‘காந்தாரா – அத்தியாயம் 1’ திரைப்பட விமர்சனம்!

142

 

CHENNAI:

படம்: காந்தாரா சேப்டர் 1

நடிப்பு: ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா

தயாரிப்பு: ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர்

இசை: அஜ்னீஸ் லோக்நாத்

ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப்

இயக்கம்: ரிஷப் ஷெட்டி

பி ஆர் ஓ: யுவராஜ்.

முந்தைய பாகத்திலிருந்து பல நூறு வருடங்கள் கதை பின்னோக்கி நகர்கிறது. காந்தாரா பகுதி அடர்ந்த வனப்பகுதியால் ஆனது. அங்கு காட்டுப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். தங்களது கடவுளையும், வனத்தையும் பாதுகாத்து வருகின்றனர் இவர்கள்.

இந்த மக்களில் ஒருவராக வருகிறார் ரிஷப் ஷெட்டி. சிவனின் தோட்டமான அந்த காந்தாராவைக் கைப்பற்றத் துடிக்கிறார் பக்கத்து நாட்டு அரசன் குல்ஷன் தேவய்யா. ஒரு முறை அங்கு சென்று, காந்தாரா மக்களால் அடித்து விரட்டப்படுகிறார் குல்ஷன்.

இதனைத் தொடர்ந்து குல்ஷன் நாட்டிற்குள் செல்லும், ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வியாபாரம் செய்யத் துவங்குகின்றனர். இதனால், வெறுப்படையும் குல்ஷன் காந்தாராவை காலி பண்ண, பெரும் படையோடு அங்கு செல்கிறார்.

அதன்பிறகு காந்தாராவிற்கு என்ன நடந்தது.? காந்தாராவை எதிரிகளிடம் இருந்து ரிஷப் ஷெட்டி எப்படி காப்பாற்றினார.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி, பழங்குடியினர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். “ஓ…ஓ….” என்று சத்தம் போட்டு சாமியாடும் காட்சிகளில் தனது நடிப்பு மூலம் அசத்தியிருப்பவர்,  உடல் மொழி மற்றும் கண்களில் காட்டும் கோபம் ஆகியவற்றை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி அனல் தெறிக்க நடித்திருக்கிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் அழகாக இருக்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக வருபவர், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து மிரட்டுகிறார்.

 

அரசராக நடித்திருக்கும் ஜெயராம் மற்றும் அவரது மகனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர் இப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

அஜ்னீஸ் லோக்நாத் இசைதான் படத்தையும், அரங்கையும் ஆட்டிப்படைக்கிறது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் ஒரு பெரும் டீமுடன் இந்த படத்திற்கு கேமரா பணிகளை கவனித்திருப்பது மற்றும் கணினி வரைகலைக் காட்சிகளும் படத்தைப் பெரிதாகக் காட்டுகின்றன.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். அவரது காந்தாரா திரைப்படத்தில் இருந்த உணர்வுப்பூர்வமான கதை இந்த காந்தாராவில் மிஸ்ஸிங். வனப்பகுதியை கைப்பற்ற முயற்சிக்கும் அரசர், அவரை எதிர்த்து போராடும் பழங்குடியின மக்கள், இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை, ஆன்மீகத்தோடு இணைத்து, கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் பிரமாண்டமான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் படம் பிரமாண்டமாக இருப்பதும், சண்டைக்காட்சிகள் படத்தை ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, பழைய பாணியிலான காட்சிகள்  படத்தை பலவீனமாக்கி விடுகிறது.  குறிப்பாக படத்தின் நீளம் பார்வையாளர்களை சோர்வடைய செய்து விடுகிறது.

 

ரேட்டிங் 3.9/5