‘இரவின் விழிகள்’ திரைப்பட விமர்சனம்!

98

 

சென்னை:

படம்: இரவின் விழிகள்

நடிப்பு: மகேந்திரா, கர்ணா, நீமா ராய், ரேஷ்மா, நிழல்கள் ரவி, ரகுபதி, சிக்கல் ராஜேஷ், கருப்பு, சிசர் மனோகர், மாரிமுத்து, சரண் ராஜ், ரங்கராஜ், ஏன்சி சிந்து, கயல், அமிதா

தயாரிப்பு: பி.மகேந்திரன்

இசை: ஏ எம் அசார்

ஒளிப்பதிவு: எல் கே ஆண்டனி

இயக்கம்: சிக்கல் ராஜேஷ்
:
பி ஆர் ஓ: A. ஜான்

தற்போது நமது நாட்டில் யூடியூப் தளங்கள் அதிகமாகிவிட்டன.அப்படிச் சமூக ஊடகங்களில் அளவுக்கு மீறியும் வெறுப்பேற்றும் வகையிலும் வரம்பு மீறியும் சுய தம்பட்டம் அடித்தும் , கண்ட கண்ட பதிவுகளைப் போட்டும் மக்களை வெறுப்பேற்றுகிறார்கள்.பணத்திற்காகவும் ,பார்வைகள் வரவேண்டும் என்பதற்காகவும் எல்லை மீறி ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்களைப் பட்டியல் போட்டுக் கொண்டு வரிசையாகப் போட்டுத் தள்ளுகிறார் ஒரு  முகமூடி போட்ட மர்ம மனிதர்.கொலையாளியைத் தேடி போலீஸ் மோப்பம் பிடித்துத் துப்புத் துலக்குகிறது. அவர் யார்? அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்பதைச் சொல்வதே
‘இரவின் விழிகள்’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹேந்திரன், அறிமுக நடிகர் என்றாலும் அதற்கான அடையாளங்கள் தெரியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார்.

 

கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தனது நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவை ஞாபகப்படுத்தினாலும், திரைக்கதைக்கு அவரது நடிப்பு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணப்பட்டிருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். “கருப்பு…” பாடல் வீரியம் மிக்கதாகவும், அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் குஷிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. பின்னணி இசையிலும் குறையில்லை.

 

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் காட்சிகளை பளிச்சென்று படமாக்கி படத்தின் தரத்தை அதிகரிக்க செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார்.

 

சோசியல் மீடியா பிரபலங்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, அந்த பட்டியலில் நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பது என்று திரைக்கதை பரபரப்பாக பயணித்தாலும், கிளைமாக்ஸில் அண்ணன் – தங்கை பாசம் மூலம் செண்டிமெண்ட் காட்சிகளால் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறார்.

‘இரவின் விழிகள்’ –யூடியூபர்களுக்கு ஒரு பாடம்.c

 

ரேட்டிங் 3/5