
CHENNAI:
படம்: கும்கி 2
நடிப்பு: மதி, அர்ஜுன் தாஸ், ஷிரிட்டா ராவ் , ஹரிஷ் பாரேடி, ஸ்ரீநாத், நடக்கள் உன்னிகிருஷ்ணன், திருச்செல்வம், கொட்டச்சி, சூசன் ஜார்ஜ்,
தயாரிப்பு: துவால் காடா
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு,: சுகுமார்
இயக்கம்: பிரபு சாலமன்
பிஆர்ஓ: யுவராஜ்.
மலை கிராமத்தில் வாழும் நாயகன் மதி, சிறு வயதில் வழி தவறி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறார். அதில் இருந்து அந்த குட்டி யானை மதியை சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார். யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது. யானையை தேடி அலையும் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்நிலை மறந்தவராக வலம் வருகிறார்.
இதற்கிடையே ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் மதி, 5 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது மாயமான யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து யானையை தேடி செல்லும் மதிக்கு அவரது யானை கிடைத்ததா ?, யானை மாயமானதன் பின்னணி என்ன ? என்பது தான் ‘கும்கி 2’.
நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் மதி. திரைப்பட கதாநாயகனுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார்.அன்பு, பாசம், கோபம், வலி ஆகிய உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தாவிட்டால் எல்லாமே கேலிக்குள்ளாகும் என்கிற ஆபத்து நிறைந்த வேடத்தை நிறைவாகச் செய்து தேர்சசி மதிப்பெண் பெறுகிறார்.
சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் நாயகி ஷ்ரிதா ராவ்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி ஆகியோர் நிறைவு.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கலாம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்தான் படத்தின் நாயகன் எனலாம். அவருடைய உழைப்பில் விரியும் காட்சிகள் பரவச அனுபவம்.
படத்தொகுப்பாளர் புவன் படம் சலிப்பின்றி நகர வேண்டுமென பாடுபட்டிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பிரபு சாலமன், குறைவற்ற அன்பே அளவற்ற இன்பம் எனும் கருத்தைச் சொன்னதோடு தமிழ்த் திரையுலகுக்கு ஒரு கதாநாயகனையும் கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5