
CHENNAI:
படம்: மெட்ராஸ் மாஃபியா கம்பெனி
நடிப்பு: ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனிஷ் காந்த், ராம்ஸ், ஆதித்யா
தயாரிப்பு: வி சுகந்தி அண்ணாதுரை
இசை: ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு: அசோக் ராஜ்
இயக்கம்: ஏ எஸ் முகுந்தன்
பிஆர்ஓ: சதீஷ் S2 மீடியா.
ராயபுரம் பிரபல தாதா பூங்காவனம் என்கிற ஆனந்தராஜ் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏஜெண்டுகளை நியமித்து ஐடி கம்பெனி போல் ரவுடி ஏஜென்சி நடத்தி வருகிறார். அந்தந்த ஏரியாவில் ரவுடிகளாக இருப்பவர்களை வைத்து தனக்கு வரும் அசைன்மென்ட்களை கொடுத்து கொலை செய்கிறார். ஆனால் ஆனந்த்ராஜை நேரம் பார்த்து தீர்த்துக்கட்ட அவரது கூட்டத்தில் உள்ளவர்களே திட்டமிடுகிறார்கள். குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், மீது எநத ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை அதிகாரி சம்யுக்தா ஈடுபடுகிறார். தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர் ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போட்டிருக்கும் சூழலில் ரெளடிகளின் எழுச்சியை அழிக்கவும் ஆனந்த்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவும் ஈடுபட்ட சம்யுக்தா குற்ற செயல்களை கச்சிதமாக செயல்படுத்தி யாராலும் வீழ்த்த முடியாத ரவுடியாக வலம் வரும் அவரை சிறையில் அடைத்தாரா? இந்த இரண்டு தரப்பினரிடம் இருந்து ஆனந்தராஜ் தப்பித்து தனது ரவுடி சாம்ராஜ்யத்தை தொடர்ந்தாரா? என்பதுதான் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் மீதிக் கதை.
வில்லனாக படம் முழுக்க ஆக்கிரமித்து வைத்திருக்கிறார் ஆனந்த்ராஜ். தனக்கே உரித்தான காமெடியை ஆங்காங்கே தூவி விட்டுச் சென்றிருக்கிறார். கதையின் நாயகனாகவே வந்து வில்லத்தனத்தில் தனது அனுபவத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். நன்றாகவே கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் ஆனந்த்ராஜ்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சக்யுக்தா, காக்கி சீறுடையில் கம்பீரமாக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருப்பவர், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
ஆனந்த்ராஜுக்கு மனைவி தீபா துணைவி லயா என இருவருமே தங்களது கேரக்டர்களை தெளிவாக செய்து முடித்திருக்கின்றனர்.
முனீஸ்காந்தின் அட்ராசிட்டி படத்திற்கு சற்று கைகொடுத்திருக்கிறது.கொண்டித்தோ
ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யா, அளவான அழகு மற்றும் நடிப்பு மூலம் கவர்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பின்னணி இசை நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ் கேமரா ஒரு பிளாக் காமெடி படத்தை பளிச் காமெடியாக காட்டி இருக்கிறது.
இயக்குனர் ஏ எஸ் முகுந்தன் ரவுடியிச கதையாக இருந்தாலும் ரத்தம் குத்து வெட்டு என்று தலை சுற்ற வைக்காமல் குடும்ப செண்டிமெண்ட், மகள் செண்டிமெண்ட் கலந்து ஒரு தாதா குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை காமெடியுடன் இப்படத்தில் கதை சொல்லி இருந்தாலும் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் எல்லாம் சேர்க்கப்பட்ட மிகையான கலவையாக படம் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.
மொத்தத்தில், ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.