‘சிறை’ – திரைப்பட விமர்சனம்!

99

 

சென்னை:

விக்ரம் பிரபு ,எல். கே .அக்ஷய் குமார் ,அனிஷ்மா அனில் குமார், ஆனந்தா தம்பிராஜா,மூணாறு ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மூலக்கதை இயக்குநர் தமிழ்,திரைக்கதையை இயக்குநர் தமிழுடன் இணைந்து அமைத்துப் படத்தை  இயக்கியிருக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி.

ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்,இசை : ஜஸ்டின் பிரபாகரன்,படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு: ராகவன் சஞ்சீவி ஆடை வடிவமைப்பு: வர்ஷினி சங்கர்,நடன அமைப்பு: லீலாவதி குமார்,சண்டை அமைப்பு: பி.சி. ஸ்டண்ட்ஸ்,தயாரிப்பு நிர்வாகி: ஆர்.எஸ். வெங்கட், நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: அருண் கே, மணிகண்டன்,செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார்.

கொலைக் குற்றவாளியாகக் கருதப்படும் விசாரணைக் கைதி அப்துல் ரவூப் என்பவனை,கதிரவன் என்கிற தலைமைக் காவலர் உள்ளிட்ட காவலர் குழு வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு ஒரு பேருந்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்கிறது. கதிரவன் மிகுந்த எச்சரிக்கையுடன் அப்துலை அழைத்து செல்லும் போது, இரண்டு காவலர்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட குழப்பத்தில் பஸ்ஸில் அமர்ந்து இருக்கும் கைதி அப்துலுடன் காவலர்களின் துப்பாக்கி அவர்களின் உடைமைகளோடு பஸ் புறப்பட்டுச் சென்று விட பெரும் நெருக்கடியில் மூன்று காவலர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு செல்கின்றனர். அங்கே கைதி அப்துல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியும், நிம்மதியும் அடைகின்றனர்.இந்த சம்பவத்தால் கைதி அப்துல் மீது கதிரவனுக்கு இரக்கம் ஏற்படுகிறது.

மீண்டும் கைதி அப்துலை சிவகங்கைக்கு அழைத்துச்செல்லும் போது அவன் யாரை கொலை செய்தான் என்பதற்கான காரணத்தை கேட்கிறார். அப்துல் ஐந்து வருடங்களுக்கு முன் கலையரசியுடனான காதலால் (அனிஷ்மா அனில்குமார்) கிராமத்தில் ஏற்பட்ட மத எதிர்ப்பு, சலசலப்பு கைகலப்பில் முடிந்து எதிர்பாராத விதமாக கலையரசியின் தந்தை கிழே விழுந்து இறக்க நேரிட, இந்த கொலைப் பழிக்காக ஐந்து வருடங்களாக விசாரணை நடைபெறுவதாக அப்துல் கூறுகிறார். தன் காதலி கலையரசி தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது வந்து பார்த்து விட்டு போவார் என்றும், அதனால் இம்;முறை தன்னை கையில் விலங்கிடாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கதிரவனிடம் கெஞ்சுகிறார். இந்நிலையில் அப்துலின் கோரிக்கையை நிறைவேற்றும் கதிரவன் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது அப்துலிடம் ஒரு யோசனை சொல்கிறார். அதன்படி நடந்துகொண்டால் நீதிபதி அவனுடைய வழக்கை துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என்று சொல்கிறார். அப்துல் நீதிபதியிடம் என்ன சொன்னார்? தன் காதலி கலையரசியுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா?  என்பதுதான் ‘சிறை’ திரைப்படத்தின் மீதிக் கதை.

‘டாணாக் காரன்’படத்தில் பயிற்சிக் காவலராக நடித்த அதே விக்ரம் பிரபு தான் இதிலும் கதிரவன் பாத்திரமாக காக்கி சட்டை அணிந்துள்ளார். இருந்தாலும் அவரது நடிப்பு வேறு ஒரு தளத்துக்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே துறை ரீதியான விசாரணை வளையத்தில் நின்று கொண்டிருக்கும் விக்ரம் பிரபு பாத்திரம் அவரது மனசாட்சிப்படி , அதையும் மீறி மனிதாபிமானம் காட்ட முயலும் அவரது குணச்சித்திரம் நன்று. ஒரு அதிகாரி தன் கடமையை செய்யும் போது எதிர்கொள்ளும் அழுத்தம், பயம், கோபம், குற்ற உணர்வு – எல்லாவற்றையும் முகத்திலேயே கொண்டு வருகிறார் விக்ரம் பிரபு.

கைதி அப்துல்ரவூப்பாக நடித்திருக்கும் புதுநடிகர் அக்சய்குமார் மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.பல தோற்றங்கள் அதற்கேற்ற நடிப்பு என முதல்படத்திலேயே நல்ல பெயர் பெறுகிறார்.

அக்சய்குமாரின் காதலியாக நடித்திருக்கும் அனிஷ்மா அசத்தியிருக்கிறார்.அவருடைய அழகு, அழுகை ஆகியன அனைவரையும் கவரக்கூடியதாக அமைந்திருக்கிறது.

விக்ரம்பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் ஆனந்தாவும் கதாபாத்திரக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

காவலராக நடித்திருக்கும் மூணார் ரமேஷ்,  காதர் பாஷா என்கிற கதாபாத்திரத்தின் மூலம், முஸ்லிம் மக்களைப்பற்றி பேசும் வசனத்தினால் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.

அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கொடுமைக்கார கணவராக ரகு , காவலராக ஹரிஷங்கர் நாராயணன் மற்றும் பல போலீஸ் துணைக் கதாபாத்திரங்கள் படத்திற்கு உறுதுணையாக இருந்து வழி நடத்தி செல்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் கதைக்களத்திற்கு ஏற்றவாறு காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருப்பதை பாராட்ட வேண்டும்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்.

காவல்துறையில் பணி புரிந்தவர் என்பதால் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதையை இயக்குநர் தமிழ் உருவாக்கியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, தெளிவான திரைக்கதை அமைப்பில் உணர்வுப்பூர்வமான காதல் கதையுடன் காவல்துறை பற்றிய விவரங்களை நுணுக்கமாக மிக  எதார்த்தமாக ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தி காவலர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் மன  உணர்வுகளை தெளிவாக புரிய வைத்த  இயக்குனருக்கு பாராட்டுக்கள் என்றாலும் மொத்தத்தில் இப்படத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் 4/5.