
படம்: சாவீ
நடிப்பு: உதயா தீபா, ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே சேஷாத்திரி
தயாரிப்பு: ஆண்டன் அஜித் புரடக்சன்
இசை: சரண் ராகவன், வி ஜே ரகுராம்
ஒளிப்பதிவு: பூபதி வெங்கடாசலம்
இயக்கம்: ஆண்டன் அஜித்
பிஆர்ஓ: ஆர்.மணி மதன்.
‘சாவு வீடு’ என்ற தலைப்பில் உருவான இந்தப் படம் தலைப்பு ஒரு மாதிரியாக எதிர்மறைத் தன்மை கொண்டதாக இருப்பதாகப் பலரும் கூறவே திடீரென்று ‘சாவீ’ என்று மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
‘சாவு வீட்டில் பிணம் காணாமல் போனால் எப்படி இருக்கும்?’ என்கிற கற்பனையில் இது உருவாகி இருக்கிறது.எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.ஆனால் சாவு ,பிணம், பேய் என்று பயமுறுத்தாமல் நகைச்சுவையாக எடுத்துள்ளார்கள்.
கதாநாயகன் உதயா தீப், தனது மாமன் மகள் கவிதா சுரேஷைக் காதலிக்கிறார். மாமன் மகள் தானே என்ன பிரச்சினை பெரிதாக வரப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால் , கவிதாவின் தந்தை பிரேம் கே சேஷாத்திரி இந்தக் காதலை ஏற்க மறுத்து முட்டுக்கட்டையாக இருக்கிறார்.இறந்து போன தனது அப்பாவை சேஷாத்ரிதான் கொன்றார் என்று உதயாவுக்குள் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டே இருக்கிறது . இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் சேஷாத்திரி ஒரு விபத்தின் மூலம் இறந்து விடுகிறார்.இறுதிச் சடங்கு களுக்காக வீட்டிற்கு உடலைக் கொண்டு வருகின்றனர்.
துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது. குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் பின்னணி மற்றும் காணாமல் போன பிணம் என்ன ஆனது? அந்த உடலை எடுத்தது யார்? காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?என்பது தான் பிளாக் காமெடி ஜானரில் சொல்வதே ‘சாவீ’.
நாயகனாக நடித்திருக்கும் உதய தீப், வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில், கடினமான சூழல்நிலைகளை அசால்டாக கடந்து போகும் பருவத்தை பக்குவமாக கையாண்டு சிரிக்க வைக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, விசாரணை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் பியூட்டியாக இருக்கிறது.
யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே.சேஷாத்ரி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் இருவரது பின்னணி இசையும் அளவு.
ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம் குறைவான விளக்குகளை பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருந்தாலும், சில இடங்களில் காட்சிகள் மங்கலாகி விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஆண்டனி அஜித், பெரிய அறிமுகம் இல்லாத முகங்களை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு ஒரு டார்க் காமெடி படத்தை இயக்கியிருப்பது ஓகேதான். ஆனால் திரைக்கதையில் இன்னும் சுவாரசியத்தை சேர்த்து காமெடிக்கு முக்கியத்துவம் தந்திருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். ஆனால், பல இடங்களில் காமெடிகள் சரவெடியாக நன்றாகவே அனைவரையும் சிரிக்க வைத்து இருக்கிறது.
ரேட்டிங் 2.5/5.