‘அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்!

117

 

CHENNAI:

படம்: அங்கம்மாள்

நடிப்பு: கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லை அரசி, தென்றல் ரகுநாதன்

தயாரிப்பு:
கார்த்திகேயன் எஸ், ப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல்

இசை: முகமது  மக்பூல்  மன்சூர்

ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்

கதை: பெருமாள் முருகன்

இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா.

இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான பெண்ணாக இருக்கிறார். இந்த சூழலில் நகரத்தில் வேலை பார்த்து வரும் இளைய மகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்கிறார்கள். திருமணமும் கை கூடி வருகிறது.அந்தக் காலப் பெண்கள் போல ரவிக்கை அணியாத பெண்மணியாக தனது அம்மா இருப்பதால், அவரது மனதை எப்படியாவது மாற்றி ரவிக்கை அணிய வைக்கவேண்டும் என்று அவருடைய மகன்கள் போராடுகின்றனர். இறுதியில் தனது மகனுக்காக ரவிக்கை அணியச் சம்மதிக்கிறார்  கீதா கைலாசம்.  ஆனாலும் அதை ஊர் வேறு விதமாகப் பார்க்க,அவள் கேலியாக உணர்ந்து மனம் மாறுகிறாள்.முடிவு என்ன என்பதுதான் ‘ அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீதிக் கதை .

அங்கம்மாள் பாத்திரத்திற்கு கீதா கைலாசம் அச்சுஅசலாகப் பொருந்தி இருக்கிறார். ஜாக்கெட் அணியாத வயதானவர்கள் செய்யும் சின்ன சின்ன குறும்புகள், குடும்ப பாரம், பொறுப்பு, அனைத்து வேலைகளிலும் முன்னாடி நிற்பது, கம்பீரம் என அக்கதாபாத்திரத்தின் வலுவை உணர்ந்து நடித்திருக்கிறார் கீதா கைலாசம்.

அங்கம்மாளின் மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி, அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றல், இளைய மகனாக நடித்திருக்கும் சரண், அவரது காதலியாக நடித்திருக்கும் முல்லையரசி, சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், சிறுமி யாஷ்மின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அங்கம்மாளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அன்ஜாய் சாமுவேலுக்கு மிகவும் நல்வாய்ப்பு.ஒளிப்பதிவாளர்கள் விரும்பும் வகையிலான கதைக்களம் அமைந்திருப்பதால் அவரும் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார் என்பது காட்சிகளில் தெரிகிறது.

இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை, காற்றும் பேசும் என்பதை நிரூபித்திருக்கிறது. பின்னணி இசை ஒலிப்பதே தெரியாதவாறு கதாபாத்திரங்களுடன் கதாபாத்திரமாக கலந்து பயணித்திருக்கிறது.

பெருமாள் முருகனின் சிறுகதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் விபின் ராதாகிருஷ்ணன், அங்கம்மாள் என்ற பெண்மணியின் வாழ்வியலை எதார்த்தமாக துணிச்சல்காரப் பெண்மணிகளுக்கு எடுத்துக்காட்டாய் அங்கம்மாள் வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார். இப்படத்தில் சில காட்சிகள் மெதுவாக நகர்வது போல தோன்றலாம்.அவை எதார்த்தமாக இருப்பதற்காக அப்படி உருவாக்கி இருப்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

ரேட்டிங் 3/5.