.சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? என்கிற பாடலுக்குத் திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார்.இடைவேளை வரை விறுவிறுப்பாகச் செல்கிறது படம்.இரண்டாம் பாதியில் வேகம் குறைந்திருப்பது பலவீனம்.அங்கும் சில உணர்வுப்பூர்வமான காட்சிகளை வைத்து சமன் செய்ய முயன்றிருக்கிறார். உணவுக்கடை என்பது தொழிலன்று சேவை, மண்ணும் மண்மணம் மாறா உறவுகளும் பெரும் பணத்தைவிட மிக முக்கியம் என்பன உட்பட பல நற்கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.
ரேட்டிங் 4/5