‘டீசல்’ திரைப்பட விமர்சனம்!

119

 

 

CHENNAI:

படம்: டீசல்

நடிப்பு: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, காளி வெங்கட் , விவேக் பிரசன்னா, சச்சின் கெதக்கெர், ஜாகிர் உசேன், தங்கதுரை, போஸ் வெங்கட், ரமேஷ் திலக், மாறன், கே பி ஒய் தீனா, அபூர்வா சிங்

தயாரிப்பு: தேவராஜுலு மார்க்கண்டேயன்

இசை: திபு நினன் தாமஸ்

ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன், எம் எஸ் பிரபு

இயக்கம்: சண்முகம் முத்துசாமி

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்.

வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட இராட்சத குழாய்களால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடியும் பலன் இல்லாததால், அதே கச்சா எண்ணெயைத் திருடுவதைத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் மாஃபியாவை வளர்த்துவிடும் சில பெரும் முதலாளிகளின் சதித் திட்டத்தால், வட சென்னை முழுவதும் உள்ள மீனவ கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது.இதை உணர்ந்து அதை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் நாயகன் ஹரீஷ் கல்யாண். அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் “டீசல்” படத்தின் மீதிக் கதை.

மீனவ இளைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் ஹரீஷ் கல்யாண்.காதல் நாயகனாக அறியப்பட்ட அவர் இந்தப்படத்தில் சண்டைக்காரராகவும் மாறியிருக்கிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் அதற்கான உடல் மொழி உள்ளிட்ட அனைத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, படம் முழுவதும் பயணித்து திரைக்கதையில் முக்கிய பங்காற்றுகிறார்.  அதிகம் நடிக்க கூடிய வாய்ப்பு இல்லை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாகவே செய்திருக்கிறார்.

 

வினய், சாய் குமார், போஸ் வெங்கட், அனன்யா, ரமேஷ் திலக், கருணாஸ், சச்சின் கடேகர், ஷாகீர் உசேன் என்று படம் முழுவதும் நிறைந்திருக்கும் முக்கிய நட்சத்திரங்களின் திரை இருப்பு, திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

மாறன், தங்கதுரை ஆகியோரது டைமிங் காமெடி சிரிக்க வைக்கிறது. கேபிஒய் தீனா நாயகனின் நண்பராக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

 

திபு நினன் தாமஸின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மிகப்பெரிய ஹிட்டான கானா பாடலை படமாக்கிய விதம் சற்று ஏமாற்றம். பின்னணி இசை அளவு.

 

ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரது ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சண்முகம் முத்துசாமி, தனித்துவமான கதைக்களத்துடன்,வட சென்னையில் உள்ள மீனவ கிராமங்களும், மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சண்முகம் முத்துசாமி, அது வெறும் மீனவர்களுக்கான பிரச்சனை மட்டும் அல்ல, தமிழக மக்களுக்கான பிரச்சனை என்பதை விவரித்த விதம், அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளை திரை மொழியில் சொன்ன விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5