’நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்பட விமர்சனம்!

92

 

 

CHENNAI:

படம்: நிர்வாகம் பொறுப்பல்ல

நடிப்பு: எஸ் கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன்

தயாரிப்பு: டி ராதாகிருஷ்ணன்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு: என் எஸ் ராஜேஷ்

இயக்கம்: எஸ் கார்த்தீஸ்வரன்

பிஆர்ஓ: நிகில் முருகன்.

நமது நாட்டில் நடக்கும் மோசடிகள் பலவிதம்.அதுவும் வரவு, செலவு,வர்த்தகம் ஆகிய எல்லாம் இணையதளம் வாயிலாக நடக்கிற இக்காலகட்டத்தில் அதிலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன.அவற்றில் முக்கியமான நான்கு வித மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் படம்தான் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’

பல அடுக்குகள் கொண்ட மோசடிகளால் கோடிக்கணக்கில் பணம் குவிப்பவர் கார்த்தீஸ்வரன். ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதித்த பின் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்படும் தருணத்தில் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியின் கண்ணில் சிக்கிக் கொள்கிறார்.

போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? அவர் செய்த மோசடிகள் என்ன? என்பதுதான்   ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் மீதிக் கதை.


 எஸ்.கார்த்தீஸ்வரன், கதாநாயகனாகவும் இயக்குநராகவும் இரட்டை பொறுப்பை ஏற்றிருக்கிறார். வெளிப்படையாக அப்பாவியான தோற்றம் கொண்ட அவரது கதாபாத்திரம், திரையில் வெளிப்படும் மோசடிகளில் அதிர்ச்சியை உருவாக்குகிறது. பல கெட்டப்புகளில் அவர் தோன்றினாலும், சில வேடங்கள் கதாபாத்திரத்துக்கான நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது. ஒரு நடிகராக நடிப்பு, நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்.

 

கார்த்தீஸ்வரனின் மோசடி குழு உறுப்பினராக நடித்திருக்கும் ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என அனைவரும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ், காட்சிகளை கலர்புல்லாகவும், தரமாகவும் படமாக்கியிருக்கிறார்.

 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை அளவுக்கு அதிகமாக காதை கிழிக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன், பல்வேறு மோசடிகளைக் காட்டி, அதை எப்படிச் செய்கிறார்கள்? என்பதை மட்டும் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு நில்லாமல் அவற்றிலிருந்து சாமானியர்கள் எவ்வாறு தப்புவது? என்கிற பாடத்தையும் நடத்தியிருக்கிறார்.கையில் இருக்கும் கைபேசி மூலமே எல்லாவற்றையும் நிகழ்த்தலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.அவருடைய நடிப்பு, பட உருவாக்கம் ஆகியனவற்றில் சிற் சில குறைகள் இருப்பினும் அவர் சொல்லியிருக்கும் கருத்துகள் அப்படியே மக்களைச் சென்று சேருகிறது.

ரேட்டிங் 3/5.