’மிடில் கிளாஸ்’ திரைப்பட விமர்சனம்!

101

 

CHENNAI:

படம் :மிடில் கிளாஸ்

நடிப்பு: முனிஷ் காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, மாளவிகா

தயாரிப்பு: தேவ், கே. வி.துரை

இசை: பிரணவ் முனிராஜ்

ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன்

இயக்கம்: கிஷோர் முத்துராஜ்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா (D’ One), அப்துல் நாசர்

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் பற்றாக்குறையே மிக முக்கியமான காரணமாக இருக்கும். பணம் இருந்தால் நடுத்தரக் குடும்பத்தின் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடலாம். அப்படிப்பட்ட நடுத்தரக் குடும்ப வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் முனீஷ்காந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு, தங்களது பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், தனது அஜாரக்கிரதையால் முனீஷ்காந்த், அந்த வாய்ப்பை இழந்து விடுகிறார். இதனால், குடும்பத்தில் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. இழந்த வாய்ப்பை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் முனீஷ்காந்த் அதில் வெற்றி பெற்றாரா ?, இல்லையா ? என்பதை, ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையாகவும், சமூகத்தின் ஒரு பகுதியாகவும் சொல்வது தான் ‘மிடில் கிளாஸ்’.

இந்த கதைக்கு இவர் தான் பொருத்தம் என்று அறிந்து, முனீஷ்காந்தை சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். கார்ல் மார்க்ஸ் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் முனீஷ்காந்த். ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தன் என்ன மாதிரியான சவால்களை சமாளிப்பார் என்பதை வெளிச்சமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் முனீஷ்காந்த். அடிக்கடி வரும் சண்டைகள், அதனை சமாளிக்கும் போக்கு என கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார் முனீஷ்காந்த்.

ஆரம்பத்தில் கதாபாத்திரத்தினை ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் போக போக, தனது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்து முடித்துவிட்டார் விஜயலக்‌ஷ்மி. அதற்காக கட்டிய கணவனை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துவார்களா என்ற கேள்வியும் எழ வைத்துவிட்டார் விஜயலக்‌ஷ்மி. அதுவரை ஒரு மாதிரியான கேரக்டரை கொடுத்து விட்டு, க்ளைமாக்ஸில் மட்டும் கொஞ்சம் அமைதிபடுத்தினால் எப்படி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

மேலும் படத்தில் நடித்த, காளி வெங்கட், கோடாங்கி வடிவேலு, குரேஷி, ராதாரவி, வேலா ராமமூர்த்தி என படத்தில் தோன்றிய அனைவருமே தங்களது கேரக்டர்களை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் பிரனவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் கேமரா நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை எந்தவித கலப்படமும் இன்றி நம் கண் முன் நிறுத்தி இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் முத்துராமலிங்கம், நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை வைத்து கம்யூனிசம் பேசியிருக்கிறார். தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், அதை பிறர்க்கு பகிர்ந்தளித்து வாழ்வதே நிறைவான வாழ்க்கை, என்ற கருத்தை பல குறியீடுகள் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, எளிமையான முறையில் அனைத்து தரப்பினருக்கும் புரிய வைத்திருக்கிறார்.மிடில் கிளாஸ் வாழ்க்கையை திரையில் கொண்டு வந்தததில் இயக்குனர் வென்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘மிடில் கிளாஸ்’ படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் 3.5/5