
CHENNAI:
படம்: ஒண்டி முனியும் நல்லபாடனும்
நடிப்பு: பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், சித்ரா, முருகன், சேதுபதி, விஜயன், விகடன்
தயாரிப்பு:கே கருப்புசாமி
இசை: என் டி ஆர்
ஒளிப்பதிவு: விமல்
இயக்கம்: சுகவனம்
பிஆர்ஓ: நிகில் முருகன்.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி பரோட்டா முருகேசன், தனது மகள் மற்றும் மகனுடன் வாழ்கிறார். இந்நிலையில் தனது இளம் மகனாக விஜயன் உயிருக்கு ஆபத்தில் இருக்கும் போது உள்ளூர் தெய்வமான ஒண்டிமுனியிடம் மகன் குணமடைந்தால் ஆட்டை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். சிறுவன் அதிசயமாக உயிர் பிழைக்கும்போது, தெய்வத்திற்கு பலி கொடுக்க ஆட்டை வளர்க்கிறார். அந்த ஆட்டுக்குட்டி வளர்ந்து பெரிய கடாவாகிறது .
அதைப் பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்ற வேண்டிய தருணம் வருகிறது. ஆனால் அந்தக் கோவில் இரண்டு பண்ணாடிகளின் சச்சரவால் எந்த வழிபாடுமற்றுக் கிடக்கிறது. அந்த இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் நிகழ்வில் பங்கேற்க வைக்க பரோட்டா முருகேசன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையே, பரோட்டா முருகேசனின் மகள் சித்ராவுக்கு பேசிய நகை போடாததால் மாமியார் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார். மறுபக்கம், அவரது மகன் தன் காதலுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்கு ஆட்டு கிடாயை விற்க முடிவு செய்கிறார். இத்தகைய குடும்பப் பிரச்சனைகள், ஊர் அரசியல், நம்பிக்கைகள் என பல சிக்கல்களுக்கு நடுவில், பரோட்டா முருகேசன், ஒண்டிமுனி தெய்வத்திற்கு ஆட்டை பலி கொடுத்து தன் வேண்டுதலை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தின் மீதிக் கதை.
ரத்தமும் சதையுமாக வாழ்ந்து வரும் மனிதர்கள் வசிக்கும் அந்த ஊருக்குள் நம்மை அழைத்துச் சென்று கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து காட்சிகளைக் கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர்.
இந்தப் படம் வணிக ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள படம் அல்ல .இந்த படத்தின் வெற்றி தோல்வி கணிக்க முடியாத ஒன்று. ஆனால் ஒரு எதார்த்தமான படப்பதிவு என்பதை இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும்.வணிக சமரசங்களுக்கு உட்படாமல் வாழ்க்கைப் பதிவாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. அப்படிப்பட்ட அனுபவத்தை நாடும் ரசிகர்களுக்கு இது திருப்தியைத் தரும்.இப்படிப்பட்ட முயற்சி எடுத்த இயக்குநர் சுகவனம் அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.
ரேட்டிங் 3/5.